Published:Updated:

வி.ஐ.பி டின்னர்! - செல்லூர் ராஜூ

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர்! - செல்லூர் ராஜூ

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

மதுரை அ.தி.மு.க என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தான். மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தன் மீதான விமர்சனங்களைக்கூடச் சிரித்த முகத்தோடு நேர்மறையாக அணுகக்கூடியவர். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்கள் யார் யார்... ஏன்... அவர்களிடம் என்ன பேசுவார்?

பாரதப் பிரதமர் மோடிக்குப் பாசத்தோடு கறி விருந்து!

``இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு, நம் இந்தியாவுக்குக் கிடைத்த வலுவான தலைவர் பிரதமர் மோடி அவர்கள்தான். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய உழைப்பால் இன்று சிகரத்தைத் தொட்டிருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டுசேர்த்துவருகிறார். தமிழ் கலாசாரத்தின் அடையாளமான மதுரையில்வைத்து அவருக்கு விருந்து கொடுக்க விரும்புகிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்யவைக்க விருப்பம். அதோடு, கறியை வைத்து என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்துபார்த்தவன் மதுரைக்காரன். கறியின் அத்தனை டிஷ்களையும் செய்து அவருக்குப் பரிமாற ஆசை. `உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான விடுதலை வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ உள்ளிட்ட கோரிக்கைகளை அவரிடம் முன்வைப்பேன்!’’

அண்ணன் எடப்பாடியாருக்கு அன்பான மீன் விருந்து!

``விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, படிப்படியாக முன்னேறி தலைமையின் நம்பிக்கையைப் பெற்று முதல்வரானவர் அண்ணன் எடப்பாடியார். அம்மா மறைந்த பிறகு, இந்த ஆட்சி அவ்வளவுதான் எனப் பலரும் கொக்கரித்த நிலையில், நான்காண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டவர். அனைவரிடமும் எளிமையாகப் பழகும் சிறந்த மனிதர். நான்வெஜ் உணவுகள் அனைத்தையும் விரும்பிச் சாப்பிடுவார் அண்ணன். அவருக்கு மீன் வறுவல், நண்டுக் குழம்பு, கறி வகைகளோடு மதுரையில் என் வீட்டில்வைத்து விருந்து கொடுக்க ஆசை. அவரிடம் `கட்சியை இன்னும் வலுப்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆர் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். உங்கள் தலைமையில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர ஒவ்வொரு தொண்டனையும் ஈர்த்து அரவணைத்துச் செல்லுங்கள்’’ எனக் கேட்டுக்கொள்வேன்!’’

ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்ஸுக்குச் சிறுதானிய விருந்து!

``அம்மா முதல்வர் பதவி வகிக்க முடியாத சூழலில், அண்ணனுக்கு அந்தப் பதவி கிடைக்கிறது. ஆனால், அம்மாவின் இருக்கையில்கூட அமராமல் சிறப்பாகப் பணியாற்றி, அம்மா வந்த பிறகு மிகுந்த விசுவாசத்தோடு மீண்டும் அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தவர். தென் தமிழகத்தில் பிறந்தவர். எங்களுக்கு அடையாளம் பெற்றுத் தந்தவர். ஜல்லிக்கட்டு நாயகன் அவர். எந்தவொரு சூழ்நிலையிலும் நிதானமிழக்காதவர். முன்பு நான்வெஜ் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார். ஆனால், இப்போது சைவ உணவுகளைத்தான் சாப்பிடுகிறார். அதிலும் சிறுதானியங்களைத்தான் அதிகம் சாப்பிடுகிறார். அவருக்குச் சிறுதானிய உணவுகளோடு என் வீட்டில் விருந்து கொடுக்க ஆசை. `நீங்கள் வெளியிடும் அறிக்கைகளை நான் விரும்பிப் படிக்கிறேன், சிறப்பாக இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான அறிக்கைகள் வேண்டுகோள்விடுக்கும் தொனியிலேயே இருக்கின்றன. அதை மாற்றி அம்மாவைப்போல ஆணித்தரமாக, கட்டளையிடும் வகையில் உங்கள் அறிக்கைகள் வெளியாக வேண்டும்’ என்று கேட்டுக்கொள்வேன்!’’

வி.ஐ.பி டின்னர்! - செல்லூர் ராஜூ

அமைச்சர் துரைமுருகனுக்கு ‘கலகல’ விருந்து!

``அவை முன்னவர், நீர்வளத்துறை அமைச்சர், அண்ணன் துரைமுருகனுக்கு விருந்து கொடுக்க ஆசை. நீண்டகாலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். மிக அனுபவம் வாய்ந்தவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். அதேவேளையில், எம்.ஜி.ஆர் தனியாகக் கட்சி ஆரம்பித்தபோது அங்கு செல்லாமல், கொண்ட கொள்கைக்காக தி.மு.க-விலேயே கலைஞரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு இருந்துவிட்டார். சட்டசபையில் ஈகோ பார்க்க மாட்டார். அவர் இருந்தால் சபையே மிகவும் கலகலப்பாக இருக்கும். அவருக்கு என்னென்ன உணவுகள் பிடிக்கும் எனக் கேட்டு, அதை என் வீட்டில் சமைத்து அவருக்கு விருந்து கொடுக்க வேண்டும். அவரோடு கலகலப்பாகப் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டும். ‘ `சட்டமன்ற வரலாற்றில் துரைமுருகனின் பங்கு’ என நீங்கள் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும். நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறீர்கள், உங்கள் காலத்திலாவது முல்லைப்பெரியாறு, காவிரி ஆறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொள்வேன்!’’

அண்ணாமலைக்கு அரிசீம் பருப்பு சாத விருந்து!

``தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருக்கிற அண்ணாமலைக்கு விருந்து கொடுக்க ஆசை. அவருடன் எனக்கு அதிக பழக்கம் கிடையாது. ஆனால், கொள்கை பெரிதென்று தன் ஐ.பி.எஸ் பதவியைத் துறந்து அரசியலுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், மிகச்சிறப்பாகக் கட்சிப்பணி செய்துகொண்டிருக்கிறார். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவரையும் ‘அண்ணா’ என அவர் அழைத்துப் பேசுவது எனக்கு அவர்மீதான மரியாதையை அதிகப்படுத்தியது. அடுத்த தலைமுறையின் அடையாளமாக அவரை நான் பார்க்கிறேன். கொங்கு ஸ்பெஷல் அரிசீம் பருப்பு சாதம் உள்ளிட்ட உணவுகளை அவருக்குப் பரிமாற வேண்டும். `உங்கள் கட்சியை நன்றாக வளர்த்தெடுங்கள். ஆனால், திராவிடக் கட்சிகளைக் குறை சொல்லாதீர்கள். இந்த ஐம்பதாண்டுக்கால ஆட்சியில்தான், தமிழகம் மற்ற மாநிலங்களைவிடப் பல்வேறு விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. திராவிட இயக்கங்களை அழிப்பதைப் போன்ற பேச்சுகள் வேண்டாம்’ என்கிற அறிவுரையை அவருக்குச் சொல்வேன்!’’