Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - நாஞ்சில் சம்பத்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - நாஞ்சில் சம்பத்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

தமிழ்நாட்டில் அறிமுகம் தேவையில்லாத ஆளுமைகளுள் ஒருவர் நாஞ்சில் சம்பத். எந்த இயக்கத்தில் அவர் இருந்தாலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எப்போதும் லைம்லைட்டில் இருப்பவர். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து நபர்களையும், அதற்கான காரணங்களையும் இந்த வார வி.ஐ.பி டின்னர் பகுதியில் கேட்டறிந்தோம்...

முதல்வர் ஸ்டாலினுக்கு தயிர்சாதம், வத்தக்குழம்பு விருந்து

``1986 நவம்பர் மாதத்தில் கோவை சிதம்பரம் பூங்காவில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு முதல் மாநாட்டுப் பேச்சு. அந்த மாநாட்டில் நானும் பேசினேன். அந்தக் காலகட்டத்தில், அவர் பேசும் அனைத்துக் கூட்டங்களிலும் அவருக்கு முன்பாக நான் பேசுவேன். இரவு பொதுக்கூட்டம் முடிந்த பிறகு, ஏதாவதொரு கழகத் தோழர் வீட்டில் விருந்து நடக்கும். அந்த நாள்களில் அவரோடு ஒன்றாகச் சாப்பிட்ட நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன. நான் அவரைக் கடந்தகாலத்தில் கடுமையாக விமர்சித்தபோதும் என்னிடம் பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார். அவர் தயிர்சாதம் விரும்பிச் சாப்பிடுவார் என்று அண்ணி சொல்லியிருக்கிறார். எனவே, கன்னியாகுமரியில் என் வீட்டில் தயிர்சாதம், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம் சமைத்து அவருக்கு விருந்து கொடுக்க விரும்புகிறேன். `தி.மு.க-வை வீழ்த்த நினைக்கிறவர்களை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுப்பதற்கு, கொள்கைரீதியான பிரசாரத்தை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்த வேண்டும். அதற்கு நானும் உங்களுக்கு உதவுவேன். எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்’ என்று கேட்பேன்.’’

ஆசிரியர் வீரமணிக்கு பெரியார் திடலில் விருந்து

``என் முதல் மேடை ஆசிரியர் வீரமணியுடனான மேடைதான். கல்லூரி மாணவனாக, கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு, கோட்டார் ரயில்வே ஃபீடர் ரோட்டில் ஆசிரியருக்கு முன்பாக நான் பேசிய நினைவுகள் இன்றும் என் நெஞ்சில் விலகாமல் இருக்கின்றன. அன்றைக்கு நான் பேசி முடித்துவிட்டு, கீழே இறங்க முயன்றபோது, `அவரை மேடையில் உட்காரவையுங்கள்’ என்று ஆசிரியர் சொன்னார். நான் அன்றிலிருந்து அவரைக் கொண்டாடித்தான் வருகிறேன். வரும் டிசம்பர் 2-ம் தேதியோடு அவருக்கு வயது 90. ஆனால், இப்போதும் ஓர் இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரின் இடையறாத உழைப்புக்கும், ஓய்வறியாத பயணத்துக்கும் மரியாதை செய்யும் வகையில் அவருக்கு ஒரு விருந்து வைக்கவிரும்புகிறேன். அவருக்கு விருப்பமான பெரியார் திடலிலேயே அவருக்குப் பிடித்த உணவுகளோடு அந்த நிகழ்வு நடைபெறும். அவரிடம், `சாதி ஒழிப்புப் பிரசாரத்துக்கு மதுரையில் எனக்கு விருது தந்தீர்கள். ஆனால், சாதிக்கு எதிராக இவ்வளவு பிரசாரங்களை மேற்கொண்டும் அதை ஒழிக்க முடியவில்லையே அது ஏன்...’ என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.’’

தமிழிசை சௌந்தரராஜனுக்கு விதவிதமான மீன் விருந்து

``ஆளுநர் தமிழிசை அவர்கள் சமீபத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேடையில், ‘அண்ணா விருதுபெற்றவர் என்னை ஒருமையில் பேசினார்’ என்று என்னை விமர்சித்தார். எப்போதோ யூடியூப் சேனல் பேட்டியில் நடந்த நிகழ்வு அது. அதற்காக நான் எட்டு வழக்குகளையும் பல இன்னல்களையும் சந்தித்துவிட்டேன். நானே அதையெல்லாம் மறந்துவிட்டேன். ஆனால், இவர் நினைவுபடுத்திய பிறகு, தமிழ்நாட்டில் பல இடங்களில் என்னைத் தாக்கப் பார்த்தார்கள். போலீஸ் பாதுகாப்போடுதான் மீட்கப்பட்டேன். `நான் கடுமையாக விமர்சித்திருந்தால்கூட இவ்வளவு கடுமையாக என்னிடத்தில் ஏன் நடந்துகொள்கிறீர்கள்... நான் பெண்மையை, தாய்மையை மதிக்கிறவன். அதற்காக, என் கொள்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். அதனால், என்னை மிரட்டி மீன்பிடிக்கிற வேலையை விட்டுவிடுங்கள் அம்மா’ என அவருக்கு விருந்து கொடுத்து கேட்டுக்கொள்வேன். அவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆதலால் மீன் விரும்பிச் சாப்பிடுவார் என்று கருதுகிறேன். விதவிதமான மீன் வகைகளைச் சமைப்பதில் என் மனைவி கைதேர்ந்தவர். அதனால், என் வீட்டில் மனைவியின் கையால்  அவருக்கு விருந்து பரிமாறுவேன்.’’

வி.ஐ.பி டின்னர் - நாஞ்சில் சம்பத்

மதுரை ஆதீனத்துக்கு மடத்தில் விருந்து

``இவருடன் சமீபத்திய சர்ச்சை குறித்துப் பேச விரும்புகிறேன். `தேவார முதல்வர் ஞானசம்பந்தர் பெருமான் தொடங்கிய மடத்தில் இருந்துகொண்டு இன்றைக்கு ஒரு மோசமான அரசியலைத் தமிழ்நாட்டில் முன்னெடுக்கிறீர்கள். மனிதனை மனிதன் தூக்குவது என்பது அடிமைத்தனம். பல்லக்கிலிருந்து சங்கராசார்யரே இறங்கிவிட்டார் என்பதுதான் தமிழ்நாட்டில் நடந்திருக்கிற கதை. ஆனால், நெற்றி நிறைய நீறுபூசி, ருத்திராட்சம் அணிந்து, சிவாயநம என சிந்தித்திருக்கிற ஓர் ஆதீனகர்த்தாவாகிய நீங்கள் பேசியதெல்லாம் நலம்தானா, நன்மைதானா, ஞானசம்பந்த மடத்துக்கு இது பெருமை சேர்க்கிற விஷயந்தானா’ என்று மனம் திறந்து பேசுவேன். ஆதீன மடத்திலேயே என்னுடைய செலவில் அவருக்கு விருந்து கொடுத்து உரையாடுவேன்!’’

நயன்தாராவுக்கு நட்சத்திர விடுதியில் விருந்து

``2014-ல்நான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, விடுதலை ஆன நாளன்று, திருப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசினேன். அப்போது, ‘அடக்குமுறைச் சட்டத்தைக் காட்டி என்னை மிரட்ட முடியாது. என் தலைவன் ஆணையிட்டால் நயாகராவில் குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன், நயன்தாராவை இழுத்து வரச் சொன்னாலும் வருவேன்’ என்று சொன்னேன். `நயன்தாராவை ஏன் இப்படிச் சொன்னீர்கள்?’ என்று என்னிடம் பலபேர் கேட்டார்கள். ‘தமிழ்நாட்டு மேடை உலகத்தில் மார்க்கெட் சரியாமல் இருப்பவன் நான். சினிமா உலகத்தில் மார்க்கெட் சரியாமல் இருப்பவர் அவர். அதனால் இருவருக்கும் இப்படி ஒரு பொருத்தமிருக்கிறது’ என விளக்கம் கொடுத்தேன். அவருக்குப் பிடித்த நட்சத்திர விடுதியில் அவர் விரும்புகிற உணவுகளோடு விருந்து கொடுப்பேன். விரைவில் திருமணம் என்று வரும் தகவல்களைக் குறித்துக் கேட்டு, அவருக்கு வாழ்த்துச் சொல்வேன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism