Published:Updated:

வி.ஐ.பி டின்னர் - வைகைச்செல்வன்

வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

ஓவியம்: ஜீவா

வி.ஐ.பி டின்னர் - வைகைச்செல்வன்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
வி.ஐ.பி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி டின்னர்

அ.தி.மு.க-வின் இலக்கிய முகமாக அறியப்படுபவர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன். அடிப்படையில் தமிழாசிரியரான இவர், தீவிர அரசியல் பணிகளுக்கு மத்தியிலும், கவிதை, கதை, சொற்பொழிவு என வலம்வருபவர். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து வி.ஐ.பி-க்களையும், அதற்கான காரணங்களையும் இந்த இதழ் வி.ஐ.பி டின்னர் பகுதியில் மிக சுவாரஸ்யமாக விவரித்தார்...

புரட்சித்தலைவருக்குச் சிலைமலைப்பட்டியில் விருந்து!

`` ‘கர்ணனுக்குப் பிறகு கொடையுமில்லை, கார்த்திகைக்குப் பிறகு மழையுமில்லை’ என்கிற சொலவடையைத் தன்னுடைய வள்ளல் குணத்தால் உடைத்தெறிந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்தான் என்னுடைய முதல் விருப்பம். மக்கள் மத்தியில் ஊடுருவிச் சென்ற தலைவரான அவரை, என் தாய் வசிக்கும் சிலைமலைப்பட்டிக்கு அழைத்துச் சென்று கருவாட்டுக் குழம்பு சமைத்து விருந்து கொடுக்க வேண்டும். `அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இப்போது என்ன சொல்ல விரும்புகிறீர்கள்... இந்த நாட்டு மக்களுக்குச் சத்துணவுத் திட்டம்போல வேறு ஏதாவது திட்டம் கொண்டுவர வேண்டுமென்றால் நீங்கள் எதை முன்மொழிவீர்கள்’ என்று அவரிடம் கேட்பேன்!’’

கலைஞருக்கு மயிலாப்பூர் இல்லத்தில் விருந்து!

``எங்களின் பிரியமுள்ள எதிரி, வாஞ்சையுள்ள மனிதர் கலைஞர். அவரின் தமிழ்மீது எப்போதும் தீராக்காதல்கொண்டவன் நான். அவரின் திருக்குறள் உரையைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது படித்திருப்பேன். திருக்குறளுக்கு உரையெழுதிய மற்றவர்களைவிட பகுத்தறிவு சிந்தனையோடு, தமிழுணர்வோடு, சமுதாய நலனோடு கலைஞர் உரையெழுதியிருப்பார். மகத்தான அந்த உரைக்காகவே அவருக்கு விருந்தளிக்க வேண்டும். சென்னையில் என்னுடைய மயிலாப்பூர் இல்லத்துக்கு அவரை அழைத்து, அவருக்கு மிகவும் பிடித்தமான விரால் மீன் உணவுகளோடு விருந்தளிப்பேன். ‘நீங்கள் அரசியலுக்கு வராமல் முழுமையாக இலக்கியத்துறையில் இருந்திருந்தால், இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் தமிழன் என்கிற பெருமையை அடைந்திருப்பீர்கள்’ என்று சொல்வேன்!”

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மாமல்லபுரக் கடற்கரை விருந்து!

``வீரத்தின் அடையாளம், துணிச்சலின் முகம். சிங்கள ஏகாதிபத்தியத்தைத் துணிச்சலோடு எதிர்த்து நின்ற ஒரு சாமானியன். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிகழ்ந்த அந்தத் துயர்மிகு நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் சோகம். மாமல்லபுரம் கடற்கரைக்கு அவரை அழைத்துச் சென்று, அங்குள்ள அழகிய சிற்பங்களை அவருக்கு விளக்கி, அவருடன் ரசித்து மகிழ விருப்பம். கடற்கரை மணல்வெளியில் ஒரு குடிலமைத்து, அவருக்குப் பிடித்த நண்டு, இறால் போன்ற கடல்சார் உணவுகளை விருந்தளித்து, தமிழிலக்கிய நூல்களையெல்லாம் அவருக்குப் பரிசளிக்க வேண்டும். அவரிடம், `ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன... சிங்கள ராணுவம் தமிழர்களைக் கொன்று குவித்தபோது தமிழர்களின் கண்ணீரால் தத்தளித்த நிலம், இப்போது கடனால் தத்தளிக்கிறது. பிரபாகரன் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனும் மக்களின் குரல்களை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்பேன்!”

வி.ஐ.பி டின்னர் - வைகைச்செல்வன்

நடிகர் விஜய்க்கு நீலாங்கரை கடற்கரை விருந்து!

``சாதாரண எளிய இளைஞராக, நம் வீட்டுப் பிள்ளைபோலத் திரைப்படத்தில் அறிமுகமாகி, இன்று உச்சம் தொட்ட ஒரு நடிகர் தம்பி விஜய். ஆனாலும், உப்பைப்போல எளிமையான, மழைநீரைப்போல சுத்தமான மனிதராக இருக்கிறார். பற்றற்ற மனிதர்களைத் தேடித்தான் உயர்ந்த சிம்மாசனங்கள் வரும். கடலும் கடல் சார்ந்த இடங்கள்தான் அவருக்குப் பிடிக்கும். அதனால், நீலாங்கரை கடற்கரையிலேயே அவரைச் சந்தித்து அவருக்குப் பிடித்தமான மீன், கோழி போன்ற உணவுகளுடன் விருந்தளிப்பேன். அவரிடம், `உங்கள் இளமையின் ரகசியம் என்ன... அதை எனக்கு மாத்திரம் சொல்லிக்கொடுங்கள்’ எனக் கேட்பேன். தவிர, அவர் கௌரவ வேடத்தில் நடித்த `சுக்ரன்’ எனும் திரைப்படத்தில் நான் பாட்டெழுதியிருக்கிறேன். அந்தப் பாடலைப் பாடியது விஜய்யின் தாயார் ஷோபா அவர்கள்தான். அந்த விஷயத்தை அவருக்கு நினைவுபடுத்துவேன்!”

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அருப்புக்கோட்டையில் விருந்து!

``வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒரு பாளையக்காரர். இந்திய தேசத்துக்கே வீரத்தைக் கற்றுக்கொடுத்தவர். ‘நாங்கள் உழைக்கிறோம் உனக்கேன் வரி செலுத்த வேண்டும்?’ என்று துணிச்சலோடு கேட்டதன் மூலம் வீரமும் அஞ்சாமையும் தமிழர்களின் இலக்கணம் என்பதை மெய்ப்பித்தவர். தூக்குமேடையில் நின்றபோதும் அஞ்சாத சிங்கமாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர். அவர் முயல், காடை, கௌதாரி, புறா போன்றவற்றை விருப்பத்தோடு சாப்பிடுவார் என்கிற வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அந்த உணவுகளையும் கூடுதலாகத் தேனோடும் தினை மாவோடும் அவருக்கு விருந்தளிப்பேன். என்னுடைய அருப்புக்கோட்டை தொகுதிக்கு அவரை வரவழைத்து மரியாதை செய்வேன். `உயிரே போனாலும் பரவாயில்லை என்று வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்திருக்கிறீர்கள். அந்தத் துணிச்சலுக்கான ஆற்றல் எப்படி உங்களுக்கு வந்தது... அந்த ரகசியத்தை நம் இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொள்வேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism