Published:Updated:

``தாயும் பிள்ளையும் கையேந்தலாம்... தாய்நாடு கையேந்தக் கூடாது!'' - வ.உ.சி பிறந்ததின சிறப்புப் பகிர்வு

இரா.செந்தில் குமார்

இந்தியா முழுமைக்கும் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர், வ.உ.சி மட்டுமே.

V. O. Chidambaram
V. O. Chidambaram

செப்டம்பர் 5 என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது ஆசிரியர் தினமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமும்தான். ஆனால் தன்னை உருக்கி, இந்திய விடுதலை விளக்கில் எண்ணெய் ஊற்றிய வ.உ.சிதம்பரனார் பிறந்ததும் இந்தத் தினத்தில்தான். தியாகம் என்ற சொல்லுக்குத் தன்னிடம் இருப்பதை இழைத்தலும், தன்னையே இழத்தலும்தான் பொருள் எனில், நிச்சயமாக இந்திய விடுதலை போராட்டத்தில் வ.உ.சி-க்கு மிஞ்சிய ஒரு தியாகி இல்லையென நாம் அடித்துச் சொல்லலாம்.

V.O.Chidambaram
V.O.Chidambaram

தாத்தா வழக்கறிஞர், பெரியப்பா வழக்கறிஞர், அப்பா வழக்கறிஞர் என வழக்கறிஞர்கள் குடும்பத்துச் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவர், வ.உ.சி. கல்லூரிப் படிப்பை முடித்து சிலகாலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் தந்தையின் விருப்பத்தின்படி சட்டம் பயின்றார். தாம் பிறந்த ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியவர், குற்றவியல் வழக்குகளில் தன் வாதத் திறமையால் தனக்கென ஓர் இடம்பிடித்தார். அப்போதே ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வாதாடினார். ஒட்டப்பிடாரத்திலும் தூத்துக்குடியிலும் புகழ்பெற்ற வழக்கறிஞராக வெற்றிவாகை சூடிக்கொண்டிருந்த காலத்தில்தான் திலகரின் பேச்சைக் கேட்க நேர்ந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் திலகரின் தீவிரவாத பிரிவின்கீழ் செயல்பட்டார். `அந்நியப் பொருள்களைப் புறக்கணியுங்கள்' என அவர் எடுத்த ஆயுதம், ஆங்கிலேயர்களை ஆட்டம்காணச் செய்தது. ``வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே, தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்'' என அவர் ஆரம்பித்த சுதேசிக்கப்பல் நிறுவனம்தான், முன்னும் பின்னும் இரண்டு பீரங்கிகள் சகிதமாக நீதிமன்றத்துக்கு அவர் அழைத்துவரப்பட காரணமாக அமைந்தது.

Thilagar
Thilagar

இந்தியா முழுமைக்கும் சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர், வ.உ.சி மட்டுமே. `காந்தி, நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் புத்தகம் படிக்க, வ.உ.சி மட்டும்தான் செக்கிழுத்தார்' என அவரின் பெருமைக்காகச் சொல்லப்படும் வாசகத்தில் முழுமை இல்லாவிட்டாலும், ஓரளவுக்கேனும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. நான்கரை ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, அவர் வெளியே வந்தபோது அவர் குடும்பத்தினரையும், அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாவையும் தவிர வேறு யாரும் இல்லை. அவர் ஆரம்பித்திருந்த `சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி'யும் வெள்ளையர் கைக்குப் போயிருந்தது. அவருடைய வழக்கறிஞர் பட்டமும் பறிக்கப்பட்டது. சென்னைக்கு வந்து மண்ணெண்ணெய் விற்றும், நெய் விற்றும் தன் கடைசிக் காலத்தைக் கழித்தார்.

வழக்கறிஞராக, சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்ல, தொழிற்சங்கவாதியாகவும் இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர், வ.உ.சி. தந்தை பெரியாரால் `என் அரசியல் குரு' எனப் போற்றப்பட்டவர், வ.உ.சி.

V. O. Chidambaram
V. O. Chidambaram

இந்தியாவின் முதல் அரசியல் வேலைநிறுத்தம், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 1908-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர்களுடையது. அந்தத் தொழிலாளர்களுக்குத் தூண்டுகோளாய் இருந்தவர், வ.உ.சி.

அதுமட்டுமல்ல, மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை என நான்கு நூல்களை எழுதியிருக்கிறார். இன்னிலை, சிவஞான போதம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். மனிதனும் அறிவும், மனமும் உடம்பும் எனப் பல தலைப்புகளில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். சைவ சமயத்தில் தீவிர பற்றுடையவராக இருந்தாலும், அரசியலில் சமயம் கலக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். தனக்கு உதவியர்களின் பெயர்களையே தன் பிள்ளைகளுக்கு வைத்ததன் மூலம், மிகச் சிறந்த மனிதராகவும் விளங்கினார், வ.உ.சி.

V.O.C. Grandchild
V.O.C. Grandchild

அதேநேரத்தில், கல்விச் செலவுக்குப் பணமில்லாமல் படிப்பைப் பாதியில் நிறுத்திய வ.உ.சி-யின் பேத்தியைப் பற்றியும், பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து மாவட்ட ஆட்சியரின் உதவியோடு மீண்டுவந்த அவரின் பேரன்களைப் பற்றியும் தினசரிகளில் செய்திகளைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்த இந்தியர்களும் சுதந்திரம் பெறுவதோடு மட்டுமல்லாமல், சுய கௌரவத்தை இழக்காமல் அதைப் பெறவேண்டும் எனப் போராடிய அந்தத் தியாகச் செம்மலின் குடும்பம் இன்றும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கி இருக்கிறது என்பதே நிஜம். இப்போது மட்டுமல்ல, அது வ.உ.சி உயிரோடிருந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது.

ஒருமுறை வ.உ.சி-யிடம் ஆங்கிலேயர் ஒருவர், ``உன் தாயும் பிள்ளைகளும் இப்படிக் கஷ்டப்படுகிறார்களே... இப்போதாவது எங்களின் சொல்படி கேட்கலாமே'' எனச் சொன்னதற்கு, ``என் தாயும் பிள்ளையும் பிச்சையெடுக்கலாம்... என் தாய்நாடு ஒருபோதும் பிச்சையெடுக்கக் கூடாது" எனக் கொட்டி முழங்கிய பெருமகனார் வ.உ.சி. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் சமைத்த உணவை ஏற்க மறுத்ததாகவும் சாதிப் பற்றுடையவராக இருந்ததாகவும் வ.உ.சி-யின் மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அதன்மூலத்தைத் தேடினால், அந்த விஷயத்தை உலகுக்குச் சொன்னவரே, வ.உ.சிதான். ஆரம்பத்தில் தாம் அப்படி நடந்துகொண்டதாகவும் பின்னாளில் அதில் தவறிருப்பதை உணர்ந்து மாற்றிக்கொண்டதாகவும் தனது சுயசரிதையில் தெரிவித்திருப்பார், அவர்.

Gandhi
Gandhi

இந்திய மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய வ.உ.சி., இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். தமிழகத்தில் திலகர் பெயரில் திடல் உண்டு, காந்தி, நேருவின் பெயரில் பல சாலைகள் உண்டு. எத்தனை வட இந்தியத் தெருக்களுக்கு வ.உ.சி-யின் பெயர் இருக்கிறது? வட இந்தியாவை விடுங்கள், தமிழகத்தில் எத்தனை பேர் இன்னமும் வ.உ.சி-யை நினைவில் வைத்திருக்கிறார்கள்; அவரைக் கொண்டாடுகிறார்கள்? சாதிச்சங்கங்கள் இன்று அவரை தனதாக்கிக் கொண்டதற்கு, அவர்களின்மீது மட்டும் குற்றமில்லை. அவரைப் பொதுத் தலைவராக ஏற்றுக் கொண்டாடாத இந்தச் சமூகத்தின் மீதும்தான் பெருங்குற்றமுண்டு. இனிவரும் காலங்களிலாவது மக்களுக்காக உழைத்த தலைவர்களைப் போற்றுவோம்!

Vikatan