Election bannerElection banner
Published:Updated:

ஹாட்ரிக் வாய்ப்பை இழந்த சி.வி.சண்முகம்... அமைச்சர் ரேஸில் பொன்முடி! - விழுப்புரம் மாவட்ட நிலவரம்

சி.வி.சண்முகம் - க.பொன்முடி
சி.வி.சண்முகம் - க.பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு இடங்களில் திமுக-வும், இரண்டு இடங்களில் அதிமுக மற்றும் ஒரு இடத்தில் பாமக-வும் வெற்றி பெற்றுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் ஆறு தொகுதிகளில் திமுக-வும், ஒரு தொகுதியில் விசிக-வும் போட்டியிட்டன. திமுக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் விழுப்புரத்தைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகளிலும் கடந்த முறை போட்டியிட்ட நபர்களையே மீண்டும் நிறுத்தியிருந்தது. அதிமுக கூட்டணி சார்பில், அதிமுக நான்கு இடங்களிலும், பாமக இரண்டு இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அதிமுக போட்டியிடும் நான்கு தொகுதிகளில், திண்டிவனம் தவிர்த்து மீதமுள்ள மூன்று தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட நபர்களையே வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தியது.

ஆர்.லட்சுமணன் - சி.வி.சண்முகம்
ஆர்.லட்சுமணன் - சி.வி.சண்முகம்

ஏழு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆறு மையங்களில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் தொகுதிகளில் திமுக-வும், திண்டிவனம், வானூர் தனித் தொகுதிகளில் அதிமுக-வும், மயிலம் தொகுதியில் பாமக-வும் வெற்றிபெற்றுள்ளன.

திண்டிவனம், மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். விழுப்புரம் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றியைப் பெற்றிருந்த க.பொன்முடியை, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தோற்கடித்து நடைமுறையை மாற்றிக்காட்டியவர் சி.வி.சண்முகம்.

தொடர்ந்து 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர், மூன்றாவது முறையாக விழுப்புரத்தில் ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், முன்னாளில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து திமுக-வில் இணைந்துள்ள ஆர்.லட்சுமணனிடம் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். விழுப்புரம் தொகுதி தோல்விக்குப் பிறகு 2016-ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் க.பொன்முடி. தற்போது இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.

க.பொன்முடி - VAT.கலிவரதன்
க.பொன்முடி - VAT.கலிவரதன்

எதிர்த்து போட்டியிட்ட விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதன், 51,300 வாக்குகள் (26.14%) மட்டுமே பெற்றார். க.பொன்முடி, 1,10,980 வாக்குகள் (56.60%) பெற்று 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். திமுக மாநில துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் க.பொன்முடி வெற்றிக்கு, தொகுதியில் பெருவாரியாக உள்ள அவருடைய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் ஆதரவே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, கலிவரதன் மீதுள்ள அதிருப்தியும், தேர்தல் பணியின்போது பாமக-வினரின் ஒத்துழைப்பின்மையும் பாஜக வேட்பாளர் கலிவரதனுக்கு எதிராக அமைந்தது. இது மேலும், பொன்முடிக்குச் சாதகமாக மாறியுள்ளது.

திமுக-வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் இவர் இம்முறை அமைச்சராகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 'வெற்றிக்குப் பிறகு, தன் சமூக மக்களுக்கு மட்டுமே அனைத்தையும் செய்வார்' எனும் குற்றச்சாட்டை இம்முறை மாற்றிக் காட்டுவாரா க.பொன்முடி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 62,261 வாக்குகளை பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொன்முடி
க.பொன்முடி
 கல்லூரிப் பேராசிரியர் டு அமைச்சர்... திருக்கோவிலுார் தொகுதியை வென்ற பொன்முடி! #TNelections2021

விழுப்புரம் மாவட்ட வெற்றி நிலவரம்:

திமுக

1).செஞ்சி (கே.எஸ்.மஸ்தான்),

2).விழுப்புரம் (ஆர்.லட்சுமணன்),

3).விக்கிரவாண்டி (நா.புகழேந்தி),

4).திருக்கோவிலூர் (க.பொன்முடி).

அதிமுக

1).வானூர் - தனி (சக்கரபாணி),

2).திண்டிவனம் - தனி (P.அர்ஜுனன்).

பாமக

1).மயிலம் (சி.சிவக்குமார்).

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு