Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - கே.எஸ்.அழகிரி

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

தீண்டாமை ஒழிப்பும், தலித்துகளுக்கான முழுமையான உரிமைகளும்தான் அம்பேத்கரின் மனதில் இருந்த விஷயங்கள்.

வி.ஐ.பி டின்னர் - கே.எஸ்.அழகிரி

தீண்டாமை ஒழிப்பும், தலித்துகளுக்கான முழுமையான உரிமைகளும்தான் அம்பேத்கரின் மனதில் இருந்த விஷயங்கள்.

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக, கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாகச் செயல்பட்டுவருபவர் கே.எஸ்.அழகிரி. அரசியல் களத்தில் பிஸியாக இருந்தவரிடம், அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணத்தையும் கேட்டறிந்தோம்!

சரித்திர நாயகன் ஆபிரஹாம் லிங்கனுக்கு மரியாதை!

``என் முதல் விருப்பம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன். இன்றைய காலகட்டம் என்பது வேறு. ஆனால், இன வேற்றுமைக்கு எதிராகப் பல்லாண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் ஒரு யுத்தத்தை முன்னெடுத்த நாயகன் அவர். அனுபவ அறிவின் மூலம் உலகத்தை நன்றாகத் தெரிந்துவைத் திருந்தார். அவருடைய அறிவாற்றலுக்கும், போராட்ட குணத்துக்கும் அவருக்கு விருந்தளிக்க வேண்டும். `இனவெறிக்கு எதிராகச் செயல்பட வேண்டும், செல்வாக்குமிக்க நிலப்பிரபுக்களை எதிர்த்து அதற்காக ஒரு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற சிந்தனை எப்படி உருவானது?’ என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மரங்களடர்ந்த, மனித நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில், அவருக்கு மிகவும் பிடித்த இஞ்சி போட்ட தேநீரை என் கையாலேயே தயாரித்து அவருக்குக் கொடுக்க விருப்பம்!’’

அண்ணல் அம்பேத்கரிடம் அறிந்துகொள்ள ஆசை!

``தீண்டாமை ஒழிப்பும், தலித்துகளுக்கான முழுமையான உரிமைகளும்தான் அம்பேத்கரின் மனதில் இருந்த விஷயங்கள். ‘சுதந்திரம் கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்பது காந்தியின் நிலைப்பாடு. ஆனால், சமத்துவ சமுதாயத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது அம்பேத்கரின் நிலைப்பாடு. ஆனால், அம்பேத்கரே தன் கடைசி காலத்தில், `நான் வேறு ஓர் இயக்கத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், என்னை அரசியல் சட்டத்தை எழுத அனுமதித்ததற்காகவும், அரசியல் சட்டக்குழுவில் பெரும்பாலானோர் என்னுடைய கருத்துகளுக்கு எதிராக இருந்தபோதும்கூட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்கிற இரண்டு பெரிய மனிதர்கள் என்னுடைய கருத்துகளுக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலும்தான், என்னால் எழுதி வெற்றிபெற முடிந்தது’ என்று எழுதியிருக்கிறார். அவருடைய மனதில் ஆரம்ப காலத்தில் இருந்த உணர்வுகளுக்கும், கடைசிக்காலத்தில் இருந்த உணர்வுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பம். காந்தி ஆசிரமத்தில், அம்பேத்கருக்குப் பிடித்த உணவுகளோடு அவருக்கு விருந்தளித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்!’’

பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு என் கேள்வி!

``நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அத்வானியின் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். மிகச் சிறப்பாகவும் பொறுப்பாகவும் பேசக்கூடியவர். எல்லோரையும்விட, இந்திய வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்தவர். `இந்தியாவில் இருந்த முகலாய மன்னர்களாக இருந்தாலும் சரி, இந்து மன்னர்களாக இருந்தாலும் சரி தங்களுடைய படையெடுப்பில் வெற்றிபெற்றால் எதிராளியின் தலைநகரத்தை அல்லது அவர்களின் அரண்மனையை முற்றிலுமாக அழிப்பது, பெண்களைச் சிறைபிடிப்பது போன்ற வேலைகளில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படி, பாபருடைய படைத்தளபதி ஓர் இந்துக்கோயிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு மசூதியைக் கட்டினான் என்பதற்காக, ஒரு காட்டுமிராண்டி செய்த செயலை நீங்கள் திரும்பவும் செய்ய வேண்டுமா... அரசியலுக்காக அதைச் செய்தீர்களா அல்லது மதம் உங்களைச் செய்யத் தூண்டியதா, உங்கள் சிந்தனைக்குக் குறுக்கே மதம் நின்றதா?’ என்கிற கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். நாடாளுமன்ற மைய மண்டபத்தில், பிரமாதமான குலோப் ஜாமுன் கிடைக்கும். அதோடு, ஒரு தேநீரும் கொடுத்து அவரிடம் இந்த விஷயங்களைக் கேட்க வேண்டும்!’’

வி.ஐ.பி டின்னர் - கே.எஸ்.அழகிரி

பாரதிராஜாவுக்கு ‘முதல் மரியாதை’ நீராகாரம்!

`` `முதல் மரியாதை’ என்கிற திரைக்காவியத்தை எடுத்ததற்காகவே பாரதிராஜாவுக்கு ஒரு விருந்து கொடுக்க வேண்டும். அந்தப் படம் குறித்து இரண்டு விஷயங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, பாரதிராஜா சொன்ன மாதிரி சிவாஜி நடித்தாரா இல்லை சிவாஜி நடித்ததை பாரதிராஜா அப்படியே ஏற்றுக்கொண்டாரா... அடுத்ததாக, ராதாவை அப்படி நடிக்கவைத்தது குறித்து. வெகுளியான, தைரியமான, பக்குவமான முகம்கொண்ட ஒரு கிராமத்துப் பெண்ணாக ராதா நடித்திருப்பார். அவர் உடை உட்பட அந்தக் கதாபாத்திரத்தை எப்படி இவ்வளவு சிறப்பாக உருவாக்கினீர்கள் என்று அவரிடம் கேட்க வேண்டும். சிதம்பரத்துக்குப் பக்கத்திலுள்ள கீரப்பாளையம்தான் என் சொந்த ஊர். `முதல் மரியாதை’ படத்தில் வரும் கிராமம்போல்தான் என் ஊரும் இருக்கும். அங்கே சிவாஜிக்கு ராதா கொடுத்த நீராகாரத்தையே அவருக்கு விருந்தாகப் படைக்க வேண்டும்!’’

ஸ்டீபன் ஹாக்கிங்குடன் கருந்துளை குறித்த விவாதம்!

``எனக்குப் பிரபஞ்சத்தைப் பற்றி, கிரகங்களைப் பற்றி, நட்சத்திரங்களைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். ஆனால், பிரபஞ்சத்தைப் பற்றிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் பதிவுகள் என்னை உறக்கம் இல்லாமல் செய்திருக்கின்றன. அவரின் விளக்கங்கள் மிகுந்த அச்சத்தை வரவழைத்திருக்கின்றன. கருந்துளைகள் பற்றி அவரின் குறிப்புகள் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. அவருக்கு விருந்து கொடுத்து, கருந்துளையைப் பற்றி இன்னும் விரிவாக விவாதிக்க ஆசை. எனக்கு மிகவும் பிடித்தமான இடம் சிம்லா. இயற்கைப் பேரழகு நிறைந்த அந்த நகரத்தில், அவருக்குப் பிடித்த உணவுகளோடு விருந்தளிக்க வேண்டும்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism