Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - கே.பாலகிருஷ்ணன்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - கே.பாலகிருஷ்ணன்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இரண்டாவது முறையாகத் தேர்வாகியிருக்கிறார் கே.பாலகிருஷ்ணன். கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கே உரிய எளிமையோடு அனைவரிடமும் பழகக்கூடியவர். நேரம் காலம் பார்க்காமல் கட்சிக்காகவும், கொண்ட கொள்கைக்காகவும் உழைத்துவருபவர். அவர் சிறப்பு டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்கள் யார் யார்?

அரசியல் வழிகாட்டி பி.ராமமூர்த்தி!

``நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, சிதம்பரத்துக்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தார் தோழர் ராமமூர்த்தி. என் நண்பர்களுடன் சென்று அவரைச் சந்தித்தேன். மாணவர்களாகிய எங்களின் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்தவர், எங்களுக்காக மூன்று நாள்கள் மார்க்சிய வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தார். அவர் எங்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு, எங்கள் கட்சித் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம், உமாநாத் ஆகியோரையும் அழைத்துவந்து வகுப்பெடுக்க வைத்தார். அந்த நாள்களை என் வாழ்வில் மறக்கவே முடியாது. தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருந்தவர், நான் கல்லூரி படித்து முடித்தபோது, ‘உங்களைப் போன்ற இளைஞர்கள் கட்சிக்கு முழு நேர ஊழியர்களாக வர வேண்டும்’ என்று எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார். அவரின் எளிமையான அணுகுமுறையின்மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் கட்சிக்குள்ளேயே வந்தேன். மிகச் சாதாரண எளிய உணவுகளைச் சாப்பிடக்கூடியவர் அவர். நாங்கள்தான் அவருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுப்போம். அவருக்கு எங்கள் கட்சி அலுவலகத்தில், அவர் விரும்பும் உணவுகளோடு ஒரு விருந்து கொடுக்க வேண்டும். மதவாத சக்திகள் அதிகாரத்தில் இருக்கும் இந்தச் சூழலில், அவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது குறித்து அவரிடம் உரையாடுவேன்!’’

எளிமையின் அடையாளம் கக்கன்!

``எனக்கு காங்கிரஸ் தலைவரான கக்கனை மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு நேரடியாகப் பழக்கமில்லாவிட்டாலும், அவருடைய எளிமையான வாழ்க்கையின்மீது எனக்கு உயர்ந்த மதிப்பு உண்டு. காமராஜர் அமைச்சரவையில், பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்தார். மக்களுக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தனக்கென்று எதையுமே செய்துகொள்ளவில்லை. கடைசியாக நோய்வாய்ப்பட்டு அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர், எம்.ஜி.ஆருக்கு விஷயம் தெரிந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய உதவியதாகச் செய்திகள் உண்டு. பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தும், மிக எளிமையாக வாழ்ந்த அவரின் வாழ்க்கை, அரசியலுக்கு வர விரும்பும் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம். நிச்சயமாக கக்கனும் எளிய உணவுகளை விரும்புபவராகத்தான் இருப்பார். மேலூருக்குப் பக்கத்திலிருக்கும் அவரின் சொந்த ஊரில் தேநீர் அருந்திக்கொண்டே அவருடன் உரையாட ஆசை. ‘பொதுவாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் எளிமையாக இருப்பார்கள். தங்களுக்காக எதையும் பெரிதாகச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், காங்கிரஸில் அமைச்சராக இருந்தும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததோடு, அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் இருந்திருக்கிறீர்கள்’ என்று அவரிடம் சொல்வேன்!”

வி.ஐ.பி டின்னர் - கே.பாலகிருஷ்ணன்

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

``பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சாதாரண மக்களுக்காக வாழ்ந்தவர். எளிய மக்களின் குரலாக ஒலித்தவர். அடித்தட்டு மக்களின் மீது இழைக்கப்படும் சுரண்டலையும், கிராமப்புறங்களில் நிலவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும் தன் பாடல்களில் கொண்டுவந்தவர். அப்படியான திரைப்படப் பாடலாசிரியர்கள் இப்போது குறைந்துபோய்விட்டனர். தற்போது நன்றாகப் பாடல்கள் எழுதக்கூடியவர்கள் இருந்தாலும், அவரைப் போல நேரடியாகப் பாடலில் அரசியலை எழுதுபவர்கள் யாரும் இல்லை. அவருடன் ஒரு வயற் பரப்பில் அமர்ந்து, கிராமப்புற உணவுகளோடு அவருக்கு ஒரு விருந்து கொடுக்க ஆசை. அவரிடம், ‘உங்களின் இடம் இன்னும் வெற்றிடமாக இருக்கிறது. திரைப்படப் பாடல்கள் கேளிக்கைக்கு மட்டுமே உரியதாக மாறிவிட்டன. உங்கள் பாடல்கள்தான் எங்களுக்கு இப்போதும் ஆசுவாசம்’ என்று என் நன்றியைப் பகிர்ந்துகொள்வேன்!”

சிறந்த நிர்வாகி மு.க.ஸ்டாலின்!

``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிதானமான அணுகுமுறை, நிர்வாகத்திறன் மீது எனக்கு ஒரு மதிப்பு உண்டு. அவர் தேநீர் விரும்பிச் சாப்பிடுகிறார். அதனால் அவருடன் மெரீனா கடற்கரையில் தேநீருடன் ஒரு சந்திப்பு அமைந்தால் நன்றாக இருக்கும். அவரிடம் பல விஷயங்கள் உரையாட வேண்டும். குறிப்பாக, `இந்த அரசு எல்லோருக்குமான அரசு என்று சொல்கிறீர்கள். ஆனால், உழைக்கும் மக்களைச் சுரண்டும் நிலவுடைமையாளர்கள், சுரண்டல் பேர்வழிகள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாகவும் இந்த அரசு இருந்தால் அது எப்படி ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசாக இருக்க முடியும்... பெரும்பகுதியான மக்களின் நலிந்த வாழ்க்கைக்கு அடிப்படைக் காரணமாக இருக்கக்கூடியவர்கள் அவர்கள்தான். அதனால் அவர்களை எதிர்க்கும் ஒரு கொள்கையை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதுதான், நல்ல வளர்ச்சிக்கான அறி குறியாக இருக்கும். முதலாளிக்கும் தொழிலாளிக்குமான அரசாக ஓர் அரசு இருக்க முடியாது. வசதி படைத்தவர் களிடம் எப்படிக் கூடுதலாக வரிகளை எடுத்து ஏழைகளுக்கு உதவ முடியும் என்று பாருங்கள்’ என்று அவரிடம் உரையாடுவேன்!”

பழகுவதற்கு இனிமையானவர் தொல்.திருமாவளவன்!

``அடித்தட்டு மக்களுக்காக உழைத்துவருபவர், பழகுவதற்கு இனிமையானவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அதனால், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தற்போது நோன்பு கடைப்பிடித்துவருகிறார். அதனால் அதற்கேற்ற இடம், உணவுகளுடன் அவருக்கு ஒரு விருந்து கொடுக்கலாம். பட்டியல் இன மக்களின்மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டும். அதேவேளையில், இதர சமூகத்தில் இருக்கிற உழைப்பாளி மக்களையும் சேர்த்து ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், அணியை உருவாக்குவது குறித்தும் அவரிடம் விவாதிக்கவேண்டியிருக்கிறது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism