Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்

வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்

சட்டமன்றக் கூட்டத்தொடரை முடித்துவிட்டு, தன் துறை சார்ந்த பணிகளில் சுறுசுறுப்பாகக் களமிறங்கியிருக்கிறார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின்போது, கையில் சிறு குறிப்பும் இல்லாமல் தரவுகளோடு அவர் பேசியது, கட்சி சார்பற்று அனைவராலும் பாராட்டுப் பெற்றது. அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து விஐபிகள் யார் யார்... என்ன காரணம்?

மலாலாவின் வீரத்துக்கு மரியாதை!

`` ‘பள்ளிக்குச் செல்லக் கூடாது, கல்வி கற்கக் கூடாது’ எனச் சொன்ன துப்பாக்கிகளுக்கு முன்பாக, தனது பேனாவை ஏந்தி கல்விக்காகப் போராடியவர் மலாலா. ‘கிழக்கின் ஸ்விட்சர்லாந்து’ என வர்ணிக்கப்படும் பகுதி ‘ஸ்வாட் பள்ளத்தாக்கு.’ இயற்கை சூழ்ந்த அழகான பகுதி. ஆனால், பயங்கரவாதப் பிடிக்குள் சிக்கி, சீர்குலைந்திருந்தது. ‘பெண்கள் வெளியே செல்லக் கூடாது. பள்ளிக்குச் செல்லக் கூடாது’ என விதிகள் அங்கே இருந்தன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களும் தகர்க்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில் தந்தையின் ஊக்கத்தால், மலாலா எனும் 11 வயது சிறுமி பெண் கல்விக்காகக் குரல் எழுப்பத் தொடங்கினார். அவரைத் தேடிக் கண்டுபிடித்து, பயங்கரவாதிகள் சுட்டார்கள். மரணத்திலிருந்து தப்பித்த மலாலா, தொடர்ந்து இன்றும் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்துவருகிறார். ‘பெண் கல்விக்குக் குரல் கொடுத்ததால் சுடப்பட்டேன் என வரலாறு சொல்லட்டும்’ என்கிறார் தீர்க்கமாக. அவர் விரும்பும் இடத்தில், அவருக்குப் பிடித்த உணவுகளோடு விருந்தளிக்க ஆசை. அவரின் வீரத்தைப் பாராட்ட வேண்டும்!’’

ரஜினிகாந்த் எனும் நல் உள்ளத்துக்கு விருந்து!

``அரசியல்ரீதியான கருத்து வேறுபாடுகளைக் கடந்து, ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பு அனைத்து இளைஞர்களையும் கவர்ந்த ஒன்று. எப்போதும் தன்னிலை மறவாத மனிதர் அவர். முத்தமிழ் அறிஞரின் மூத்த பிள்ளை முரசொலியின் 75-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, நண்பர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது, சந்தித்தது. ஏழை மக்களுக்கு உதவுதல், அன்னையரை மதித்தல் போன்ற நற்பண்புகளை அவரின் கதாபாத்திரங்கள் எடுத்துச் சொல்லின. `காளி’, `காலா’ போன்ற அவர் நடித்த கதாபாத்திரங்கள் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. `காலா’ படத்தில் அவர் ஏற்ற பாத்திரத்தின் அரசியல் மிக முக்கியமானது. ரஜினிகாந்த் எனும் நல்ல மனிதருக்கு, என் வீட்டில் விருந்தளிக்க ஆசை. நான் மிகவும் ரசித்த அவரின் கதாபாத்திரங்கள் குறித்து அவரிடம் உரையாட விருப்பம்!’’

வி.ஐ.பி டின்னர் - அன்பில் மகேஸ்

கரிகாலனுக்கு கல்லணையில் விருந்து!

``2,000 ஆண்டுகளுக்கு முன்பே மாபெரும் அறிவியல் திறத்தோடு கல்லணை கட்டி, தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாசனப் பரப்பை உருவாக்கக் காரணமானவர் கரிகாலன். ‘ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிகளில் ஒன்று’ எனச் சொல்லப்படும் டெல்டா மாவட்டங்கள் இன்று உயிர்ப்போடு இருக்கிறதென்றால், அதற்குக் காரணம் கரிகாலன்தான். பல லட்சம் விவசாயப் பெருங்குடிகளுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவர். ஜோர்டான் நாட்டின் ‘ஜாவா அணை’, எகிப்து நாட்டிலுள்ள ‘சாத் எல் - காஃபாரா’ (Sadd El-Kafara) போன்ற பழைமையான அணைகளைப்போலவே உலக நீரியல் அறிஞர்கள் கல்லணையின் அறிவியலையும் போற்றுகிறார்கள். ஆனால், சாத் எல்-காஃபாரா அணை இன்று இல்லை, கல்லணை கம்பீரமாக நிற்கிறது. சிறு வயது தொடங்கி பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகும்கூட அதே வழியில் பயணப்பட்டுவருகிறேன். `எத்தனை முறை சென்றாலும் கல்லணை மீதான பிரமிப்பு நீங்கவில்லை. அந்த உணர்வை அவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே கல்லணையில், கரிகாலனுக்குப் பிடித்த உணவுகளோடு விருந்து படைக்க ஆசை!’’

நரேந்திர மோடிக்கு விருந்தும் கேள்வியும்!

‘‘இந்தியாவின் வரலாற்றைப் பற்றி, ஒற்றுமையைப் பற்றி அறிய வேண்டுமென்றால் உங்கள் சமையலறையைச் சென்று பாருங்கள்’ என்பார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். மேற்கு வங்கத்தில் விளையும் கடுகை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். இங்கு விளையும் அரிசியை இந்தியா முழுக்கவும் கொடுத்தனுப்புகிறோம். வட மாநிலங்களிலிருந்து பருப்பு வகைகள் நமது வீட்டுச் சமையலறைக்கு வருகின்றன. இவையெல்லாம் காலங்காலமாகப் பண்படுத்தப்பட்டு இன்றும் நடைமுறையில் இருக்கின்றன. இதைத்தான் பண்பாடு என்கிறோம். ‘ஒரே நாடு... ஒரே மொழி!’ என இந்தியாவைக் கொண்டு சென்றுகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, பன்முக அடையாளங்கள் ஒன்றிணையும் சமையலறையில், அவருக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்து விருந்தளிக்க விரும்புகிறேன். அப்போது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் பண்பாட்டை அவ்வுணவில் மோடி அவர்கள் உணர்கிறாரா என்பதை அவரிடம் கேட்க ஆசைப்படுகிறேன்!’’

அன்னை ரமாபாய் அம்பேத்கரின் தியாகத்துக்கு மரியாதை!

``கணவர் பீமாராவ் அவர்கள் தனக்காகப் படிக்கவில்லை. தனது குடும்பத்துக்காகப் படிக்கவில்லை. தனது ஊருக்காகக்கூடப் படிக்கவில்லை. காலங்காலமாக ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த இனத்துக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார். அதனால், தனது வறுமையைச் சொல்லி, தனது பட்டினியைச் சொல்லி, தனது பிள்ளைகளின் மரணத்தைச் சொல்லி, அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என நினைத்தவர் அன்னை ரமாபாய். அதனால்தான், `பீமாராவ் என இருந்த என்னை அம்பேத்கராக மாற்றியவர் என் மனைவி ரமாபாய்’ எனச் சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அம்பேத்கர் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது, வறுமையில் வாடி, பட்டினி கிடந்தவர் அன்னை ரமாபாய். அந்தப் பசித்த வயிற்றுக்கு வயிறார உணவு பரிமாற ஆசை. ஒரு மாணவர் விடுதியில், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டினியால் வாடுவதைக் கண்டு, தனது நகைகளை அடகுவைத்து அவர்களின் பசியைப் போக்கியவர் அன்னை ரமாபாய். அவர்களுக்கு எனது வீட்டில் விருந்தளிக்க விரும்புகிறேன். அவர்களின் தியாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism