Published:Updated:

`மோடியின் திட்டங்கள் ஓகே; பணம்தான் கிடைக்கல!'-தமிழிசையிடம் குமுறிய பெண்

பி.ஆண்டனிராஜ்

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தும், அவற்றின் பலன்கள் நேரடியாகக் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக, கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையிடம் கிராமத்துப் பெண் ஒருவர் நேரடியாகக் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபைக் கூட்டத்தில் தமிழிசை
கிராம சபைக் கூட்டத்தில் தமிழிசை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள், குறைகளை எடுத்துக் கூறினார்கள். 'பனைகள் அதிகம் கொண்ட தங்கள் பகுதி மக்களுக்கு நிரந்தர வேலையும் பொருளாதார வளமும் கிடைக்கும் வகையில் மதுக்கடைகளை மூடிவிட்டு, பனைத் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என தமிழிசை சௌந்தரராஜனிடம் முறையிட்டனர்.

தமிழிசை
தமிழிசை

அப்போது பேசிய முதலியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ’’பிரதமர் மோடியின் திட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு திட்டத்திலும் பணத்தைப் பெறுவது என்பது சிக்கலானதாக இருக்கிறது. சில திட்டங்கள் குறித்தும் அதற்கான பணத்தைப் பெறுவது பற்றியும் எங்களைப்போன்ற கிராம மக்களுக்கு சரிவரத் தெரிவதில்லை’’ என்று குமுறலுடன் தெரிவித்தார். அதைப் பொறுமையாகக் கேட்ட தமிழிசை, ''அந்தக் குறைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், ’’தமிழக இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பல இடங்களிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டேசெல்கிறது. ஏரிகளில் ஆக்கிரமிப்பு நடப்பதால், சென்னைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மணல்கள் களவாடப்பட்டுள்ளதால், தண்ணீர் கிடைக்க சிரமம் ஏற்கிறது.

கனிமவளக் களவு என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது, சரிசெய்யப்பட வேண்டும்!
தமிழிசை சௌந்தரராஜன்

கனிமவளக் களவு என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது சரிசெய்யப்பட வேண்டும் . கனிம வளக் கொள்ளை தொடர்பாக இரு கட்சிகளும் ஆளுக்கு ஆள் குற்றம் சொன்னபோதிலும், இந்த விவகாரத்தில் தி.மு.க-வுக்கு அதிக பங்கு இருக்கிறது. தி.மு.க-வினர்தான் கனிமவள முறைகேடுகளில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இவை தடுக்கப்பட வேண்டும். கனிமவளம் குறித்த அக்கறை அனைவருக்கும் இருக்க வேண்டும். அவற்றை கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க, கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். நெல்லையின் முன்னாள் மேயர் மற்றும் குடும்பத்தினர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் தி.மு.க நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தமிழிசை
தமிழிசை

ஆடி மாதம் என்பதால், கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் காலங்களில் கோயிகளில் இரவு நேரங்களில் சிறப்புப் பூஜைகள், விழாக்காலக் கொண்டாட்டங்கள் நடைபெறும். ஆனால், இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் அனுமதி அளிக்காமல் காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துவருவது பக்தர்களை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. போலீஸார் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல் பாதுகாப்பு மட்டுமே அளிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.