Published:Updated:

`18 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 சட்டப்பேரவைத் தேர்தல்!’ - விறுவிறுப்பாகத் தொடங்கியது வாக்குப்பதிவு

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று சட்டமன்றம் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

இந்தியா முழுவதும் இன்று பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. சுமார் 18 மாநிலங்களில் 51 தொகுதிகளில் இடைத்தேர்தலும் ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது.

சோனியா காந்தி - மோடி
சோனியா காந்தி - மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு 3,239 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். இங்கு, ஆளும் பா.ஜ.க - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் உள்ளன. இது தவிர, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற பல கட்சிகள் தனியாகப் போட்டியிடுகின்றன.

அதேபோல், ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 1,169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,83,90,525. இந்த இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தைப் பொறுத்தவரை விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸின் வசந்தகுமார், எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டதால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய, அது காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த ராதாமணி உயிரிழந்ததால், அதுவும் காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

நாங்குநேரியில் போட்டியிட விரும்பிய பி.ஜே.பி-யை அ.தி.மு.க சமாளித்த கதை!

நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன இவற்றில் 110 பதற்றமானவை. விக்கிரவாண்டியில் உள்ள 275 வாக்குச்சாவடிகளில் 50 பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. நாங்குநேரித் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அ.தி.மு.க சார்பில் நாராயணன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். மொத்தம் அங்கு 23 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், விக்கிரவாண்டியில் தி.மு.க சார்பாக புகழேந்தி, அ.தி.மு.க சார்பாக முத்தமிழ் செல்வன் உள்பட 12 பேர் களம் காண்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, காலை முதல் அனைத்து இடங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர். நாடு முழுவதும் இன்று நடைபெறும் வாக்குப்பதிவின் முடிவுகள் வரும் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.