Published:Updated:

`நேற்று வரை அ.தி.மு.க vs தி.மு.க; இனி பா.ஜ.க vs தி.மு.க!’ - வி.பி.துரைசாமி அதிரடி

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வி.பி.துரைசாமியின் இந்தக் கருத்து தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே பா.ஜ.க - அ.தி.மு.க இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் தற்போது தேர்தல் குறித்த பேச்சுகளும் முதல்வர் வேட்பாளர்கள் குறித்த பேச்சுகளும் அதிகரித்துள்ளன. அ.தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்களிடையே ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை என்ற நிலைப்பாடுகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``தமிழகத்தில் தலைவர்களை முன்னிறுத்தியே தேர்தல் களம் காணப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3 தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். நடந்து முடிந்த தேர்தல்களைப் போலவே எதிர்வரும் தேர்தல்களையும் எதிர்கொள்வோம்’’ என்றார். முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரின் கருத்துகள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

முருகனுடன் வி.பி.துரைசாமி
முருகனுடன் வி.பி.துரைசாமி

இதனிடையே அ.தி.மு.க - பா.ஜ.க இடையேயான கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழக பா.ஜ.க மாநில அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க vs தி.மு.க என இருந்த நிலை தற்போது மாறியுள்ளது என கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, ``எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன்தான் நாங்கள் கூட்டணி வைப்போம். நேற்று வரை அ.தி.மு.க vs தி.மு.க என இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. தமிழகத்தில் இனி பா.ஜ.க vs தி.மு.க என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும்” எனக் கருத்து தெரிவித்தார்.

கமலாலயம்
கமலாலயம்

தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வி.பி.துரைசாமியின் இந்தக் கருத்து தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே பா.ஜ.க - அ.தி.மு.க இடையேயான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ``கூட்டணி கணக்கு எல்லாம் தேர்தல் நேரத்தில்தான் போடப்படும். பா.ஜ.க தலைமையில்தான் கூட்டணி என வி.பி.துரைசாமி கூறியுள்ளதாகக் கேட்கிறீர்கள். அது அவரது கருத்தா அல்லது அவருடை கட்சியின் கருத்தா என்பதைப் பார்க்க வேண்டும். இப்போதைக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் கருத்துதான் கட்சியின் கருத்து” என்றார்.

ரஜினி - பா.ம.க - பா.ஜ.க... புறப்படுகிறது புதிய கூட்டணி? #2021TNElection
அடுத்த கட்டுரைக்கு