Published:Updated:

`வன்முறை வாழ்க்கையின் ஒரு பகுதி!'- டெல்லி குறித்து அமைச்சரின் சர்ச்சை பதில்

அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா
அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா

``மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பிள்ளைகளை போட்டித்தேர்வுகள் எழுத அனுமதிக்கக்கூடாது'' எனக்கூறி இவர் சில நாள்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது

டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த சில மாதங்களாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளான ஜாஃப்ராபாத், மஜ்பூர் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவியது. போராட்டக்களத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில், தற்போது வரை 42 பேர் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா
அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா

இந்த நிலையில், ஹரியானாவின் மின்துறையின் அமைச்சர் டெல்லி வன்முறை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களை அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா சந்தித்தபோது அவரிடம் வன்முறை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு பதிலளித்த அவர், ``வன்முறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த காலங்களிலும் அவை நடந்திருக்கின்றன. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது டெல்லி பற்றி எரிந்துகொண்டிருந்தது. வன்முறைகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அவை தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை கோபம்... அமித் ஷாவைத் தாண்டி அஜித் தோவலிடம் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?

ரானியா என்ற சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார், ரஞ்சித் சிங் சௌதாலா. பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்தார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். 74 வயதான இவர், முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் மகன் ஆவார். 1987 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் விவசாயத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா
அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாலா

ரஞ்சித் சிங் சில ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார். பின்னர் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட தலைமை அனுமதிக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டார். இப்போது கூறியுள்ளதுபோல பல கருத்துகளைக் கூறி அவ்வபோது அவர் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ``மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பிள்ளைகளை போட்டித்தேர்வுகள் எழுத அனுமதிக்கக்கூடாது" எனக்கூறி சில நாள்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

`டாக்டர் கனவு; தலையில் துளைத்த தோட்டா!”- டெல்லி கலவரத்தில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
அடுத்த கட்டுரைக்கு