Election bannerElection banner
Published:Updated:

புதுக்கோட்டை: அரிவாளால் உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்! - போதை ஆசாமியால் நடந்த களேபரம்

உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்
உடைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்

வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறிப் புகுந்த ஆனந்தன், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். இதில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. வாக்குப்பதிவு முடிவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (45) என்பவர் மது போதையில் வாக்களிக்க ஆலங்குடியிலுள்ள வாக்குச்சாவடிக்கு வந்திருக்கிறார்.

ஆனந்தன்
ஆனந்தன்

அப்போது அவர் அங்கு பணியிலிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு, ரகளையிலும் ஈடுபட்டார். இதையடுத்து, ஆனந்தனை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால், ஆத்திரமடைந்து வாக்குச்சாவடி மையத்துக்குள் அத்துமீறிப் புகுந்த ஆனந்தன், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொத்திவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். இதில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடைந்தது.

உடனடியாக, அங்கிருந்த அதிகாரிகளும் காவல்துறையினரும் ஆனந்தனை மடக்கிப் பிடித்தனர். ஆனந்தனைக் கைதுசெய்த போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது. பின்னர் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. மதுபோதையில் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அறந்தாங்கியில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதற்கிடையே, ``அறந்தாங்கியில் ஈவிஎம் மெஷின் உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவும் தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு