Election bannerElection banner
Published:Updated:

`இது எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்’ - அரசியலில் ஈடுபடுவது குறித்து இளைஞர்களின் கருத்து

இளைஞர்கள்
இளைஞர்கள்

இளைஞர்களின் அரசியல் வரவேற்கப்படுகிறது என்னும் பிம்பம் சமூகத்திலிருந்தாலும், அது வெறும் பிம்பம்தான். நான் வாக்களிப்பது மட்டுமே எனக்கு இந்தச் சமூகமும் குடும்பமும் முழுமையாக வழங்கக்கூடிய அரசியல் சுதந்திரம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. வழக்கம்போல இம்முறையும் களத்தில் இளைஞர்களின் பங்கு குறைவாகவே உள்ளது. அரசியல் களத்துக்குக் கானல் நீராக இளைஞர்களும், இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக அரசியலும் இருந்துவரும் சூழலில் தங்கள் அடிப்படை அரசியல் கடமையாக வாக்களிக்கப் போகும் இளைஞர்கள் தங்களுக்கான அரசியலை எங்கிருந்து கற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

யோகிதா
யோகிதா
யோகிதா - ஒப்பனைக்கலைஞர், மதுரை

அரசியலில் படிப்படியான வளர்ச்சி என்பது எல்லோரும் அறிந்ததே. இளைஞர்களை அதிக அளவில் அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பது குடும்பச் சூழலே. சூழலைக் கடக்க, படித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து, குடும்பத்தை முன்னேற்றுவது என்ற எண்ணமே இளைஞர்களுக்கு உள்ளது. அரசியல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. தனது கருத்துகளை வெளிப்படுத்தும் இளைஞர்கள் எவரும் முனைப்போடு அரசியலில் இறங்குவதில்லை. நான் அரசியலை, நண்பர்களுடனும் வீட்டிலுள்ளவர்களுடன் பேசி, கருத்துகளைப் பரிமாறிக்கொண்டும், செய்தித்தாள் படிப்பதும், தொலைக்காட்சி மூலமாகவும் கட்சிகளின் கொள்கைகளையும் அவர்களின் செயல்களையும் அறிந்தும்,என்னை வாக்கு அளிப்பதற்குத் தயார்ப்படுத்திக் கொள்வேன்.

பிரீதி - கல்லூரி மாணவி, மதுரை

என்னைப் பொறுத்தவரை இளைஞர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதே். அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பது போன்ற எண்ணங்கள் அவர்கள் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளன. சிறு வயதிலேயே இது மாதிரி எண்ணங்கள் அவர்கள் மனதை ஆட்கொள்வதால் அவர்களால் அரசியலை முழு மனதாக உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. மேலும் இளைஞர்களுக்கு இந்தத் துறையில் சரியான வழிகாட்டுதல் குறைவு. அதனால் அவர்கள் வழிதவறிச் செல்கின்றனர். வாக்களிப்பதற்கு நான் என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள நிறையச் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் விவரங்களை அறிந்துகொள்வேன்.

பி.மணிகண்டன்
பி.மணிகண்டன்
பி.மணிகண்டன் - கல்லூரி மாணவர், ராணிப்பேட்டை

``இளைஞர்கள் பலர் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். ஆனால், ஆள்பலமிக்க அரசியல்வாதிகளால் தங்கள் குடும்பத்துக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் நிம்மதியின்மை ஏற்படுமோ என்று அஞ்சுகிறார்கள். என்னதான் இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆசைப்பட்டாலும் தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்க அவர்களின் பெற்றோர்கள் தயாராக இல்லை. சில இளைஞர்கள் நம்மை நம்பி நம் குடும்பத்தினர்களே வாக்களிக்க மாட்டார்கள் என்றெண்ணுகின்றனர். இதுவே முதல் தடையாக இருக்கிறது.”

தமிழ்வாணி
தமிழ்வாணி
தமிழ்வாணி - பட்டதாரி, நன்னிலம்

``சிறு வயதிலிருந்தே பொருளாதாரம் சார்ந்த வாழ்வு மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. படிப்பது மார்க் வாங்க; மார்க்கை வைத்து கல்லூரியில் சீட்டு வாங்க; சீட்டு மார்க் வாங்க; மார்க் வேலைக்குப் போக; வேலை, சம்பளம் வாங்க என வட்டமடிப்பதுதான் வாழ்க்கை என நினைக்கும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது கடினமே. இதையும் தாண்டி அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் குடும்பம் ஒத்துழைப்பதில்லை! இளைஞர்களின் அரசியல் வரவேற்கப்படுகிறது என்னும் பிம்பம் சமூகத்திலிருந்தாலும், அது வெறும் பிம்பம்தான். நான் வாக்களிப்பது மட்டுமே எனக்கு இந்தச் சமூகமும் குடும்பமும் முழுமையாக வழங்கக்கூடிய அரசியல் சுதந்திரம். அதைத் திறம்படச் செய்வதற்கு சமூக ஊடகங்களைத்தான் நம்பியுள்ளேன். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு நடுவில் சீரான அரசியல் பார்வை உள்ளவர்களையும் சமூக ஊடகங்களில் காண முடியும். அவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்வதும், வாதம் செய்வதும்தான் என்னை அரசியல்படுத்துகிறது. எனவே என்னளவிலான அரசியலைத் திறம்படச் செய்யத் தேர்தலை நோக்கிக் காத்திருக்கிறேன்.”

யுவராஜ்
யுவராஜ்
யுவராஜ் - போட்டி தேர்வு மாணவர், திருச்சி

``இது வரவேற்கத்தக்க கேள்வி. இச்சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. அப்படிப்பட்ட அரசியலை நான் சமூக அக்கறையின், அன்றாட மக்களின் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் கண்டு தெளிகிறேன். ஏனெனில், மக்களின் அன்றாட வாழ்வியலின் மேம்பாட்டின் வளர்ச்சி இதன் மூலக்கூறு என்பதே நான் கண்ட கூற்று. நம் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட இளைஞர்களாகிய நாம் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பேசுவதிலும், பகிர்வதிலும் காட்டும் ஈடுபாடு, அன்றாட வாழ்வின் நடைமுறையில் செயல்படுத்தத் தயங்குகிறோம். ஏன் என்றால் இங்கு சமூகச் செயலிகள் என்றும் பேசுபொருளாகவே இருக்குமே தவிர, அது சமூகத்தை மாற்றப் போவதில்லை. எனவே இளைஞர்களாகிய நாம் சிந்திப்பதுடனும் சமூகத்தில் செயலாற்றவும் முயல வேண்டும். அரசியலில் இளைஞர்களுக்குத் தடை என்று ஒன்று இல்லை. நமது சமூகம் என்றும் இளைஞர்களை ஆதரிக்கும் போக்கில் கட்டமைக்கப்பட்டதாகும். எனவே, ஒன்றுபடுவோம் நம் சமுதாயத்தின் நிலையை உயர்த்துவோம்.”

மோகன்ராஜ்
மோகன்ராஜ்
மோகன்ராஜ் - பட்டதாரி இளைஞர், துறையூர்

``நான் ஓர் அரசியல் அமைப்பைச் சார்ந்து வாக்களிக்கவிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்குச் சேவை செய்யவுமிருக்கிறேன். குடும்பச் சூழ்நிலைதான் நான் முழுமையான தேர்தல் அரசியலில் ஈடுபடத் தடையாக உள்ளது. தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் மிகவும் யோசித்து, தெளிவான ஒரு முடிவை எடுத்துத்தான் வாக்களிக்க வேண்டும். ஏனென்றால், மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கும் ஆட்சி என்பது முழுவதும் மக்களுக்கான ஆட்சி அல்ல. காரணம், மதவாதத்தைத் தூண்டக்கூடிய வகையில் செயல்படும் ஆட்சியாளர்களிடம் அடிபணிந்து இந்த ஆட்சியானது நடந்துகொண்டிருக்கிறது, அதை முதலில் நாம் வேரறுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மொழித் திணிப்பு மாநில மொழியான தமிழ் மொழியை ஊக்குவிக்காமல் இந்தியைத் திணிக்க முயல்வது, நம் தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வேலையின்றி கஷ்டப்படுகிறபோதுகூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை இங்கு பணியில் அமர்த்தியது, வேளாண்மைச் சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது, எட்டுவழிச் சாலை, லட்சங்களுக்கு மேலான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் விளைநிலம் அனைத்தும் பாதிக்கப்படும். ஆனால் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாத இந்த அரசு அந்தத் திட்டத்தைக் கொண்டு வரத் துடித்துக்கொண்டிருக்கிறது அந்த இடத்திலிருந்து மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்க வேண்டுமென்றால் சரியான முறையில் வாக்களிக்க வேண்டும்.

அனைத்துப் பிரச்னைகளையும் நாம் கருத்தில் கொண்டு அடக்குமுறையை, மதவாத முறையை, மொழித் திணிப்பு முறையை எதிர்க்கும் கட்சிக்கு எனது வாக்கை அளிப்பேன்..! சமூக வலைதளங்களில் பதியப்படும் கருத்துகள், அவற்றைச் சுற்றி இருக்கும் வரலாறு, புத்தங்கள், கடந்தகால திட்டங்கள் முக்கியமாக நம்மைச் சுற்றி நடக்கும் பலதரப்பட்ட சூழல்கள், இவை கண்டிப்பாக நமக்குப் பெரிய அரசியல் படிப்பினையாகவே இருக்கும். இவற்றின் மூலமாகவே நான் அரசியலைக் கற்றுவருகிறேன்.”

கதிர்வாணன்
கதிர்வாணன்
கதிர்வாணன் - பட்டதாரி இளைஞர், தூத்துக்குடி

``படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் அரசியல் மாற்றம் வரும். "அரசியல் என்பது சாக்கடை, அரசியலுக்கு போனா பொய் சொல்லனும், ஏமாத்தி பொழைக்கனும்" என்று சிறிய வயதிலிருந்தே அரசியல் குறித்தான எதிர்மறை எண்ணம் இளைஞர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களைப் பார்த்து, அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள். மேலும், அரசியலுக்கு வந்தால் தங்களது தரம் தாழ்ந்து விடுமோ என எண்ணுகிறார்கள். ஆனால், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அரசியல் நம்முடைய வாழ்வின் ஓர் அங்கம்.‌ எனவே, நேர்மறையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல இளைஞர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்.”

செல்வக்குமார் - கல்லூரி மாணவர், ஓட்டப்பிடாரம்

``இன்றைய இளைஞர்களிடம் அரசியல் குறித்து யாரும் பேசுவதில்லை. பள்ளி, கல்லூரிகளிலோ வீட்டிலோ அதற்கான சூழல் அமையவில்லை. "என் புள்ள நல்லா படிச்சு, நல்ல டாக்டரா வரனும், கலெக்டராக வரனும்" என்று ஆசைப்படும் பெற்றோர்கள், தங்களது பிள்ளை நல்ல அரசியல்வாதி ஆக வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. அதனையும் மீறி சில இளைஞர்கள் அரசியலுக்கு வரும் போது, குடும்பமும் பெற்றோரும் எதிர்ப்பு தான் தெரிவிக்கிறார்கள், அவர்களுக்கு உறுதுணையாகப் பக்கபலமாக இருப்பதில்லை. இவை அனைத்தையும் முறியடித்து வெகு சில இளைஞர்கள் மட்டுமே அரசியலில் கால் பதிக்கிறார்கள். இதிலும், பெண் பிள்ளைகள் நிலைமை மிகவும் மோசம். அவர்களெல்லாம் தாங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நினைப்பதே இங்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது.”

`அரசியல் மாற்றம் வேண்டுமா... எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும்?’ - இளைஞர்களின் பார்வை
சின்னதுரை
சின்னதுரை
சின்னதுரை - போட்டித் தேர்வு மாணவர், திருச்செந்தூர்

``எந்த ஒரு அரசியல் கட்சியும் இளைஞர்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிப்பதில்லை. கட்சி பதவி, தேர்தலில் போட்டியிட சீட் போன்றவை, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், வாரிசுகளுக்குமே ஒதுக்குகிறார்கள். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. குறிப்பாக, கேரளாவில் இது போன்ற நிலை இல்லை. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இளம் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இளம் பெண்களும், இளைஞர்களும் அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தனர். அது போன்ற நிலைமை தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகளும், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்தால் தான், இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வருவார்கள்.”

ஹரிபிரியா
ஹரிபிரியா
ஹரிபிரியா, திருச்சி

`நாம் வாக்களிப்பதே மிகப் பெரிய அரசியல் தான். ஏனெனில் மிகப் பெரிய புரட்சிகள் எல்லாம் கூட வாக்கெடுப்பினால் தான் நிகழ்ந்துள்ளது. ஒரு அரசை மாற்றம் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தது நம் வாக்கு. அதைச் சரியாகச் செய்வதே நாம் அரசியல் செய்வதற்குச் சமம். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்துகிறமோ என்பதே என்னோட அரசியல். நான் பொதுவாகச் சமுதாயத்திலிருந்தே கற்றுக்கொள்கிறேன். ஐந்து வருட ஆட்சியில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டின் செயல்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் கவனித்துத் தான் நான் அரசியலை கற்று வருகிறேன், அதை அடிப்படையாகக் கொண்டே நான் வாக்களிப்பேன். பொதுவாக இளைஞர்கள் வீட்டில் சொல்வது, மற்றவர்கள் சொல்வது போன்றவற்றைக் கேட்டு வாக்களிப்பார்கள். நான் அப்படி இல்லை ஐந்து வருடத்தில் அவர்களின் பிரச்சனையை எவ்வாறு கையாளுகிறார்கள், நலத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள், சட்டசபையில் இரு தலைமைகளின் விவாதங்கள் இவற்றின் மூலமே அரசியல் கற்கிறேன். இதைக் கொண்டே நான் வாக்களிப்பேன்.”

தேர்தல் நாளில் வாக்களிப்பீர்களா அல்லது விடுமுறையை அனுபவிப்பீர்களா? - இளைஞர்களின் பதில்கள்

அரசியல் ஆர்வத்தோடு களத்திற்கு வரும் இளைஞர்கள் வெற்றிநடை போடும் பாதை இனியேனும் உருவாகட்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு