Published:Updated:

விழுப்புரம் எம்.எல்.ஏ பிறந்தநாள் பேனர்கள்... தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி; வைரலான வீடியோ!

தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி.

"நீ என்மீது கோபப்படாதே முண்டமே... உனக்குத்தான் சூடு, சுரணை, கிடையாது. அதேபோல அவர்களும் இருக்கிறார்கள் முண்டமே" - பேனரை அகற்றாத காவல்துறையினரைக் கண்டித்து தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி கொடுத்து நூதன எதிர்ப்பை வெளிப்படுத்திய நபர்.

விழுப்புரம் எம்.எல்.ஏ பிறந்தநாள் பேனர்கள்... தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி; வைரலான வீடியோ!

"நீ என்மீது கோபப்படாதே முண்டமே... உனக்குத்தான் சூடு, சுரணை, கிடையாது. அதேபோல அவர்களும் இருக்கிறார்கள் முண்டமே" - பேனரை அகற்றாத காவல்துறையினரைக் கண்டித்து தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி கொடுத்து நூதன எதிர்ப்பை வெளிப்படுத்திய நபர்.

Published:Updated:
தலையில்லா பொம்மைக்குச் சவுக்கடி.

கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்ட கட்அவுட் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். அப்போது, அதைக் கடுமையாக விமர்சித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், "கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர், கட்அவுட் வைக்கக் கூடாது. இந்த அறிவுரையை யாராவது மீறினால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை பாயும். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டத்திலும் நான் பங்கேற்க மாட்டேன்” என்று தன் கட்சியினரை எச்சரித்தார். ஆனால், இன்றளவும் பல மாவட்டங்களில் தி.மு.க-வினரின் பேனர் மோகம் குறைந்தபாடில்லை.

எம்.எல்.ஏ பிறந்தநாளுக்காக சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள்
எம்.எல்.ஏ பிறந்தநாளுக்காக சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள்

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க உறுப்பினராக இருப்பவர் லட்சுமணன். கடந்த மாதம் 30-ம் தேதி, இவருடைய 50-வது பிறந்தநாள், அவரின் தீவிர ஆதரவாளர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எனவே, அவரை வாழ்த்தி விழுப்புரம் நகரத்தின், சாலையோரமாக பல பேனர்கள் புதிதாக உதயமாகியிருந்தன. இந்தச் செயல், திமுக தலைவர் ஸ்டாலினின் கருத்துக்கு முரணாக அமைந்திருந்ததோடு, பொதுமக்களுக்கும் இடையூறாக அமைந்திருப்பதாகக் கருத்துகளும் எழுந்தன. இந்நிலையில், இந்த பேனர்களை அகற்றும்படி காவல்துறைக்கு பிரகாஷ் எனும் நபர் கோரிக்கை வைத்தாராம்.

ஆனால், நடவடிக்கை ஏதும் இல்லாததால், சம்பந்தப்பட்ட  எம்.எல்.ஏ லட்சுமணனுக்கே போனைப் போட்ட அந்த நபர், "சார், உங்களுக்குப் பிறந்தநாளுன்னு சொல்லிட்டு வளவனூர் பஸ் ஸ்டான்ட் முழுக்க பேனர் வெச்சுருக்காங்க. கொஞ்சம் எடுக்கச் சொல்லுங்க" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு எம்.எல்.ஏ-வும் "சரி, என்னன்னு பார்க்கச் சொல்கிறேன்" என்றிருக்கிறார். அதற்கான ஆடியோவும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், விழுப்புரம் முழுவதிலும் சாலையோரமாக வைக்கப்பட்ட பேனர்கள் எடுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பிரகாஷ்.

பிறந்தநாள் அன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன்
பிறந்தநாள் அன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன்

அந்த வீடியோவில், தலை இல்லாத பொம்மை ஒன்றை அமர்த்தி, கையில் சாட்டை ஏந்தி அடிக்கும் அந்த நபர் வீடியோவில் கூறியதாவது, "இந்த வீடியோ டிஜிபி கவனத்துக்குப் போகும் வரை பகிருங்கள். விழுப்புரம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ லட்சுமணன், ஒரு பேருந்து நிலையத்தை பிளாக் செய்து பேனர் வைக்கிறார். விழுப்புரம் நீதிமன்றம் அருகிலேயும், அவர் கட்சி ஆபீஸ் பக்கத்திலேயும் பேனர் வெச்சுருக்காங்க. இதற்காகப் புகாரும் கொடுத்தாகிவிட்டது, நடவடிக்கை எடுக்க மாட்டேங்கிறாங்க. எனவே, நடவடிக்கை எடுக்காத விழுப்புரம் எஸ்.பி-ஐ கண்டித்து இந்தத் தலையில்லாத முண்டத்தை அடித்துச் சொல்கிறேன்... அப்போதாவது அவர்களது காதில் கேட்கிறதா என்று பார்ப்போம். 'நீ என் மீது கோபப்படாதே முண்டமே... உனக்குத்தான் சூடு, சுரணை உணர்வு கிடையாது. அதேபோல அவர்களும் இருக்கிறார்கள் முண்டமே.

விழுப்புரம் நகரத்தில் பொதுச்சொத்தின் மீது சுவரொட்டி ஒட்டி ஒட்டிச் சேதப்படுத்துகிறார்கள். அப்படிச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது முண்டமே. ஆனால், தமிழக டிஜிபி யார் மீதும் கேஸ் போட மாட்டேங்கிறார். அப்படிப் போட்டிருந்தாலும் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்... அப்படி தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் இன்னொருவர் தைரியமாக போஸ்டர் ஒட்டுவாரா முண்டமே... நீ இதை அவர்கிட்ட சொல்றே முண்டமே'" என்று கூறி சவுக்கால் அடிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

பேனர், தலையில்லா பொம்மைக்கு சவுக்கடி
பேனர், தலையில்லா பொம்மைக்கு சவுக்கடி

இது குறித்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் விளக்கம் கேட்டோம். "அவர்களுடைய கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை எடுத்துவிட்டார்கள். மீதமுள்ள ஒருசில பேனர்களையும் அகற்றும்படி நகராட்சிக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். விரைவில் அந்த பேனர்களும் அகற்றப்படும்" என்றார் சுருக்கமாக.