Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - பாலபாரதி

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - பாலபாரதி

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

மக்கள் பிரச்னைகளுக்காக எப்போதும் முன்னிற்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி. சட்டமன்றத்தில் எளிய மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர். கட்சி நிகழ்வுகளுக்கும், போராட்டக் களங்களுக்கும் வீட்டிலிருந்து டிபன் பாக்ஸில் உணவெடுத்துச் சென்று சாப்பிடும் அளவுக்கு எளிமையான வாழ்வியலைக் கடைப்பிடிப்பவர். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தோம்...

தோழர் லெனினும் வால்கா நதிக்கரை சந்திப்பும்!

``மக்கள் புரட்சியின் வழியாக மாற்று அரசியலை உருவாக்கி, மார்க்சியத்தை உலக அளவில் கொண்டுசேர்த்த மாமேதை லெனின், தொழிலாளர் வர்க்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவந்தவர்; உலகின் முகத்தோற்றத்தையே மாற்றியவர். அதனால் லெனின்தான் எனது முதல் விருப்பம். ஜார்ஜ் மன்னரை, நாசிச, பாசிசப் படைகளை வீழ்த்தி, தனது 54 வயதுக்குள்ளாகவே இத்தனை சாதனைகளையும் செய்து முடித்திருக்கிறார். நிச்சயமாக அவர் ஓர் அதிசய மனிதர்தான். அவருடன் வால்கா நதிக்கரையில், அவருக்கு மிகவும் பிடித்த தேநீர் விருந்தளித்து இந்தச் சந்திப்பு நடைபெற வேண்டும். `முதலாளித்துவத்தை வீழ்த்தவே முடியாது... அதுதான் கோலோச்சுகிறது’ என்று இப்போதும் ஏகாதிபத்திய நாடுகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ‘முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிஷ சமுதாயத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?’ என்று அவரிடம் கேட்பேன்!’’

மகாத்மா காந்தியும் காந்தி கிராம சந்திப்பும்!

‘‘பல நூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த மக்கள் கூட்டத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தவர் காந்தி. மன்னர் படைகளால் சாதிக்க முடியாததைத் தனது கருத்தியலால் சாதித்தவர். தனது இளம் பருவத்தில் எந்தத் தொழில்நுட்ப வசதியுமே இல்லாத காலத்தில் கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைத்தவர். பெண்களை, குழந்தைகளைக்கூட அகிம்சைக் கருத்தியலால் ஈர்த்தவர். காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள, பல விஷயங்கள் இருக்கின்றன. அவரை திண்டுக்கல் காந்தி கிராமத்தில் வைத்து சந்திக்க விரும்புகிறேன். அவருக்குப் பிடித்த ஆட்டுப்பால், வேர்க்கடலையோடு விருந்தளிப்பேன். அவரிடம், ‘மதவெறியால் உங்களைச் சுட்டு வீழ்த்தினார்கள்... இப்போது மதவாதம் அதிகாரத்துக்கு வந்திருக்கிறது. அதை எதிர்த்து மக்களை ஒன்றுபடுத்த எந்த வடிவத்தில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன்!’’

வி.ஐ.பி டின்னர் - பாலபாரதி

தந்தை பெரியாரும் ஈரோட்டுச் சந்திப்பும்!

``பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் இன்றைய அரசியல் சூழலிலும் முக்கியமானதாக இருக்கின்றன. அதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘மதம் மனிதனை மிருகமாக்கும்’ என்றார் பெரியார். நம் கண்முன்னே அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. `பெண் இந்த உடைதான் அணிய வேண்டும்; இந்த உடை அணியக் கூடாது’ என்று பெண்ணை மையமாக வைத்து ஒரு கூட்டம் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. `பெண் விரும்பிய உடையை அணிய வேண்டும்’ என்று அப்போதே சொன்னவர் பெரியார். அந்தவகையில், பெரியாரின் சித்தாந்தமும் பெண்ணுரிமைக் குரலும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானவை. அவருடன் ஈரோட்டில், அவரது வீட்டிலேயே ஒரு சந்திப்பு நடைபெற வேண்டும். மாமிச உணவுகளை விரும்பி உண்பவர் அவர். அதனால், மாமிச உணவுகளைப் பரிமாறிக்கொண்டே உரையாடுவேன். அவரிடம், ‘மதவெறி அரசியலில், பெண் உடை அணிவது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் பெண்ணுரிமையைப் பாதுகாக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாக்கப்படாமல் இருக்கிறது... நீங்கள் இருந்தால் எப்படியான போராட்டங்களை செய்திருப்பீர்கள்?’’ என்று கேட்பேன்!’’

முதல்வர் ஸ்டாலினும் கலைஞர் நினைவிடத்தில் சந்திப்பும்!

‘‘கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் முதல்வராகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது. இட ஒதுக்கீடு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மாநில அரசுக்குரிய வரி விதிப்பு உரிமைகள் பறிபோய்விட்ட சூழலில், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் செய்யவேண்டியிருக்கிறது. இப்படிப் பல்வேறு நெருக்கடிகள் வந்தபோதும், திறமையாகச் சவால்களை எதிர்கொண்டுவருகிறார் ஸ்டாலின். கலைஞர் நினைவிடத்தில் அவருக்குத் தேநீர் விருந்தளித்து சந்திக்க விரும்புகிறேன். அவரிடம், ‘மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்துவதற்கு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறீர்கள்... மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன்!’’

பினராயி விஜயனும் முல்லைப்பெரியாறு சந்திப்பும்

``இடதுசாரி இயக்கத்தின் முதலமைச்சர் என்பது மட்டுமல்லாமல், கேரளாவில் 1957-க்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனவரும் அவர்தான். தமிழ்நாட்டு முதல்வரைப்போலவே அவருக்கும் சபரிமலை விவகாரம், முல்லைப்பெரியாறு விவகாரம் எனப் பல சவால்கள் இருக்கின்றன. தென்னிந்திய மாநிலங்கள் எப்போது தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள் என மதவாத சக்திகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக - கேரள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, தோழமையோடு அவர் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முல்லைப்பெரியாறு அணையிலேயே அவருக்குத் தேநீர் கொடுத்து அவரிடம், ‘மத்தியில் மதச்சார்புள்ள பா.ஜ.க அரசும், பல்வேறு மாநிலங்களில் மதச்சார்பற்ற அரசுகளும் ஆட்சி செய்கின்றன. மதச்சார்பற்ற மாநில அரசுகளை ஒன்றிணைப்பதற்கும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உங்களுடைய பங்களிப்பு என்ன?’ என்று கேட்பேன்!’’