Published:Updated:

அரசியலில் நல்லவர்களைவிட குற்றவாளிகள் தேர்வு செய்யப்படுவது ஏன்? #RethinkingGoodGovernance

Parliament of India
Parliament of India ( AP Photo )

முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய் `Rethinking Good Governance - Holding to Account India’s Public Institutions' என்ற புத்தகத்தில் இந்தியாவின் சட்ட அமைப்புகள் குறித்து விரிவாக அலசுகிறார். அதுகுறித்த அறிமுகம்.

நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே தேவையான முக்கிய பிணைப்பு `நம்பிக்கை’யாகும். இந்த நம்பிக்கையைத் தருவது அரசுக்குத் துணையாக, ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தூண்களாகச் செயல்படும் அமைப்புகளாகும்.

1972-ம் ஆண்டு இந்திய ஆட்சியியல் பணியில் சேர்ந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும் 2008-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவின் 11-வது `கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலாக’ப் பணிபுரிந்தவருமான வினோத் ராய் எழுதி வெளிவந்த புத்தகம் `ரீதிங்கிங் குட் கவர்னன்ஸ் (Rethinking Good Governance – Holding to Account India’s Public Institutions).

இந்தப் புத்தகத்தில் இவர் எட்டு அமைப்புகள் குறித்தும், தகவலறியும் உரிமைச் சட்டம், விளையாட்டுத்துறை நிர்வாகம் (குறிப்பாக, BCCI - Board of Cricket Control of India), கோயில் நிர்வாகம் (குறிப்பாக, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் சொத்து குறித்த விவகாரம்), மும்பை ஆதர்ஷ் கோ-ஆபரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டி ஊழல் குறித்தும் எழுதியிருக்கிறார். இதற்கு முன்னுரை எழுதியிருப்பவர் சமீபத்தில் காலமான பழுத்த அரசியல்வாதியும் முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி. அந்த நூலில் வினோத் ராய் குறிப்பிடும் முக்கியமான விஷயங்கள்...

இந்திய நாடாளுமன்றம்

இந்திய ஜனநாயகத்தின் தூணாக, மக்களின் குரலை அவர்களின் பிரதிநிதிகள் எதிரொலிக்கும் ஓர் அமைப்பாக இருந்து வருவது இந்திய நாடாளுமன்றம் ஆகும். இங்கு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதும் கலந்துரையாடுவதும், அதன் மீதான முடிவெடுப்பதும் நடைபெற வேண்டுமேயொழிய கூச்சல் எழுப்பி இடைஞ்சல் ஏற்படுத்தக் கூடாது எனத் தனது முன்னுரையில் முகர்ஜி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நடப்பதென்ன?

Rethinking Good Governance
Rethinking Good Governance

2010-ம் ஆண்டு அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே 2ஜி ஊழல் சம்பந்தமாக சி.எ.ஜி (CAG) சமர்ப்பித்த அறிக்கை மீது ஏற்பட்ட பிரச்னையால் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள்கூட நடக்கவில்லை. இப்படி நடந்தது நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாகும். இந்த மாதிரியான இடையூறுகளால் ஏற்பட்ட நேர இழப்பு:

1996-97-ம் ஆண்டு கூட்டத்தொடரில் 5.2%,

1999-2004 காலகட்டத்தில் 18.9%,

2004-2009-ம் ஆண்டுகளில் 19.6%,

2009-2014- ம் ஆண்டுகளில் 39%.

அதுபோல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்றில் ஒருவர் மீது ஏதாவதொரு கிரிமினல் குற்றம் சம்பந்தமான வழக்கு இருக்கிறது. ஏ.டி.ஆர் (ADR) என்கிற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, குற்றமெதுவும் செய்யாத வேட்பாளர்களைவிட குற்றம் செய்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரியவந்திருப்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமாகும்.

படித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும், மக்கள் பிரதிநிதிகளாகப் பெண்கள் தெரிவு செய்யப்படுவதும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் குறைந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியமாகும். அதே நேரம், அவர்களைத் தங்களது பொறுப்பை உணர்ந்து இடையூறு ஏற்படுத்தாமல் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆளுங்கட்சியை நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதோடு ஃபீனிக்ஸ் பறவைபோல நாடாளுமன்றம் மீண்டெழ வேண்டுமென்கிறார் நூலாசிரியர். ஆனால், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம்கூட ரத்து செய்யப்படவிருக்கிறது என்கிற சமீபத்திய அறிவிப்பு அதிர்ச்சியைத் தருகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி

மத்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் வங்கியின் சட்டம், அதற்கான பணிகளையும் உரிமைகளையும் தெளிவாக வரையறுத்திருந்தாலும் அரசுக்கும் வங்கிக்குமிடையே நிதிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வட்டிவிகிதத் திருத்தம் எனப் பல விஷயங்களில் முரண்பாடுகள் இருந்துவருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அரசு அதனுடைய `வாக்கு வங்கி’க்கேற்ப முடிவுகளை எடுக்க மத்திய வங்கியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிர்ப்பந்திப்பதும் மத்திய வங்கி அதைப் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூடிய மட்டும் நிராகரித்து வருவதையும் நாம் சில ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆசிரியர் குறிப்பாக, இரண்டு விஷயங்களை - வாராக்கடன் பிரச்னை, பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றில் அரசு எப்படி மத்திய வங்கியின் பரிந்துரைகளைக் கண்டுகொள்ளாமல் ஓரங்கட்டியது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

பணமதிப்பு நீக்க அறிவிப்புக்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு மத்திய ரிசர்வ் வங்கியின் போர்டு அரசின் `முடிவை’ ஆமோதிக்கும்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற அதை பிரதமர் நாட்டுக்கு அறிவிக்கும் வரை அவர்களை வெளியிலெங்கும் செல்லவிடாமால், யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமால் இயக்குநர்கள் அறைக்குள் `பிணையாக’ இருக்க வைத்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டி பொது அமைப்பின் மேல் அரசுக்கு இருக்கும் அதிகார பலத்தை விவரித்திருக்கிறார். சரியான முன்னேற்பாடு இல்லாமல் அறிவித்த பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்திய விளைவுகள் அனைவருக்கும் தெரியும். மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடு அதன் தலைவராக யார் இருக்கிறாரோ, அவரைப் பொறுத்தே அமைகிறது. அவர்கள் அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லையெனில் அவர்களுக்கு வேலை நீட்டிப்புக் கிடைப்பதில்லை அல்லது அவர்களாகவே தங்கள் பணிக்காலம் முடிவதற்கு முன்பாக ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆக, அரசும், வங்கியின் தலைமையும் நாட்டு மக்களின் நலன் மீதும் பொருளாதார வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டு அந்தந்த அமைப்பின் வரையறைக்குள் செயல்பட வேண்டுமென்பதை அழுத்தமாக நூலாசிரியர் தெரிவிக்கிறார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அதன் ஆணையராகவும் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாகவும் இருந்த சேஷன்தான். தேர்தல் ஆணையம் அதன் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் நிர்ணயச்சட்டம் 324-வது ஷரத்தின்படி, மேற்கு வங்காளத்தின் ஏழாவது கட்ட தேர்தல் பிரசாரத்தின்போது கலவரம் அதிகமாக இருந்தபடியால் பிரசாரத்தை ஒரு நாள் முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு 2019-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி உத்தரவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தலுக்கென்றே ஒரு அத்தியாயம் அதில் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட மதப்பிரிவினை பிரச்னைக்கு மத்தியிலும் அனைவருக்கும் ஓட்டுரிமை என அறிவித்து ஜனநாயகத்துக்கு வித்திட்டது நேருவின் தலைமையிலான அன்றைய அரசு. விடுதலையான ஓரிரு வருடத்துக்குள் சாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் இந்த உரிமை வேறு எந்த நாட்டினருக்கும் கிடைத்ததில்லை. முதல் தேர்தல் 1951/52-ம் ஆண்டில் 68 கட்டங்களாக 5 மாதங்கள் நடைபெற்றதாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி (Dr S.Y.Quraishi) அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அப்போதிருந்த வாக்களர்களின் எண்ணிக்கை 17 கோடி. அப்போது படிப்பறிவு பெற்றவர்கள் 16 சதவிகிதமே இருந்தாலும் சுமார் 60% பேர் வாக்களித்திருந்தார்கள் என்பது முக்கியமான ஒரு விஷயமாகும். இன்றைக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி. இருப்பினும் ஒவ்வொரு முறையும் திறமையாக தேர்தல் ஆணையம் அதன் பணியைச் செய்து வருவது பாராட்டுதலுக்குரியதாகும்.

Parliament of India
Parliament of India
AP Photo

சமீபத்தில் மின்னணு வாக்கெடுப்பு இயந்திரம் குறித்த பிரச்னைகளை இவ்வாணையம் எதிர்கொண்டு வருகிறது. இன்றைக்கு ஓரளவுக்கு அதிகாரத்துடனும் வெளிப்படையாகவும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறதென்றால் அதற்குக் காரணம், சேஷன் அன்றைக்கு விதைத்த விதைதான்.

இவை தவிர, உச்ச நீதிமன்றம், கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா, சி.பி.ஐ, சிவில் சர்வீஸ், மத்திய கண்காணிப்பு ஆணையம் (The Central Vigilance Commission) ஆகிய அமைப்புகளுக்கு இருக்கும் அதிகாரம், அதிலிருக்கும் அரசியல் தலையீடு குறித்தும் எழுதியிருப்பதோடு அதை நீக்கி நல்ல ஆளுகைக்கு என்ன செய்ய வேண்டுமென்று தனது பரிந்துரைகளையும் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார் நூலாசிரியர் வினோத் ராய்.

இந்த அமைப்புகளின் செயல்பாட்டின் மீதும், இந்திய ஜனநாயகத்தின்மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது!

அடுத்த கட்டுரைக்கு