Published:Updated:

`கண்டுகொள்ளாத தம்பிதுரை, தளவாய் சுந்தரம்!' - விழா மேடையில் தவித்த மத்திய அமைச்சர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

`ஒரே பந்தில் 11 ரன்களை அடித்து சாதனை படைத்து, அம்மாவையே விஞ்சிவிட்டார் நம் முதல்வர்' என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழா நடைபெறுவதற்கு முன்பாக சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி, `` அனுமதியில்லாமல் பாதுகாப்பற்ற வகையில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கலெக்டர், எஸ்.பி மீது வழக்கு தொடர உள்ளேன்” எனக்கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி

விழாவில், வரவேற்றுப் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ``தமிழகத்திலேயே தேசிய நெடுஞ்சாலையில் அமையவுள்ள ஒரே மருத்துவக்கல்லூரி இதுதான். பட்டாசு நகரான சிவகாசியில் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் நலன்கருதி நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அடுத்தாகப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ``மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்றுதான் அறிவித்து வந்தார். ஆறே மாதத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு அம்மாவையே விஞ்சிவிட்டார். கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 6 ரன் எடுக்கலாம். ஆனால், 11 ரன் எடுத்தவர் நம்ம முதல்வர்தான்” என்றார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

மேடையில் 13 நிமிடங்கள் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனின் உரையை மொழிபெயர்க்க, மேடையில் இருந்த தம்பிதுரை, தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் என யாரும் முன்வராததால் 2 நிமிடங்களுக்கு மேல் அவரது பேச்சை முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதனால், பா.ஜ.க அரசின் சாதனைகளாக அவர் தொகுத்துச் சொன்ன கருத்துகள் யாரையும் சென்றடையவில்லை. இறுதியாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு பல திட்டங்கள் கிடைக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளாமல் பலரும் தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

நினைவுப்பரிசு வழங்கும் ராஜேந்திர பாலாஜி
நினைவுப்பரிசு வழங்கும் ராஜேந்திர பாலாஜி

என்.பி.ஆர் பதிவேட்டைப் பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை. சிறுபான்மையின மக்களைக் காக்கும் அரசுதான் அம்மாவின் அரசு” எனப் பேசியவர், என்.ஆர்.சி, சி.சி.ஏ பற்றி எதுவும் பேசவில்லை. வழக்கமாக வார்த்தைக்கு வார்த்தை அதிரடியாகப் பேசும் ராஜேந்திரபாலாஜி, இந்தமுறை அமைதியாகவே பேசினார்.

`ரஜினிக்கு இணை அஜித்தான்; அது `மலை’ இது `தல’ - ராஜேந்திர பாலாஜி கலகல!

`அதிரடியா பேசணும்னு எதையாவது பேசி வைக்காதீங்க’ என முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்திவிட்டதால், மேடையில் அவர் அமைதி காத்ததாகக் கட்சி நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். அதிலும், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனின் பெயரை ராஜேந்திர பாலாஜி கூறியபோது, கைதட்டல்களும் விசில்களும் பறந்தன.

நினைவுப் பரிசு வழங்கும் ராஜவர்மன்
நினைவுப் பரிசு வழங்கும் ராஜவர்மன்

முதல்வர், துணை முதல்வருக்கு வெள்ளியாலான கறவைப் பசுவை நினைவுப் பரிசாக வழங்கினார் ராஜேந்திர பாலாஜி. ஆனால், ராஜவர்மனோ வெள்ளி வாளை பரிசளித்தார். விருதுநகர் அ.தி.மு.க-வில் ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்தபடியாக ராஜவர்மனின் கை ஓங்கிக்கொண்டிருப்பதை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

அடுத்த கட்டுரைக்கு