Published:Updated:

வி.ஐ.பி டின்னர்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

எத்தனை வேலைகள் இருந்தாலும் சரி... உடல் ஆரோக்கியத்துக்கும், உணவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். எங்கு சென்றாலும் ஆரோக்கியமான உணவுகளைத் தேடி உண்பவர், தான் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணங்களையும் ‘சுவை’யோடு பகிர்ந்துகொண்டார்!

கலைஞருக்கு விறால் மீன் விருந்து!

``அப்போது எனக்கு 15 வயது இருக்கும்... சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையைத் திறந்துவைக்க அன்றைய முதல்வர் கலைஞர் வருகை புரிந்தார். சுரங்கப்பாதையைத் திறந்துவைத்துவிட்டு, அவரது அம்பாசிடர் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, கையசைத்தபடி சென்றார். அப்போது அவரைப் பார்த்துக் கையசைத்தவர்களில் நானும் ஒருவன். அவர்மீதான ஈர்ப்புதான் என்னை தி.மு.க-வுக்கு இழுத்துவந்தது. சென்னை மேயராக இருந்தபோது அவருடன் பலமுறை உணவருந்தியிருக் கிறேன். இலையில் தேவைக்கு அதிகமாக உணவு வாங்கிப் போட்டுக்கொள்வது அவருக்குப் பிடிக்காது. உணவு உண்பதில் நேரம் தவறாமையைக் கற்றுக்கொடுத்தவரும் அவர்தான். வாய்ப்பு கிடைத்தால் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவருக்கு பிடித்தமான விறால் மீன் குழம்புடன் அவருக்கு விருந்து படைத்து, நாடு முழுவதும் சமூகநீதிக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை அகற்றுவதற்கான வழிகளைக் கேட்டறிவேன்!”

தலைவர் ஸ்டாலினுக்கு நாட்டுக்கோழி விருந்து!

``கட்சியில் சேர்ந்த நாள் முதல் தலைவர் ஸ்டாலினுடன் பயணித்துவருகிறேன். எனது எல்லா வளர்ச்சிக்கும் அவர்தான் காரணம். 2002-ல் ஒரு விபத்தில் சிக்கி மரண தேவனின் வாசல் வரை சென்றுவிட்டேன். அப்போது பதறியடித்துக்கொண்டு அண்ணன் நேருவிடம் சொல்லி, என்னை திருச்சி கே.எம்.சி-யில் அனுமதித்து எனக்கு மறுபிறப்பு கொடுத்தவர் ஸ்டாலின். தலைவருடனும் நிறைய முறை உணவருந்தியிருக்கிறேன்... இப்போதும் அடிக்கடி ஒன்றாகச் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கிறது. இருந்தாலும் தலைவர் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அவர் மிகவும் நேசிக்கும் அவரின் பேரக்குழந்தைகளுடன், அவரது சித்தரஞ்சன் சாலை வீட்டில், அவருக்கு மிகவும் பிடித்தமான நாட்டுக்கோழிக் குழம்புடன் விருந்து படைக்க விரும்புகிறேன். அப்படிச் சாப்பிடும் நேரத்தில்கூட தலைவர் என் துறை சார்ந்த கேள்விகளைக் கேட்டு விசாரிப்பார் என்பதால், அதற்கும் தயாராகவே செல்வேன்!’’

வி.ஐ.பி டின்னர்

சர்க்கரைப் பொங்கலைவிட இனித்த வைரமுத்து கவிதை!

``அரசியலைத் தாண்டி என்னை மிகவும் கவர்ந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. எப்போது அவருடன் சென்றாலும் என் வயிற்றையும் மனதையும் நிறைக்காமல் அனுப்பியதில்லை. ஒருமுறை அவருடன் சென்றபோது, சர்க்கரைப் பொங்கலை அள்ளி அள்ளிக் கொடுத்தார். அப்போது அவர் சொன்ன கவிதை ஒன்று, சர்க்கரைப் பொங்கலைவிட இனித்தது. அவர் எப்போதுமே என்னை ‘வாங்க மேயர்’ என்றே அழைப்பார். என்னைக் கட்டிப்பிடித்து ‘உங்க ஆரோக்கியத்தின் ரகசியம் சொல்லுங்க’ என்பார். என்னைச் சாப்பிடவைத்து அழகுபார்த்த அவருக்கு, நான் விருந்தளிக்க வேண்டும். வைரமுத்துவின் வீட்டுக்கு எதிரே மாநகராட்சி பூங்கா உள்ளது. கடந்த தி.மு.க ஆட்சியில் அங்கு திருவள்ளுவர் சிலையை வைத்தோம். அவர் பாடல் எழுதும்போதுகூட அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டேதான் எழுதுவார். அதனால், வைரமுத்துவுக்குப் பிடித்த திருவள்ளுவர் சிலை அருகே அவருக்கு விருந்து படைத்து... பதிலுக்கு அவரது கவிதை விருந்தை நான் ரசிப்பேன்!’’

குலதெய்வத்துக்கும் டாக்டருக்கும் பிரியாணி விருந்து!

``என் இளைய மகன் அன்பழகன். அவனால் நடக்க முடியாது... பேச முடியாது. `அம்மா’, `அப்பா’ என்று மட்டுமே சொல்வான். நான் வீட்டுக்கு வரும்வரை விழித்திருப்பான். அவன்தான் எங்கள் குலதெய்வம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் அவன் உயிரிழந்துவிட்டான். நான் சாப்பிடும்போதெல்லாம் அவனுக்கும் ஒரு வாய் ஊட்டிவிடுவேன். திரும்பவும் அந்த வாய்ப்பு கிடைக்காது. ஒருவேளை கிடைத்தால் எங்கள் குலதெய்வத்துக்கு, அவனுக்குப் பிடித்தமான மட்டன் பிரியாணியை ஊட்டிவிட ஆசை. என் இரண்டு பிள்ளைகளையும் நான் பிரித்துப் பார்க்க இயலாது. அதனால், லண்டனில் மருத்துவராக பணிபுரியும் என் மூத்த மகன் இளஞ்செழியனுக்கு விருந்து கொடுக்க ஆசை. அவர் மாஸ்கோவில் மருத்துவம் படித்தபோது வாரம் ஒருமுறை போனில் பேசுவோம். அப்போது என்னிடம் பெரிய அளவில் வசதி இல்லாததால், என் நண்பரின் அலுவலகம் சென்று அங்குள்ள போனில் மகனுடன் பேசுவேன். இளஞ்செழியனுக்குப் பிடித்தமான பிரியாணியை என் சைதாப்பேட்டை வீட்டில் வைத்துப் பரிமாற விரும்புகிறேன்!’’

தொழிற்சங்கவாதி சிந்தனுக்கு சைவ விருந்து!

``1980-ல் நான் தி.மு.க தொண்டனாக இருந்தபோது பாலு கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்குள்ள ஊழியர்களின் அமைப்பின் தலைவராகவும் இருந்தேன். பெண் ஊழியர்கள் பிரச்னைக்காக அப்போதைய அ.தி.மு.க அரசை எதிர்த்து 500 பெண்களுடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினேன். அன்றைய தினம் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் நேருக்கு நேர் நின்று கேள்விகளைக் கேட்டது பத்திரிகைகளில் வெளியானது. அன்று மாலை என்னை வீட்டுக்கு அழைத்த சி.ஐ.டி.யூ தொழிற்சங்கவாதியான முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.சிந்தன், “நீங்கள் எங்கள் கட்சியில் இருக்கவேண்டியவர் தோழர்” என்று பாராட்டினார். அவருடன் பழகினேனே தவிர அவருடன் உணவு உண்டதில்லை. இப்போது அவர் இல்லாவிட்டாலும் ஒரு வாய்ப்பு அமைந்தால், அவரது அதே இல்லத்தில் அமர்ந்து, அவருக்குப் பிடித்த சைவ உணவு வகைகளைப் பரிமாறி விருந்து படைக்க ஆசை!”