விழுப்புரம் அருகேயுள்ள கிராமம்தான் மேல்பாதி. அங்கு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில், பட்டியல் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி இரவு, அந்தக் கோயிலில் தீமிதித் திருவிழா நடைபெற்றிருக்கிறது. அப்போது, சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞர் கதிரவன், அங்கிருந்த மாற்றுச் சமூகத்தினரால் திட்டி, தாக்கப்பட்டிருக்கிறார். உடன் அந்த இளைஞரை மீட்கச் சென்ற அவரின் பெற்றோரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயிலுக்குள்ளே சாமி கும்பிடச் சென்றதால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அன்று இரவே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த வளவனூர் போலீஸார், அந்த மக்களிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மேல்பாதி கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை வராமல் தடுக்க, ஊர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில், இரு தரப்பையும் அழைத்த மாவட்ட நிர்வாகம்... ஆர்.டி.ஓ., எஸ்.பி தலைமையில் சுமார் மூன்று முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதும் உடன்பாடு எட்டப்படாததால், பட்டியலின மக்கள் கோயிலுக்குள்ளே செல்வதென்பது கேள்விக்குறியாகவே இருந்துவந்தது. தற்போது சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்துக்கு மேலாகும் நிலையில், "சாமி தரிசனம் செய்யத் தங்களை கோயிலுக்குள்ளே அனுமதிக்க வேண்டும். சாதியைச் சொல்லித் திட்டி, அடித்தவர்களை கைதுசெய்ய வேண்டும். தங்கள் மீதான பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17-ம் தேதி மேல்பாதி பட்டியலின மக்கள், அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான போலீஸாரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவரைச் சுற்றிவளைத்த பட்டியலின மக்கள், தங்களின் கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தனர். அப்போது, மக்களிடமும், செய்தியாளர்களிடமும் பேசிய அவர், "அந்தக் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோயில். பட்டியலின மக்களைக் கோயிலுக்குள்ளே போகக் கூடாது என்று யாராவது சொன்னால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில், அனைவரும் கோயிலுக்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, அனைத்தையும் மறந்துவிட்டு, எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை ஊரிலுள்ள மக்களிடம் முன் வைக்கிறேன்" என்று பேசியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மேல்பாதி பட்டியலின மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதற்கு மறுதினம், பட்டியலின மக்களை கோயிலுக்குள்ளே அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்முடியின் பேச்சைக் கண்டித்தும் கோயிலுக்கு முன்பாக மாற்றுச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, தங்களுடைய அடையாள அட்டைகளைக் கீழே வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஆர்.டி.ஓ தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், அந்த மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் சிலர், மண்ணெண்ணெயை உடல்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதற்றமான சூழலைத் தடுப்பதற்காக ஊரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "மேல்பாதி கிராமத்தில், இரு சமூகத்துக்கிடையிலான திரௌபதி அம்மன் கோயில் பிரச்னை நடந்து, இரண்டு மாதங்கள் ஆனபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்காத அமைச்சர் பொன்முடி... இந்தக் கள்ளச்சாராய விவகாரத்தால் அரசுக்கு ஏற்பட்ட விமர்சனங்களையெல்லாம் மூடி மறைப்பதற்காக இன்று திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கப் பார்க்கிறார். இது உண்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய சம்பவம்" என்று காட்டமாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி அந்த ஊரிலிருந்து இருதரப்பு முக்கியஸ்தர்களையும் அழைத்த மாவட்ட ஆட்சியர் பழனி, மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊர் மக்களிடம் கலந்தாலோசித்து சுமுக முடிவுக்கு வருவதற்காக மூன்று நாள் கால அவகாசம் சிலர் கேட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து அனுப்பிவைத்திருக்கிறார். இதனால் மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்த விவகாரம் குறித்து, 26.04.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் புத்தகத்தில், "நீங்கல்லாம் கோயிலுக்கு வரக் கூடாதுனு தெரியாதா..? - திரௌபதி அம்மனை வழிபடத் தடுக்கிறதா சா‘தீ’?" எனும் தலைப்பில், இருதரப்பு விளக்கத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது விகடன். (முழுத் தகவல் கீழே உள்ள லிங்க்கில்...)