Published:Updated:

விஐபி டின்னர் - வேல்முருகன்

விஐபி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
விஐபி டின்னர்

ஓவியம்: ஜீவா

விஐபி டின்னர் - வேல்முருகன்

ஓவியம்: ஜீவா

Published:Updated:
விஐபி டின்னர்
பிரீமியம் ஸ்டோரி
விஐபி டின்னர்
அதிரடி அரசியலுக்குப் பெயர்போன தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினரான பிறகு, தொகுதி களப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். அவர் டின்னர் கொடுக்க விரும்பும் ஐந்து நபர்களையும், அதற்கான காரணத்தையும் கேட்டறிந்தோம்!

தலைவர் பிரபாகரனும் தமிழர் மரபும்!

``ராஜேந்திர சோழன், ராஜ ராஜ சோழன் போன்றவர்கள் தமிழினத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களைப் புத்தகங்களின் வாயிலாக மட்டுமே நான் கற்றறிந்திருந்த வேளையில், நம் கண்முன்னே அப்படி வாழ்ந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே. மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர்கொண்டிருந்த நேசம் அப்பழுக்கற்றது. அவர்மீது எனக்கு அளவுகடந்த ஈர்ப்பு, அன்பு உண்டு. என் பூர்வீக நிலமான புலியூரில் முந்திரிக்காடுகளுக்கு மத்தியில், அவருக்குப் பிடித்த உணவுகளோடு விருந்து உபசரிப்பு செய்ய விரும்புகிறேன். அவரிடம் ‘தமிழினத்தில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி, மறைந்திருக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு அநீதிகளை எதிர்த்து போராடக்கூடிய போராற்றல் எப்படி வந்தது, மாபெரும் விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பும் அளவுக்கான தலைமைப் பண்பை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்’ என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன்!’’

சே குவேராவும் மனிதகுல விடுதலையும்!

``உலகத்தில் எங்கெல்லாம் மக்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்களோ, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் பயணித்து அவர்களை அதிலிருந்து விடுவிக்கப் போராடிய ஒரு மனிதன் சே. தன்னுடைய மருத்துவர் படிப்பு, தனக்குக் கிடைத்த பதவிகள், வசதி வாய்ப்புகளைத் துறந்து, மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒரு வீரன். நான் என் மண்ணின் உரிமைக்காகப் போராடுகிறேன். ஆனால், அந்த எல்லைகளைக் கடந்து, ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்காகப் போராடிய மனிதன் அவன். உலக அளவில் போராளிகள் உருவாகுவதற்கு முன்மாதிரியாக நான் ‘சே’வைப் பார்க்கிறேன். அவருக்கும் என்னுடைய பூர்வீக நிலத்தில், என்னுடைய தோட்டத்தில் விளைந்த பொருள்களை வைத்து, உபசரிப்புச் செய்ய விரும்புகிறேன். அவர் கடந்துவந்த பாதைகள் குறித்து அவரிடம் கேட்டறிந்துகொள்ள விரும்புகிறேன்!’’

நேதாஜியும் மாற்றுச் சிந்தனையும்!

``இந்திய விடுதலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அஹிம்சைக் கருத்துகளை காந்தி மிகப்பெரிய அளவில் விதைத்துக்கொண்டிருந்த நேரத்தில், ‘அது மட்டும் போதாது, எதிரிக்கு அவர்களின் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டும்’ என யாரும் சிந்திக்காத விஷயத்தைச் சிந்தித்த தலைவர். ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி, அதற்கான பயிற்சிகளையும் படைகளையும் திரட்டிய மாபெரும் தலைவர். குறிப்பாகப் பெண்களையும் அதில் இணைத்துப் போராடியவர். அவருக்கும் என் சொந்த ஊரில்தான் விருந்து வைப்பேன். `பெரும்பான்மையான தலைவர்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, நீங்கள் மட்டும் எப்படி மாற்றுவழியைத் தேர்ந்தெடுத்தீர்கள். எதிரி ஆயுத வலுவோடு இருக்கும்போது, நாமும் அப்படியே மோத வேண்டும் என்கிற சிந்தனை உங்களுக்கு எப்படி உதித்தது, உங்களை அப்படிக் கவர்ந்த தலைவர்கள் யார் யார்?’’ என அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்!’’

விஐபி டின்னர் - வேல்முருகன்

பகத் சிங்கும் தியாக உணர்வும்!

``இந்தியாவின் விடுதலைக்காக, ஆதிக்க அரசின் கோட்டையாகத் திகழ்ந்த நாடாளுமன்றத்தின் மீது குண்டுவீசி, தூக்குக்கயிற்றுக்கு முன் நின்றபோதிலும், மண்ணையும் மக்களையும் நேசித்த ஓர் இளைஞன். தன் உயிரைவிட தேசத்தின் விடுதலை முக்கியம் எனச் சின்னஞ்சிறு வயதில் சிந்தித்து, அன்றைய இளம் தலைமுறையினருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த இளைஞன். அவருக்கும் என்னுடைய நிலத்தில்தான் விருந்து. `சிறுவயதிலேயே உயிரைப் பொருட்படுத்தாமல், மக்களை நேசிக்கும் உணர்வை எப்படிப் பெற்றீர்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்வேன்!’’

தமிழிசை அக்காவும் சகிப்புத்தன்மையும்!

``கடுமையான வார்த்தைகளால் மிக மோசமாகப் பலர் உருவகேலி செய்தபோதும், அவை அனைத்தையும் சிரித்துக்கொண்டே கடந்து, இன்று இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருக்கின்றார் அக்கா தமிழிசை. அவருக்கு என் தோட்டத்தில் விளைந்த உரம் போடாத இயற்கையான காய்கறிகள், மா, பலா, வாழை போன்ற முக்கனிகளோடு விருந்தளிக்க ஆசை. அந்த நேரத்தில், ‘இவ்வளவு சகிப்புத்தன்மையையும் மனவுறுதியையும் எப்படிப் பெற்றீர்கள் அக்கா... அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள் எனக் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவல்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism