Published:Updated:

விழுப்புரம்: தலைவருக்கு எதிராக அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள்; அதகளமான நகராட்சி கூட்டம் -என்ன நடந்தது?

சேர்மனை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்.

தி.மு.க-வின் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஒன்றாக இணைந்து சேர்மனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்ட அரங்கமே அதகளமானது.

விழுப்புரம்: தலைவருக்கு எதிராக அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள்; அதகளமான நகராட்சி கூட்டம் -என்ன நடந்தது?

தி.மு.க-வின் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஒன்றாக இணைந்து சேர்மனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்ட அரங்கமே அதகளமானது.

Published:Updated:
சேர்மனை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்.

விழுப்புரம் நகராட்சியின் சேர்மனாக இருந்து வருகிறார் தி.மு.க நகர செயலாளர் (விழுப்புரம்) சக்கரையின் மகள் தமிழ்ச்செல்வி. விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் சேர்மனான இவரின் தலைமையில் கடந்த 14.10.22 அன்று மாலை நகரமன்ற கூட்டம் நடைபெற இருந்தது. அப்போது, "கவுன்சிலர்களுக்கே தெரியாமல் டெண்டர்களை விடுகிறார்கள், மாதாந்திர கூட்டம் சரியாகவே நடப்பதில்லை, எதற்கெடுத்தாலும் லஞ்சம்" என்றெல்லாம் கூறி அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர்களும் நகரமன்ற கூட்டத்தை புறக்கணிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரையும் தனி அறையில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் சேர்மன். ஆனால், தி.மு.க-வின் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் ஒன்றாக இணைந்து சேர்மனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்ட அரங்கமே அதகளமானது.

நகரமன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்த கவுன்சிலர்கள்.
நகரமன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்த கவுன்சிலர்கள்.

அதுவரையில் அமைதியாக இருந்த சேர்மன் தமிழ்செல்வி, "அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது" எனக்கூறிவிட்டு நடையை கட்டினார். இந்நிலையில், "அவர் பதவி விலக வேண்டும்" என முழக்கங்கள் எழுந்ததால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக 1-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் கோல்டு சேகரிடம் பேசினோம். ``அவர்களின் நிர்வாகமே சரியில்லை. மாதம் மாதம் நடக்க வேண்டிய நகர்மன்ற கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் நடத்துகிறார்கள். ஒரு வார்டின் அவசிய தேவைக்காக குண்டூசி வாங்க வேண்டுமென்றாலும், `சப்ஜெக்ட்டில் வைத்து, அனுமதி வாங்கணும்’ என்கிறார்கள்.

இப்படியே இரண்டு மூன்று மாதங்கள் கடத்துகிறார்கள். மாதம் மாதம் கூட்டம் நடத்தினால் இந்த பிரச்னையை பெரும்பாலும் இருக்காது. அதேபோல, காசு இல்லாமல் எந்த வேலையும் நகராட்சியில் நடப்பதில்லை. உதாரணமாக, நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள், பிறப்பு/இறப்பு சான்றிதழ், பட்டா மாற்றம், பெயர் மாற்றம் என எதற்கு நகராட்சிக்கு போனாலும் லஞ்சம் வாங்காமல் அந்த விஷயத்தை செய்து தருவதே இல்லை. அதேபோல விழுப்புரம் நகராட்சியில், `கிரீன் வாரி’ எனும் தூய்மை திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது. ஒப்பந்ததாரர் மூலம் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 40 பேர் நியமிக்கப்பட்டு அந்த வேலை நடைபெறுகிறது. ஆனால், அவர்களை அனைத்து வார்டுகளிலும் பொதுவாக வேலை செய்ய வைப்பது கிடையாது. தி.மு.க கவுன்சிலர்கள் இருக்கும் வார்டுகளில் மட்டுமே வேலை செய்ய வைக்கிறார்கள். அந்தப் பணிக்காக ஒப்பந்ததாரருக்கு மாதம் சுமார் 84 லட்சம் வரை தருவதாக நகராட்சியில் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் 45 - 50 லட்சம் ரூபாய் வரை ஒப்பந்ததாரருக்கு கொடுத்துவிட்டு, மீதி பணத்தை நகராட்சி சேர்மன், ஆணையர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் எல்லோரும் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள்.

கூட்ட அரங்கத்தில் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா
கூட்ட அரங்கத்தில் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், தெருக்களின் நடுவே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் மழை நேரத்தில் சேரும், சகதியும் ஆகிவிடுகிறது. இதனை, பாதாள சாக்கடை பணியை செய்யும் ஒப்பந்ததாரரே பணி முடிந்ததும் சரிசெய்து தரப்போகிறார். ஆனால், "தெருக்களில் உள்ள அந்த சேதங்களை புது சாலை அமைத்து சரி செய்யப் போகிறோம்" என்று கூடுதலாக 7.5 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டிருக்கிறார்கள். பாதாள சாக்கடை திட்டம் முழுமை பெறுவதற்குள் இவர்கள் சாலை அமைத்தால், வீடுகளுடன் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு ஏற்படுத்தும் போது அந்த சாலைகள் மீண்டும் உடைக்கப்பட்டு பள்ளம் தோண்டப்படுமே..! அப்படியென்றால் அந்தப் பணம் வீண் தானே? பொதுவாக 'கவுன்சிலர்' எனும் மரியாதையையே நகராட்சியில் தருவதில்லை. டெண்டரும் ஒரு தலைப்பட்சமாக தான் வழங்கப்படுகிறது" என்றார் ஆவேசமாக.

தி.மு.க-வின் கூட்டணி கட்சியான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் சுரேஷ் ராமிடம் பேசினோம். "7.5 கோடி ரூபாய்க்கு அவசரஅவசரமாக ஆன்லைன் டெண்டர் விட்டார்கள். 'கவுன்சிலர்களிடம் கூறாமல் ஏன் டெண்டர் வைக்கிறீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு சேர்மனின் தந்தை, " உங்ககிட்ட சொல்ல முடியாது, டெண்டர் வைப்போம் தான்" என்றார். 'நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமே... கூட்டணி தர்மத்தை மீறி பண்ணுறீங்களே!' என்றோம். "அப்படின்னா மந்திரி கிட்ட கேட்டுக்கோங்க" என்றார். எனவே, நகரமன்ற கூட்டத்திலேயே கேட்போம் என முடிவெடுத்து தான் அன்று கேட்டோம். அதேபோல், இதற்கு முன்பாக தண்ணீர் பிரச்னை, புதிய பள்ளி கட்டடம் போன்ற பல பிரச்சனைகளை முன்வைத்துள்ளோம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல், எதிலெல்லாம் முதலில் பணம் வருமோ... அதை முதலில் காசாக மாற்றவேண்டும் என்று செயல்படுகிறார்கள்.

விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டம், சுரேஷ் ராம்.
விழுப்புரம் பாதாள சாக்கடை திட்டம், சுரேஷ் ராம்.

தீர்மானம் குறித்த விவரங்களையும், நகரமன்ற கூட்டம் பற்றியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தெரிவிக்காமல், நாளை கூட்டம் என்றால் இன்று மாலை கூறுகிறார்கள். அதேபோல், அன்றைய கூட்டத்தில் 42 கவுன்சிலர்களில், சுமார் 4 பேர் வரையில் தான் தீர்மானத்தில் கையெழுத்து போட்டிருப்பார்கள். அப்படியிருக்க, "தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது" என்று கூறிவிட்டு சென்று விட்டார் சேர்மன். இப்போது பெரும்பான்மையை காட்டுவதற்காக தி.மு.க கவுன்சிலர்களின் வீடுகளுக்கே சென்று கையெழுத்து வாங்கி வருகிறார் சேர்மனின் தந்தை. இதற்கெல்லாம் நகராட்சி ஆணையரும் முழு உடந்தை. பொதுவாக எங்கள் வார்டுகளில் நடக்கும் பணிகளுக்கு ஜே.சி.பி-யின் டீசல் செலவு என்றாலும் எங்களது கைக்காசை போட்டு தான் செய்ய வேண்டும். ஆனால் நகர மன்றத்தில் இதற்கெல்லாம் பில் போட்டு லட்சங்களில் காசு எடுக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டால், "கூட்டணி தர்மத்தை மீறி எதிர்த்து கேட்கிறீர்கள். உங்களை சஸ்பெண்ட் செய்துவிடுவோம்" என்கிறார்கள். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்று தெரியவில்லை" என்றார்.

மேலும், இது குறித்து பேசிய உடன்பிறப்பு கட்சியின் கவுன்சிலர்கள் மற்றும் விவரமறிந்த அரசியல் வட்டாரத்தினர், "டெண்டர் விஷயத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்தமாக 15% வரை சேர்மன் தரப்பில் கமிஷன் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிலிருந்து எந்த கவுன்சிலர்களுக்கும் ஷேரை பிரித்து கொடுக்காமல் சேர்மன் தரப்பே வைத்திருந்ததால் தான் இந்த பிரச்னை வெடித்தது. தி.மு.க கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணிக்க முயன்றபோது, தனியாக அழைத்துப் பேசிய சேர்மன்... "இப்போதைக்கு பிரச்னை பண்ணாம கையெழுத்து போடுங்க. அப்பா வந்ததும், பேசி உங்கள் பிரச்னையை சரி பண்ண சொல்லுறேன்" எனக்கூறி தீர்மானத்தில் கையெழுத்து வாங்கி இருக்காங்க. அதை நம்பி கையெழுத்து போட்டுட்டு, சுமார் இரண்டு மணிநேரம் வரை தி.மு.க கவுன்சிலர்கள் காத்திருந்த போதும் நகரச் செயலாளரும், சேர்மனும் வரவே இல்லை. இதனால் தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் விழுப்புரம் மத்திய மாவட்ட அமைச்சரைப் பார்த்து புகார் வாசிக்க போயிருக்காங்க" என்றனர்.

நகராட்சி அலுவலகம், நகராட்சி சேர்மன் தமிழ்செல்வி
நகராட்சி அலுவலகம், நகராட்சி சேர்மன் தமிழ்செல்வி

இதுகுறித்து விளக்கம் கேட்க விழுப்புரம் நகராட்சி சேர்மன் தமிழ்செல்வியிடம் பேசினோம். விவரத்தை பொறுமையாக கேட்டுக்கொண்டவர், "கோயில் வரை வெளியில் வந்திருக்கிறேன். இதற்கு பதில், நாளை நான் நேரில் சொல்கிறேன். காலையில் போன் பண்ணுங்க" என்றார். அதன்படி நேற்று காலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்ற அவரை, நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேரில் சந்தித்தோம். "என்னோட பி.ஏ-வின் போன் நம்பர் வாங்கிக்கோங்க. சந்தித்து பேசுவதற்கு நேரம் சொல்கிறேன். அப்போது வந்துவிடுங்கள் பதில் அளிக்கிறேன்" என்றார். இருப்பினும், அவரது பி.ஏ-வை மதியம் 12.30 மணியளவில் தொடர்புகொண்டோம். "மேடமிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்" என்றவர், அதன்பின் பதிலளிக்கவில்லை. 2.30 மணியளவில் அழைப்பை ஏற்றவர்,

"மேடம் வெளியில் போயிருக்காங்க. நாளை சந்திக்கலாம். இல்லையேல், சிறிது நேரத்தில் மேடமிடம் பேசிவிட்டு மீண்டும் அழைக்கிறேன்" என்றார். ஆனால், அதன்பின் அவர் அழைக்கவில்லை. சேர்மனையும் தொடர்புகொள்ள முயற்சித்தோம், அவரும் அழைப்பை ஏற்கவில்லை. இவ்வாறு பதிலளிக்காமல் தவிர்க்கிறார் அவர். நகராட்சியில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் தரும்பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்!