Published:Updated:

``எடப்பாடி தலைமையில் பதவி; பன்னீர் தலைமையில் மா.செ-க்கள்” - விருதுநகர் அதிமுக-வில் நடப்பது என்ன?

போஸ்டர்

விருதுநகர் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் என எந்த ஒரு பட்டியலும் எடப்பாடி தலைமைக்குக் கொடுக்கப்படாத நிலையில், புதிய மாவட்டச் செயலாளர்களை ஓ.பி.எஸ் நியமித்திருப்பது உள்ளூர் மாவட்ட அதிமுக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``எடப்பாடி தலைமையில் பதவி; பன்னீர் தலைமையில் மா.செ-க்கள்” - விருதுநகர் அதிமுக-வில் நடப்பது என்ன?

விருதுநகர் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் என எந்த ஒரு பட்டியலும் எடப்பாடி தலைமைக்குக் கொடுக்கப்படாத நிலையில், புதிய மாவட்டச் செயலாளர்களை ஓ.பி.எஸ் நியமித்திருப்பது உள்ளூர் மாவட்ட அதிமுக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
போஸ்டர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தினம் தினம் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. ஆட்சிக்கொருத்தர், கட்சிக்கொருத்தர் என இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அ.தி.மு.க.தொண்டர்கள் இயங்கிவந்தனர்.

எனினும், ஒற்றைத் தலைமை என்னும் விவகாரம் அ.தி.மு.க-வில் புகைச்சலை ஏற்படுத்தி பின்னாளில் பெரும் பூகம்பத்தையே உண்டுபண்ணியது. இதற்கிடையே, கட்சிப் பொதுக்குழுக்கூட்டம் நடத்த எடப்பாடி தரப்பில் முடிவுசெய்யப்பட்டது.

அ.தி.மு.க பொதுக்குழு
அ.தி.மு.க பொதுக்குழு

தொடர்ச்சியாக, அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலும்கூட பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் உட்பட அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க-வில் நடந்த இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி மற்றும் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்ட வைத்திலிங்கம் உட்பட்டவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்தும், அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரியும் ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் போட்டிக்குப் போட்டியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார், சி.வி.சண்முகம் உட்பட பலரைக் கட்சியிலிருந்து நீக்கி ஓ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

இ.பி.எஸ்.. ,ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ்.. ,ஓ.பி.எஸ்.

இது தவிர, தமிழ்நாடு முழுமைக்கும் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க-வில் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தும் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுவருகிறார். அந்த வரிசையில், விருதுநகர் மாவட்டத்தில் எடப்பாடி தரப்பு ஆதரவாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதற்கு பதிலாக, விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை தொகுதியை உள்ளடக்கி விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பாலகங்காதரன், சாத்தூர், சிவகாசி தொகுதிகளை உள்ளடக்கி விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளராக தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகளை உள்ளடக்கி விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக கதிரவன் ஆகியோரை நியமித்து ஓ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பான போஸ்டர்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பிறகு, அவருக்கு ஆதரவாகச் செயல்படும் நிர்வாகிகளும் மாவட்டவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டு கட்சிப் பொறுப்பிலிருந்து எடப்பாடி நீக்கிவருவது தெரிந்த கதைதான். எனினும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அப்படி எந்தவொரு பட்டியலும், தலைமைக்குக் கொடுக்கப்படவில்லை என்றே இங்குள்ள அ.தி.மு‌.க-வினர் கூறுகின்றனர். இந்நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் எனச் சொல்லும் வகையில் புதிதாக வெளியாகியிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் உள்ளூர் அதிமுக-வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ் அணி தரப்பில் விருதுநகர் மாவட்டத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மூவருமே, எடப்பாடி தலைமையின் கீழ் ஏற்கெனவே பொறுப்பில் இருந்துவருகிறார்கள். அதன்படி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளராக கதிரவனும், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளராக தெய்வமும், மாவட்ட கலைப் பிரிவுச் செயலாளராக பாலகங்காதரனும் இ.பி.எஸ் தலைமை அ.தி.மு.க. தலைமையில் பொறுப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விளக்கம் கருத்து கேட்க எடப்பாடி தரப்பு ஆதரவாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

விருதுநகர் அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம் குறித்து தொண்டர்களிடம் பேசினோம். ``கட்சிக்குள்ள நடக்கிற எந்தவொரு விஷயமானாலும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காதுக்குப் போகாம இருக்காது. விருதுநகர் மாவட்டத்துல அவர் எடுக்கறதுதான் கடைசி முடிவா இருக்கும். அதனால எந்த நிர்வாகியும், எந்தத் தொண்டனும் அவர் பேச்சை மீறிச் செயல்பட மாட்டாங்க. அதனாலதான் எடப்பாடி - ஓ.பி.எஸ் தலைமைச் சண்டை வந்தப்போகூட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாவட்டச் செயலாளர்களும் இ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவிச்சாங்க.

போஸ்டர்
போஸ்டர்

எல்லா மாவட்டங்கள்லயும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை நீக்கம் செஞ்சப்போகூட விருதுநகர் மாவட்டத்திலிருந்து அப்படி எந்தவொரு பட்டியலையும் கே.டி.ஆர் கொடுக்கலை. ஆனா, இப்போ ஓ.பி.எஸ் தரப்பில் புதுசா மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்காங்க. இதைப் பார்க்குறப்போ கட்சிக்கெதிரா செயல்படுறவங்களை அடையாளம் தெரிஞ்சும் அவங்களைத் தலைமைக்குக் காட்டிக் கொடுக்காமல் விட்டுவிட்டாரோன்னு நினைக்க தோணுது" என்றார்கள்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வெற்றிபெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு தி.மு.க-வில் ஐக்கியமான நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் கூடாரம் காலியாகிவிட்டதாகப் பேச்சு அடிபட்டது. ஆகவே தற்போது இருப்பவர்களையும் இழந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக எல்லாம் அஸ்தமனமாகிவிடும் என்ற அச்சத்தினாலேயே அவர், கட்சித் தலைமைக்கு இது குறித்துச் சொல்லாமல் இருந்திருப்பார் என ரகசியம் பேசிக்கொள்கின்றனர் ர.ர-க்கள்.