நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. புதிய அமைச்சரவையில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடியின், இரு மகன்களில் ஒருவர்தான் பொன்.கௌதமசிகாமணி. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 8.6 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியபோது அதிக அளவில் பேசுபொருளுக்கு உள்ளானவர்.

கலைஞரிடம் நெருக்கமாக இருந்ததுபோலவே, தற்போது ஸ்டாலினிடமும் இணக்கம் காட்டிவருகிறார் பொன்முடி. கள்ளக்குறிச்சி எம்.பி-யாக இருக்கும் கௌதமசிகாமணியை, விழுப்புரத்தில் தனக்கு அடுத்த முகமாக முன்னிறுத்த முனைப்பு காட்டிவருகிறாராம் பொன்முடி. விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச் சுவர்களில் எழுதப்பட்டுவரும் சுவர் விளம்பரங்களும் அதையே பிரதிபலிக்கத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது. விழுப்புரம் தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தியும், கெளதம சிகாமணிக்கு அடுத்தபடிதான் என்கிறார்கள் அந்தக் கட்சியின் உடன்பிறப்புகள்.
நம்மிடம் பேசிய திமுக நிர்வாகி ஒருவர்,``மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார் பொன்முடி. தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறார். மாநிலப் பொறுப்பு, அமைச்சர் எனும் அதிகாரம் பொன்முடிக்கு இருந்தாலும், கள்ளக்குறிச்சி எம்.பி-யாக இருக்கும் அவருடைய மகனுக்கும், விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்கும் தொடர்பே கிடையாது. தனக்கு அடுத்த முகமாக கெளதம சிகாமணியை விழுப்புரத்தில் முக்கியப் பொறுப்பில் முன்னிறுத்த முயல்கிறார் பொன்முடி.
தேர்தலுக்குப் பிறகு விழுப்புரம் தி.மு.க மத்திய மாவட்டத்தில், கட்சி போஸ்டராக இருந்தாலும், சுவர் விளம்பரமாக இருந்தாலும் பொன்முடி பெயருக்கு அடுத்தபடியாக அவருடைய மகனின் பெயர் பிரகாசிக்கிறது. மாவட்டச் செயலாளர் பெயரும், தொகுதி எம்.எல்.ஏ பெயரும் அவர் மகன் பெயருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறது.

விழுப்புரம் தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் நா.புகழேந்தி, பொன்முடி கையசைவுக்குச் செயல்படுபவராகவே மாறிவிட்டார்.
விழுப்புரம் தகவல் தொழில்நுட்ப அணியினரோ, கௌதம சிகாமணி அசைந்தால் போதும் அதை எடுத்து குழுவில் பதிவேற்றம் செய்துவிடுகிறார்கள். தான் அமைச்சராக அறிவிக்கப்பட்ட பின், தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரையும் சந்தித்திருக்கிறார் பொன்முடி. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளம், வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுகின்றன.
ஆனால், கனிமொழியைச் சந்தித்ததை மட்டும் வெளியில் தெரிவிக்கவில்லை. தலைவருக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்கிறார் அமைச்சர் பொன்முடி. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராகப் பதவியேற்றதைக் கொண்டாடும்விதமாக விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் ஏற்பாட்டை அன்றைய தினம் செய்தார். அதை அறிந்த பொன்முடி, தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக் கூடாதென்று மாவட்டச் செயலாளர் நா.புகழேந்திக்கு போன் செய்து `நான் இல்லாமல் நீங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது' என்று என்று கூறி இனிப்பு வழங்கும் ஏற்பாட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.
ஒரு எம்.எல்.ஏ அவருடைய தொகுதியில்கூட சுதந்திரமாக செயல்பட முடியாதபடி முட்டுக்கட்டை போட்டுவருகிறார். தலைமையைச் சேர்ந்தவர்களை அவரும், அவருடைய மகனும் சென்று பார்க்கலாம். ஆனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தி.மு.க தொண்டர்கள் தன்னை மீறி தலைமையை பார்த்துவிடக் கூடாது என்பதிலும் அதிக கவனம் செலுத்திவருகிறார். மற்ற மாவட்டங்களிலெல்லாம் இப்படி யாரும் செய்வதில்லை.

விழுப்புரம் மாவட்டக் கட்சித் தொண்டர் ஒருவர் கனிமொழியின் ஆதரவாளர் என்று தெரிந்துவிட்டால் போதும், கட்சிப் பொறுப்பில் அவருக்கு அடுத்த நிலை என்பதே கிடையாது. எத்தனை வருடம் ஆனாலும் சரி, அதே இடத்தில்தான் அந்த நபர் இருக்க வேண்டும். ஆனால், தன் மகன் எனும் ஒரே காரணத்துக்காக விழுப்புரத்தில், கட்சியின் முக்கியப் பொறுப்பு ஒன்றில் அமர்த்திவிட பல வழிகளில் முயன்றுவருகிறார். கடைமட்ட தொண்டனாக இருந்தாலும், மாவட்ட நிர்வாகிகளாக இருந்தாலும் தன் பிடியில் வைத்து நடத்தப் பார்க்கிறார். நேற்று (12.05.2021) கூட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பொன்முடி சென்றபோது, எம்.எல்.ஏ லட்சுமணன் புறக்கணிக்கப்பட்டார். கட்சித் தொண்டர்கள் இது போன்றோர் மத்தியில் எப்படி மேலே வர முடியும்" என்று வருத்தத்துடன் கூறினார்.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தரப்பில் விளக்கம் பெற முயன்றோம். ஆனால், அவர்கள் நமக்கு பதிலளிக்கவில்லை. மாவட்ட நிர்வாகிகள் மத்தியிலிருக்கும் அதிருப்தி தொடர்பாக அமைச்சர் தரப்பில் விளக்கம் தரும்பட்சத்தில், அதையும் தகுந்த பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்!