Published:Updated:

வி.ஐ.பி டின்னர்! - ஜி.ராமகிருஷ்ணன்

வி.ஐ.பி டின்னர்!
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்!

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர்! - ஜி.ராமகிருஷ்ணன்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்!
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மூன்று முறை பதவி வகித்தவர் ஜி.ராமகிருஷ்ணன். மாணவப் பருவத்திலேயே அரசியலுக்குள் நுழைந்து, தனது வாழ்க்கையைக் கொள்கைக்கும் கட்சிக்கும் ஏற்றவகையில் தகவமைத்துக்கொண்டவர். அவர், டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களும், அதற்கான காரணங்களும் இந்த இதழ் வி.ஐ.பி டின்னர் பகுதியில்...

வி.பி.சிந்தனுக்கு அறை எண் மூன்றில் தர்பார் ஹோட்டல் ‘டீ’ விருந்து!

``என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை, புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தியவர் வி.பி.சிந்தன். நான் கல்லூரியில் படித்த காலத்தில், அவர் எடுத்த அரசியல் வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் ‘கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும், முழு நேர ஊழியராகப் பணியாற்ற வேண்டும்’ என்கிற சிந்தனையே எனக்குள் உண்டானது. 1969 காலகட்ட பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில், அறை எண் மூன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியிருந்தார்கள். அங்கு அவரைச் சந்தித்து உரையாடியது உண்டு. அதேபோல, மவுன்ட் ரோட்டில் அப்போதிருந்த ‘தர்பார் ஹோட்டல் டீ’ அவருக்கு மிகவும் பிடித்தமானது. வாய்ப்பிருந்தால், அறை எண் மூன்றில், ‘தர்பார் ஹோட்டல் டீ’யோடு அவரைச் சந்திக்க வேண்டும். `ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, இந்தியாவை 200, 300 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. சனாதன இந்துத்துவ ஆட்சியை நிறுவப் பார்க்கிறது. அதை நாங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?’ என்று அவரிடம் ஆலோசனை கேட்பேன்!

வி.ஐ.பி டின்னர்! - ஜி.ராமகிருஷ்ணன்

கலைஞர் கருணாநிதிக்கு அறிவாலய அரங்கில் விருந்து!

``பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காட்சியேந்தல் என தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நான்கு ஊராட்சிகளில் தேர்தல் நடந்தும், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பால், பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏற்க முடியாமல் இருந்தனர். பத்து வருடங்களுக்கு ஒரு முறை இட ஒதுக்கீடு மாறும். அந்த வகையில், அந்த நான்கு ஊராட்சிகளும் பொதுப்பிரிவுக்கு மாறவிருந்தன. அப்போது நானும் தோழர் என்.வரதராஜனும் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தோம். நான் கலைஞரிடம், ‘பத்து வருடங்களாக அவர்கள் பொறுப்புக்கு வர முடியவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் அதைப் பொதுப்பிரிவுக்கு மாற்றினால், தமிழ்நாடு முழுவதும் தலித் மக்கள் இப்படியான பொறுப்புக்கு வர முடியாமலேயே போய்விடும். சட்டத் திருத்தம் செய்து அதைத் தலித் மக்களுக்கானதாகவே தொடரச் செய்ய வேண்டும்’ என எடுத்துச் சொன்னேன். உடனடியாக அதிகாரிகளைக் கூப்பிட்டு அதைச் செய்து முடித்தார் கலைஞர். அதற்காக அவருக்கு ஒரு டின்னர் கொடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்குப் போகும்போது ஓர் இனிப்பு, ஒரு வடை, ஒரு காபி கொடுப்பார். அறிவாலயக் கூட்ட அரங்கில், அவற்றையே அவருக்கும் கொடுத்து ஒரு சந்திப்பு நிகழ்ந்தால் அருமையாக இருக்கும். வி.பி.சிந்தனுடன் உரையாடிய அதே விஷயங்கள் குறித்துத்தான் கலைஞருடனும் விவாதிப்பேன்!’’

இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு ஊட்டியில் விருந்து!

``தான் எடுக்கின்ற திரைப்படங்கள் வசூலில் வெற்றிபெறுகிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சமூகத்துக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அதேவேளையில், வெற்றிகரமான இயக்குநராகவும் வலம்வந்தவர் அவர். அவரின் கடைசித் திரைப்படமான ‘தலைமுறைகள்’ படத்தின் பிரிவியூ ஷோவுக்குப் போய் படம் பார்த்துவிட்டு, ‘இது தலைமுறை, தலைமுறையாக மக்கள் பார்க்கவேண்டிய படம்’ என எங்கள் பத்திரிகையில் விமர்சனம் எழுதினேன். அவரைப் போன்ற இயக்குநர்கள்தான் தற்போது நாட்டுக்குத் தேவை. இப்போதைய சூழலில், அவருக்குப் பிடித்தமான உணவுடன், அவருக்குப் பிடித்தமான ஊட்டியில் அவருக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும். அவரிடம், `நாடு இப்போதிருக்கும் சூழலில் என்ன மாதிரியான சமூக அவலங்கள் குறித்து நீங்கள் படம் எடுப்பீர்கள்?’ என்று கேட்பேன்!’’

என்.சங்கரய்யாவுக்கு ஜூலை 15-ல் அவர் வீட்டில் விருந்து!

``தன் வழக்கறிஞர் படிப்பின் இறுதிப் பரீட்சைக்கு 15 நாள்கள் இருந்தபோது, பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுதந்திரப் போராட்ட வீரரான சங்கரய்யா. அவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த பிறகு, ‘உங்கள் தந்தை நீங்கள் வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், இறுதிப் பரீட்சைக்கு 15 நாள்கள் இருந்தபோது நீங்கள் கைதுசெய்யப்பட்டீர்கள். எப்போது விடுதலையாவோம் என்றே தெரியாத நிலை. அப்போது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?’ என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘நாட்டு விடுதலைக்காக ஜெயிலுக்குப் போகிறோம் என்கிற உந்துசக்திதான் அப்போது என்னை இயக்கியது’ என பதிலளித்தார். அப்படி, தன்னலம் கருதாது நின்ற ஒரு போராளிக்கு மரியாதை செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை 15-ம் தேதி அவரின் பிறந்தநாளன்று அவரின் வீட்டுக்கு வாழ்த்தப்போகும்போது, அருமையான காலைச் சிற்றுண்டி கொடுப்பார். இந்த வருடமும் அவரின் பிறந்தநாளில், அவரின் வீட்டுக்குப் போய் அதே உணவுகளை நான் விருந்தாகக் கொடுக்க வேண்டும். அவரிடம், `சுபிட்சமான வாழ்க்கை மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் நீங்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டீர்கள். ஆனால், அது கிடைக்கவில்லை. அது கிடைக்க என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்பேன்.’’

மைதிலி சிவராமனுக்கு அவரின் ஸ்பர்டேங்க் ரோடு வீட்டில் மதிய விருந்து!

``நான் சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஐ.நா மன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் தோழர் மைதிலி சிவராமன். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு நாட்டு மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்போடு சென்னைக்கு வந்துவிட்டார். கீழ்வெண்மணிக்கு நேரடியாகச் சென்று, அங்கு நடந்த அவலங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதில் அவரின் பங்கு முக்கியமானது. எனக்குத் திருமணமான பிறகு, நானும் என் மனைவியும் சென்னை ஸ்பர்டேங்க் ரோட்டிலுள்ள அவரின் வீட்டுக்கு விருந்துக்குப் போனோம். அதே வீட்டுக்குச் சென்று, அவருக்கு ஒரு மதிய விருந்து கொடுக்க விரும்புகிறேன். அவரிடம், `பெண்களுக்கு எதிரான அநீதிகளை, பாலியல் கொடுமைகளைத் தடுப்பதற்கு என்ன மாதிரியான போராட்டத்தை முன்னெடுப்பீர்கள்?’ என்று கேட்பேன்!’’