Published:Updated:

வி.ஐ.பி டின்னர்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

பரபரப்பான அரசியல் களம் தவிர்த்து கலை, இலக்கியம், தொன்மம் குறித்த ஆர்வமும் தேடலும் உடையவர், தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு!

அதனால்தான், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சராகவும் அவரே நியமிக்கப்பட்டிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம், அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து விஐபி-களையும், அதற்கான காரணத்தையும் கேட்டறிந்தோம்...


கலைஞருடன் பாசந்தியும் பாசமிகு உரையாடலும்!

தலைவர் இல்லாத இந்த நாள்களில், அவருடனான உரையாடல்களை நான் அதிகமாக மிஸ் செய்கிறேன். அதனால், அவருடன் ஒரு சந்திப்பு அமைந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டுமானத்தின்போதும், தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டுவிழா கண்காட்சி அரங்கு நடத்தியபோதும், புதிய தலைமைச் செயலகத்திலும் கலைஞருடன் நிறைய மாலை நேர உரையாடல்கள் எனக்குச் சாத்தியப்பட்டன. பழைய செய்திகள், உதாரணங்களுடன் கொள்கை விளக்கங்கள் குறித்து அருமையாக வகுப்பெடுப்பார். புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில், அவருக்குப் பிடித்த, பாசந்தி, ஐஸ்க்ரீம், கட்லெட்டுடன் ஓர் உரையாடல் அமைந்தால் நன்றாக இருக்கும். கலைஞர் விரால்மீன் விரும்பிச் சாப்பிடுவார். பின்னாள்களில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார் என்றாலும், அவர் ஓகே சொன்னால், அவருக்காக விரால் மீனும் சமைத்து ஒரு விருந்து கொடுக்க ஆசை. ‘நீங்கள் சொன்ன பல திட்டங்களை, தளபதி மிகப்பெரிய தளத்தில் கொண்டுசெல்கிறார். அதைப் பார்க்கும்போது எத்தகைய உணர்வு ஏற்படுகிறது, கடந்த எட்டாம் தேதி நீட் குறித்து சட்டமன்றத்தில் தளபதி ஆற்றிய உரையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்’ என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல்!

ராமானுஜரும் சமூக சீர்திருத்தம் குறித்த உரையாடலும்!

`எம்பெருமானார்’, `பாஷ்யக்காரர்’, `உடையவர்’ எனப் பல பெயர்கள்கொண்ட ராமானுஜரைச் சந்தித்து உபசரிக்க ஆசை. காரணம், ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக யாரும் செய்யாத பல சமூக சீர்திருத்தங்களைச் செய்தவர் அவர். `மதத்தில் புரட்சி செய்த மகான்’ எனப் பெயரெடுத்தவர். உதாரணமாக, அவர், குளிக்கப்போகும்போது அவருடைய உறவினரான முதலியாண்டான் கையைப் பிடித்துக்கொண்டும், குளித்து முடித்த பிறகு குலத்தால் வேறுபட்ட வில்லிதாசர் கையைப் பிடித்துக்கொண்டும் வருவார் எனச் சொல்வார்கள். அதாவது, ‘குலத்தாழ்ச்சி இல்லை, எல்லோரும் ஓர் குலம்’ என்பதை வார்த்தையாக மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்த மகான் அவர். அவருடைய ஆசிரமத்துக்குச் சென்று, அவருக்குப் பிடித்த எளிய உணவுகளோடு அவருக்கு மரியாதை செலுத்த ஆசை. `அந்தக் காலத்தில், யாருக்கும் தோன்றாத சீர்திருத்த எண்ணங்கள் உங்களுக்கு மட்டும் எப்படித் தோன்றின’ என அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்!

வி.ஐ.பி டின்னர்

செம்பியன் மாதேவியும் பழையாறை அரண்மனையும்!

நான் மிகவும் மதிக்கக்கூடிய பெண்ணாளுமைகளுள் ஒருவர் செம்பியன் மாதேவி. பராந்தகன், கண்டராதித்தன், சுந்தரச்சோழன், ராஜராஜசோழன் உள்ளிட்ட ஐந்தாறு சோழப் பேரசர்களின் காலத்தில் வாழ்ந்தவர். தலைமுறைகள் தாண்டி எல்லோராலும் மதிக்கப்பட்ட ஓர் ஆளுமை. கோயில் கட்டடக்கலையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். சாதாரண செங்கல்தளிகளாக இருந்தவற்றைக் கற்றளிகளாக மாற்றியதோடு, அருமையான சிற்ப வேலைப்பாடுகளோடு அதைச் செய்தவர். கோயில்களில் தேவகோஷ்டங்களில் வைக்கக்கூடிய சிற்பங்களை மிகவும் உயிரோட்டமாக வடிவமைக்கும் பாணியைக் கடைப்பிடித்தவர். கும்பகோணம் பக்கத்தில் பழையாறை அரண்மனை இருந்த இடத்தில் அவரைச் சந்தித்து, அரச உணவுகளோடு மரியாதை செய்ய ஆசை. வாஷிங்டன் பிரியர் அருங்காட்சியகத்தில் அவருடைய சிலை இருக்கிறது. `அதுதான் உங்களுடைய உண்மையான உருவமா?’ என அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்!

ஐராவதம் மகாதேவனும் சொல்லவேண்டிய தகவலும்!

தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவனுடன் அதிகமாகப் பேசிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன் நான். அந்த வகையில் அவருடைய கடின உழைப்பை அறிந்தவன். பாறை உச்சிகளுக்கு மேலேறி, அங்கிருக்கும் கல்வெட்டுகளில் இருந்த தமிழி எழுத்துகளைத் தன் கைகளால் தடவிப் படித்துத் தகவல்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தவர். `பூலாங்குறிச்சியில் இருந்த கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக் காலக் கல்வெட்டு, மழையிலும் வெயிலிலும் கிடக்கிறது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்’ என்று என்னிடம் ஒருமுறை சொன்னார். கழக ஆட்சியமைந்த பிறகு, அது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அவரிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவருக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு உகந்த இடமான ரோஜா முத்தையா நூலகத்தில் அவருக்குப் பிடித்த உணவுகளுடன் சந்திப்பு நடைபெற வேண்டும்!

தியடோர் பாஸ்கரனும் காட்டுயிர் வாழ்க்கை குறித்த உரையாடலும்!

காட்டுயிர்களைப் பற்றித் தமிழில் எழுதுபவர்களில் மிக முக்கியமானவர் தியடோர் பாஸ்கரன். காட்டுயிர்கள் பற்றிய தரவுகள் தமிழில் மிகக்குறைவு. அந்தவகையில், அவரின் பங்களிப்பு போற்றத்தக்கது. மிக நுணுக்கமாக, காட்டுயிர்களின் வாழ்வியலை, அதன் முக்கியத்துவத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அவருடைய புத்தகங்களை நான் வெளியிட்டிருக்கிறேன். ``தமிழ் வளர்ச்சித்துறையின் மூலமாக, காட்டுயிர் வாழ்க்கை குறித்து என்ன மாதிரியான முன்னெடுப்புகளைச் செய்யலாம், எந்தெந்தப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யலாம், தமிழில் புதிய தரவுகளை எப்படி உருவாக்கலாம்’’ உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவரோடு உரையாடுவேன். முதுமலையில் மலை உணவுகளோடு உரையாட ஆசை!