Published:Updated:

விருதுநகர் நகர்மன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் திமுக எம்.எல்.ஏ?! - சர்ச்சையை ஏற்படுத்திய கூட்டம்

விருதுநகர்

விருதுநகரில் நடைபெற்று முடிந்த நகா்மன்றக் கூட்டத்தில் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் நகர்மன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் திமுக எம்.எல்.ஏ?! - சர்ச்சையை ஏற்படுத்திய கூட்டம்

விருதுநகரில் நடைபெற்று முடிந்த நகா்மன்றக் கூட்டத்தில் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
விருதுநகர்

விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி 36 வார்டுகள்கொண்ட விருதுநகர் நகராட்சியில் 20 வார்டுகளில் திமுக, 8 இடங்களில் காங்கிரஸ், சி.பி.எம் 1, அதிமுக 3, அமமுக 1, சுயேச்சை 3 பேர் என கவுன்சிலர்கள்‌ வெற்றிபெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் 30-வது வார்டு திமுக கவுன்சிலர் மாதவன் நகர்மன்றத் தலைவராகவும், 10-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விருதுநகர் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம்
விருதுநகர் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம்

இந்நிலையில், அரசின்‌ வழிகாட்டுதல்படி தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் கடந்த 30-ந்தேதி மாமன்றக் கூட்டம் நடந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி உட்பட மாவட்டத்தின் பிற நகராட்சிகளிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாக நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் விருதுநகர் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டத்தை நகர்மன்றத் தலைவரை நடத்தவிடாமல் அவருக்கு பதிலாக, விருதுநகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கி நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விருதுநகரில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தோம்.‌

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலாவதா, நகர்மன்றத் தலைவர் மாதவனிடம் பேசினோம். ``நான் அரசியலுக்குப் புதுசு. அரசியல்ல என்னோட ஆசான் எம்.எல்.ஏ அண்ணாச்சிதான். நகர்மன்றத் தலைவர் பதவியேற்று முதல்முறையா கூட்டத்தை நடத்துறோம். கவுன்சிலர்கள் கேட்கிற கேள்விக்கு எனக்கு பதில் தெரியாதே... ஏற்கெனவே இருந்த நகரமன்ற நிர்வாகம் செஞ்சுவெச்சுருக்கிற பணிகள் பற்றியும், கிடப்பில் போட்டுருக்கிற பணிகளைப் பற்றியும் கவுன்சிலர்கள் அதிகம் கேள்வி கேட்பாங்கனு தெரியும். அதனால விருதுநகர் நகராட்சியைப் பற்றி நல்லாத் தெரிஞ்ச, நகராட்சிப் பணிகளைக் கண்காணித்துவந்த எம்.எல்.ஏ அண்ணாச்சி எனக்கு வழிகாட்டியா என்கூட நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வந்தாங்க. பெரும்பாலும் நான் எதிர்பார்த்த மாதிரிதான் கவுன்சிலர்கள் கேள்வி கேட்டாங்க. அதற்கான பதில் எம்.எல்.ஏ அண்ணாச்சிக்கு தெரியுங்கறதால என்னையவெச்சுக்கிட்டுதான் கவுன்சிலர் கேட்ட கேள்விக்கு எம்.எல்.ஏ பதில் பேசினாங்க. இதுல வேற ஒண்ணும் நடக்கலை” என்றார்.

விருதுநகர்
விருதுநகர்

நகர்மன்றக் கூட்டத்தை எம்.எல்.ஏ நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் தரப்பிடம் பேசினோம். ``கிட்டத்தட்ட 10 வருஷத்துக்குப் பிறகு முதன்முறையா விருதுநகர் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம் நடக்குது. இதுல விவாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா கூட்டத்தோட ஆரம்பமே ரொம்ப தப்பா இருந்துச்சு. நகர்மன்ற கவுன்சிலர் கூட்டத்தை நகர்மன்றத் தலைவர்தான் நடத்தணும்னு விதியே இருக்கு. ஆனா 30-ம் தேதி நடந்த நகர்மன்ற கவுன்சிலர் கூட்டத்தை நகர்மன்றத் தலைவர் மாதவனுக்கு பதிலா, விருதுநகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்தான் தலைமை தாங்கி நடத்தினார். இது விதிப்படி ஜனநாயக விரோதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு நகர்மன்றத் தலைவர் எந்த பதிலும் சொல்லலை. எல்லா பதிலையும் எம்.எல்.ஏ- தான் சொன்னார். அதையும் மீறி ஒருசில கவுன்சிலர்கள் நகர்மன்றத் தலைவரைப் பேசச் சொன்னதுக்கு, "இவர் இப்பதானே வந்திருக்காரு... அடுத்த கூட்டத்தில் எல்லாம் சரியாகிடும், கொஞ்சம் உக்காருங்க" அப்படின்னு காட்டமா பதில் சொல்லி எம்.எல்.ஏ சமாதானப்படுத்தினார். விதிப்படி எம்.எல்.ஏ., கவுன்சிலர் கூட்டத்துக்கு வந்து பார்வையாளரா கலந்துக்கலாம். ஆனால் எதுவும் பேசுறதுக்கு தார்மிக உரிமை கிடையாது. ஆனால் விருதுநகரில் நடந்த கூட்டம் அப்படி இல்லை. கூட்டத்தோட கடைசிவரையிலும் எம்.எல்.ஏ மட்டும்தான் பேசுனாரு. அதேபோல நகர்மன்றக் கூட்டம் நடக்கும்போது, தலைவருக்குப் பக்கத்துலதான் துணைத் தலைவர் உட்காரணும். ஆனா விருதுநகர்ல நடந்த முதல் நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்துல நகர்மன்ற துணைத் தலைவருக்கு மேடையில சேர் போடலை. மேடையில நகர்மன்ற துணைத் தலைவர் சேர்ல எம்.எல்.ஏ-வும், தலைவர் மாதவன் அவர் அருகேயும் உட்கார்ந்திருந்தார். அப்புறம் கமிஷனருக்கு சேர் போட்டிருந்தாங்க.

துணைத் தலைவருக்கு மேடையில் இருக்கை இல்லாத காட்சி
துணைத் தலைவருக்கு மேடையில் இருக்கை இல்லாத காட்சி

துணைத் தலைவருக்கு மேடைக்கு கீழே கவுன்சிலர்கள் பக்கத்துலதான் சேர் போட்டிருந்தாங்க. இதுக்கு நாங்க கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சோம். அதன் பிறகுதான் துணைத் தலைவருக்கு மேடையில சேர் போட்டு தலைவர் பக்கத்துல உட்காரவெச்சாங்க. அது மாதிரி நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துக்க பொதுமக்கள் பார்வையாளராக வரணும்னாகூட அனுமதி வாங்கிட்டுதான் உள்ளே வரணும். அனுமதியில்லாமல் யாரும் கூட்டத்தில் கலந்துக்கக் கூடாது. ஆனா திமுக ஆட்சி நடக்கிற தைரியத்துல அன்னைக்கு நடந்த கூட்டத்துல விருதுநகர் திமுக நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் அனுமதி இல்லாம கலந்துக்கிட்டாரு. அவருடைய மனைவி இந்திரா வார்டு கவுன்சிலர். இருந்தாலும், கவுன்சிலரோட மனைவியோ, கணவனோ யாரா இருந்தாலும் அவங்க உள்ளே உட்காரணும்னா அனுமதி வாங்கணும். ஆனா, எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் அன்னிக்கு அனுமதி இல்லாமதான்‌ உள்ளே உட்கார்ந்திட்டுருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டி ஒரு கவுன்சிலர் கேள்வி கேட்டதுக்குக்கூட கூட்டத்தில் எந்த பதிலும் முறையா சொல்லலை. கூட்டத்துல உருப்படியான விஷயம் எதையும் பேசலை. பல இடங்களில் நகராட்சி பணிகள் முடங்கிக்கிடக்குது. அந்த இடங்களில் டெண்டர் `எக்ஸ்டென்ட்’ பண்ணிக் கொடுத்திருக்காங்க. சில இடங்கள்ல பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே விட்டுருக்காங்க. இதைப் பற்றி விவாதிக்க கவுன்சிலர்கள் கூட்டத்தில் முறையா பேசலை. நகர்மன்றக் கூட்டத்துல கலந்துக்கிற கவுன்சிலர்களுக்கு `அமர்வுப் படி’ தரணும். அதுபடியும் பார்த்தா மூணு கூட்டத்துக்கான தொகையை எங்களுக்குத் தரலை. ஆனால், மற்ற நகராட்சியிலல்லாம் கவுன்சிலர்களுக்கு அமர்வுப் படி கொடுத்துட்டாங்க. நகராட்சியில் என்ன பணி செய்யப்போறோம், நகராட்சி சொத்து விவரம் என்ன, கையிருப்பு என்ன, வரவு செலவு திட்ட கணக்குகள், எதிர்காலத் திட்டம், டெண்டர் குறித்த விவரம் இந்த மாதிரி எல்லாத்தையும் 'பட்ஜெட்' தயாரிச்சு கவுன்சிலர்களின் பார்வைக்குக் கொடுக்கணும். நடந்து முடிந்த கூட்டத்துல அந்த மாதிரி எந்த பட்ஜெட்டும் கவுன்சிலர்களுக்குத் தரலை. ஒரே ஒரு கவுன்சிலர்கிட்ட மட்டும் ஒரு பட்ஜெட் காப்பி கொடுத்துட்டு இதை மத்த கவுன்சிலர்கள் பாக்கலாம்னு சொல்றாங்க. இது எப்படி முறையாகும்? விதிப்படி நகர்மன்றக் கூட்டம் நடக்கறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே எல்லா கவுன்சிலர்களுக்கும் பட்ஜெட் கொடுக்கணும்.

அதன் பிறகுதான் கூட்டம் நடத்தணும். இப்போ கோயில் திருவிழாவுக்காகத் தெப்பக்குளத்தைச் சுற்றி பந்தல் கடைகள் போடுறாங்க. ஆனா கடைகள் அமைப்பது தொடர்பா எந்தத் தீர்மானமும் கவுன்சிலர்களின் அமர்வுக்குக் கொண்டு வரலை. இது மாதிரி விருதுநகர்-மதுரை பைபாஸ் ரோட்டுல பொருட்காட்சி நடக்குது. அந்தப் பொருட்காட்சி நடத்துவதற்கும்கூட நகரமன்றக் கூட்டத்துல கவுன்சிலர்கள் ஒப்புதல் வாங்கலை. இந்த மாதிரி விஷயங்களை அவசரக் கூட்டம் போட்டாவது ஒப்புதல் வாங்கி முறையா செய்யலாம். ஆனா, எதையும் இவங்க சரியாச் செய்யலை. நகராட்சியோட எல்லா விஷயத்துலேயும் எம்.எல்.ஏ தலையிடுறாரு. விருதுநகர் நகராட்சியைத் தன் கைக்குள்ள வெச்சுக்கணும்னு நினைச்சு நகர்மன்றத் தலைவரை டம்மியாக்குறார்' என்றனர் கொந்தளிப்புடன்.

எதிா்ப்புகளுக்குப் பிறகு துணைத் தலைவருக்கு மேடையில் எம்.எல்.ஏ அருகே இருக்கை போடப்பட்ட காட்சி
எதிா்ப்புகளுக்குப் பிறகு துணைத் தலைவருக்கு மேடையில் எம்.எல்.ஏ அருகே இருக்கை போடப்பட்ட காட்சி

சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சருக்கு பதிலாக கவர்னர் பேசினால் அது ஜனநாயகம் ஆகுமா? அதுபோலத்தான், கவுன்சிலர்கள் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவரைப் பேசவிடாமல், நகர்மன்ற அதிகாரத்தை எம்.எல்.ஏ ஓவர்டேக் செய்து எடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, விருதுநகரில் இனி நடைபெறும் நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ கலந்துகொண்டால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

இறுதியாக, விருதுநகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனிடம் பேசினோம். ``பொதுவாக நகர்மன்ற கவுன்சிலர் கூட்டத்துக்கு எம்.எல்.ஏ போகலாம். அதன்படிதான் நான் விருதுநகரில் நடைபெற்ற நகர்மன்ற கவுன்சிலர்‌ கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதேசமயம் நகர்மன்றத் தலைவருக்கு அரசியல் புதுசு. எனவே கவுன்சிலர்கள் கேள்விக்கு பதிலளிக்க நகர்மன்றத் தலைவருக்கு உதவி செய்தேன். அவரும் சில இடங்களில் பேசத்தான் செய்தார்'’ என்றார்.

விருதுநகர் நகர்மன்றக் கூட்டம்
விருதுநகர் நகர்மன்றக் கூட்டம்

``விருதுநகர் நகராட்சியில் பெரும்பான்மை இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள்தான் வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்களே, நகர்மன்றக் கூட்டத்தை எம்.எல்.ஏ நீங்கள் நடத்துவதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’’ எனக் கேட்டதற்கு, ``நகர்மன்றக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வரும் தகவல் உண்மையில்லை. என்னை எதிர்த்து பேசுவதற்கும் எந்த உள்நோக்கக் காரணமும் கிடையாது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதே தவிர வேறு எதுவும் இல்லை’’ என்றார்.

விருதுநகர் நகராட்சிக்குள் மெல்லப் புகைய ஆரம்பித்திருக்கும் இந்த விவகாரம், விரைவில் முடிவுக்கு வருமா என்பதை பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism