Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - அண்ணாமலை

வி.ஐ.பி டின்னர் -  அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - அண்ணாமலை

ஓவியம்: நன்மாறன்

வி.ஐ.பி டின்னர் - அண்ணாமலை

ஓவியம்: நன்மாறன்

Published:Updated:
வி.ஐ.பி டின்னர் -  அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர் - அண்ணாமலை

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தபோதும் சரி, முழு நேர அரசியல்வாதியான பின்னும் சரி, மண் சார்ந்த வாழ்க்கையைப் பெரிதும் நேசிப்பவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இப்போதும்கூட நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய தோட்டத்துக்குச் சென்று விவசாய வேலைகளை, கால்நடைகளை ஆர்வமாக கவனித்துவருபவர். அவர், டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணங்களையும் பகிர்ந்துகொண்டார்!

காமராஜர் ஐயாவின் விருதுநகர் வீட்டுச் சந்திப்பு!

``அற்புதமான சரித்திர வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கர்மவீரர் காமராஜர் ஐயாதான் என்னுடைய முதல் சாய்ஸ். இந்தியா முழுவதும் சாதியைவைத்துப் பலர் அரசியல் செய்துகொண்டிருந்த நேரத்தில், வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்தவர் அவர். குறிப்பாக விவசாயம், நீர்ப்பாசனம், பள்ளிக்கூடங்களுக்கு அவர் கொடுத்த அளவுக்கு அப்போது இந்திய அளவில் எந்த மாநிலத்திலும், யாரும் முன்னுரிமை கொடுக்கவில்லை. அவர் போட்ட விதைதான் முப்பதாண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் தமிழக வளர்ச்சிக்குக் கைகொடுத்தது. அரசியல்நலனுக்காக உடனடியான திட்டங்களை அறிவிக்காமல், மக்கள்நலனுக்காக எதிர்காலத்தை யோசித்துப் பல நல்ல விஷயங்களைச் செய்திருக்கிறார். அவரிடம் இது குறித்து நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். என்னைப் போன்ற அரசியலில் இருக்கிற இளைஞர்களுக்கெல்லாம் அது நல்ல பாடமாக இருக்கும். அவரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரைச் சந்தித்துப் பேச வேண்டும். என்னுடைய அம்மா சுட்ட பணியாரத்தையும், அரிசி பருப்புச் சாதத்தையும் அவருக்குப் பரிமாற வேண்டும்!”

மகாகவி பாரதியாருடன் கொங்கு மண்டலத்தில் சந்திப்பு!

``நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, பாடப்புத்தகத்தில் இருக்கும் பாரதியார் கவிதைகளைத் தவிர அதிகம் படித்தது கிடையாது. ஆனால், இப்போது அவருடைய கவிதைகளைப் படிக்கப் படிக்க அதிலிருக்கும் ஆழமும் பார்வையும் என்னை மெய்சிலிர்க்கவைக்கின்றன. 1917-லேயே நிலாவுக்குப் போவது குறித்தும், நம்முடைய அறிவியல் எப்படி மாற வேண்டும் என்பது குறித்தும் பேசும் அவரின் கவிதைகள் என்னை ஆச்சர்யப்படுத்தின. மறுபுறம், அவரின் ஆன்மிக எழுத்துகள், தேசியவாதம் குறித்த அவரின் புலமை என்னை ஈர்த்தன. ‘உடனடி அங்கீகாரத்துக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் உலகம் இது. அதில், வறுமையிலும் கொடுமையிலும் வாழ்ந்தபோதும்கூட எப்படி இவ்வளவு புத்துணர்ச்சியோடு உங்களால் இயங்க முடிந்தது. அனைவர் குறித்தும் யோசிக்க முடிந்தது?’ என்று அவரிடம் கேட்க வேண்டும். ஈரோட்டில் ஒரு நூலகத் திறப்புவிழாவுக்கு வந்து கலந்துகொண்டு பேசியதுதான் பாரதியாரின் கடைசி மேடை என்கிறார்கள். அதனால், அவரைக் கொங்குப் பகுதியான என்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துவந்து, என்னுடைய வீட்டில் விருந்து கொடுக்க வேண்டும். அவருக்குப் பிடித்த உணவுகளைக் கேட்டு, என் அம்மாவின் கையால் சமைத்துக் கொடுக்க வேண்டும்!’’

அப்துல் கலாம் ஐயாவுடன் முகல் கார்டன் சந்திப்பு!

``கூட்டத்தோடு கூட்டமாக அப்துல் கலாம் ஐயாவைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு எனக்கு இரண்டு, மூன்று முறை அமைந்திருக்கிறது. ஆனாலும், அவருடன் தனியாக ஒரு சந்திப்பு அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. தனிமனித நேர்மை, நெஞ்சுரம் என்பதைத் தாண்டி அவருக்கிருந்த பரந்து விரிந்த பார்வை, இந்தியாவுக்கான கனவு என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றன. படிக்கும்போது ஒரு மாதிரியும், ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணிபுரியும்போது ஒரு மாதிரியும், இப்போது அரசியல்வாதியாக பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் எனப் பல பரிமாணங்களில் அவர் எனக்குத் தெரிகிறார். அவருக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பணியை அவர் கடைசி வரைக்கும் கைவிடவே இல்லை. இறப்பதற்கு முன்னால்கூட அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த ராஷ்டிரபதி பவனில், அவரால் உருவாக்கப்பட்ட முகல் கார்டனில் நடந்துகொண்டு, அவரின் அறிவுரைகள், சிந்தனைகளை உள்வாங்க வேண்டும். ஐயா கல்லூரி படிக்கும்போது, ஃபீஸ் கட்ட முடியாமல் நான்-வெஜ்ஜிலிருந்து வெஜிடேரியனாக மாறியவர். அவர் இப்போது நான்-வெஜ் சாப்பிட ஆசைப்பட்டால், என் வீட்டிலிருந்தே சமைத்து எடுத்துப்போக ஆசை!’’

வி.ஐ.பி டின்னர் -  அண்ணாமலை

பிரதமர் மோடியுடன் தமிழ்நாட்டில் சந்திப்பு!

``என்னுடைய கட்சியின் முக்கியத் தலைவர் என்பது மட்டுமல்ல, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் பிரதமர் மோடி. அவருடன் பேசினால் மிகப்பெரிய எனர்ஜி நமக்குக் கிடைக்கும். யோகி, ரிஷிகளுக்கு இருக்கக்கூடிய கரிஷ்மா நம் பிரதமரிடம் இருக்கும். அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவருக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வேன். குஜராத்தில் 1985-லிருந்து 20 ஆண்டுகள் மிகக் கடுமையாக உழைத்து, கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அவரிடம் அது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தவிர, பிரதமராக அவரின் முடிவெடுக்கும் திறன் குறித்தும் கேட்க வேண்டும். பிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டில் பிடித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், தமிழ்நாட்டில் அவருக்குப் பிடித்த ஓர் இடத்துக்குக் கூட்டிப் போய் அவருக்குப் பிடித்த உணவுகளைப் பரிமாறி விருந்து கொடுக்க வேண்டும்!’’

நல்லகண்ணு ஐயாவுடன் நந்தனம் வீட்டில் சந்திப்பு!

``அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, நல்லகண்ணு ஐயாவின் மிகப்பெரிய விசிறி நான். அவரிடம் விவாதிக்க ஒன்றுமே இல்லை. அவரிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. அவர் வாழ்ந்த காலகட்டத்தில், தான் கொண்ட கொள்கைக்கு உண்மையாக, நேர்மையாக, கம்பீரமாக வலம்வந்தவர் அவர். எளிமையான வாழ்க்கைமுறையுடனும், அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணத்துடனும் வாழும் மாமனிதன் அவர். என்னுடைய அரசியல் வாழ்க்கையும் அப்படி இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். பத்து, இருபதாண்டுகள் கழித்து என்னை நான் பார்க்கும்போது, என்னுடைய சிந்தாந்தத்துக்கு அவரைப்போல நான் உறுதியாக இருந்தேன் என்று பெயரெடுத்தால் எனக்குப் போதும். அவரின் ஆசீர்வாதத்தை வாங்க அவரின் நந்தனம் வீட்டுக்குச் சென்று, அவர் சாப்பிடும் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டே அவருடன் உரையாட வேண்டும் என்பதே என் விருப்பம்’’