Published:Updated:

`உலக அளவில் தமிழ்மொழியைப் பரப்ப விரும்புகிறேன்!’ - சீன ஊடகக்குழுத் தலைவர்

சீன - இந்திய சந்திப்பு
சீன - இந்திய சந்திப்பு

கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம்.

இந்தியப் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்புக்கு முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு சார்பாக ``சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் இணைய நட்சத்திரங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில், தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், இருநாட்டுத் தூதரக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் பூங்கோதை, நிலானி, கலைமகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழில் பேசி அசத்தினர். சீன ஊடகக் குழுவின் தமிழ்ப்பிரிவு தலைவர் கலைமகள் பேசுகையில், ``சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகவிட்ட பெருமையான தருணத்தில் இருக்கிறோம்.

சீன - இந்திய சந்திப்பு
சீன - இந்திய சந்திப்பு

உலகின் தொன்மையான கலாசாரம், பாரம்பர்யம் கொண்ட இரு மொழிகள் இருக்கிறதென்றால் அது தமிழ்மொழியும், சீனமொழியும்தான். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டபோது, ரசிகர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். இன்று லட்சக்கணக்கில் பெருகி ஆதரவு அளித்து வருகின்றனர். எங்களுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ்பேசும் மக்களுக்கு நன்றியுடன் இருப்போம். காலத்துக்கு ஏற்ப தமிழ்மொழியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க எங்கள் வானொலியின் சேவையை மாற்றிக்கொண்டு வருகிறோம். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வானொலி குறித்த பல்வேறு விஷயங்களையும் தொகுத்து வழங்கி வருகிறோம். திருக்குறளையும் கன்பூசியஸ் தத்துவங்களையும் ஒப்பிட்டு மக்களுக்குப் புரியும் வகையில் காணொலிகளை வெளியிட்டுள்ளோம். வானொலியின் நிகழ்ச்சியை இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் ஏராளமான இளம் நட்சத்திர வர்ணனையாளர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ் மொழியை உலக அளவில் எங்கள் வானொலி மூலம் கொண்டு சேர்ப்பதே எனது விருப்பம்” என்று பேசினார்.

நேரு, `அங்கிள்' ராகுல், மோடி, 40 நூறு ரூபாய்..! - மாமல்லபுரம் சீனியர் கைடின் நினைவுகள்

இதில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ``இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்புக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி. 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் பலர் தமிழகத்துக்கு வந்து நல்ல விஷயங்களைச் செய்தனர். தற்போது சீன வானொலியின் கலைமகள் போன்றவர்கள் இன்று வந்து இருவருக்கும் ஆன நட்புறவை வலுப்படுத்தியுள்ளனர். திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரும் முயற்சி எடுத்தார். அப்போதுதான் மொழிபெயர்ப்பாளர் யூ.சி அவர்களுக்கு நாங்கள் டாக்டர் பட்டம் கொடுத்தோம்.

அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழ், சீன மொழி ஒற்றுமை குறித்த ஆய்வுகளை தமிழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்க திட்டமுள்ளது. சீனா - இந்தியா பன்பாட்டு தொடர்பும் ஒற்றுமையும் வரலாற்றுத் தேவை. சீனா என்றாலே ஒரு பயஉணர்வு இருந்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின் அது குறைந்துள்ளது. வளர்ச்சியில் சீனா - இந்தியா இடையே ஆரோக்கியமான போட்டி உள்ளது” என்றார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கீழடி அகழாய்வு அறிக்கை புத்தகத்தை சீன தூதரக பிரதிநிதிகளுக்கும் மற்றும் தமிழ் அகராதியை சீன வானொலி தமிழ் தொகுப்பாளர்கள் நிலானி, பூங்கோதை ஆகியோர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ``இந்த உறவுப்பாலம் எப்போதும் தொடர வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது சீனக் கவிஞர் யூ.சிக்கு விருது கொடுத்து கெளரவித்தார். இந்திய உணர்வுள்ள தமிழர்கள் நிறைய பேர் உள்ளனர். இன்னும் தமிழ் மையங்களை அமைக்க நாம் முயற்சி செய்வோம். தனித்தனியே நிறைய சீனக் குழுக்கள் வந்துகொண்டுதான் இருந்தனர். தற்போது இவர்கள் வந்துள்ளனர். தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பாக மேலும் சீன மற்றும் தமிழ் கலைகள் பகிர்ந்துகொள்வது குறித்து முயற்சிகள் எடுப்போம்.

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

கீழடி பொருள்களை அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து மத்திய அமைச்சர்களைச் சந்தித்து வந்துள்ளேன். உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் விரைவில் கீழடியில் அமையும். அதற்கான இடம் பார்த்துக்கொண்டுள்ளோம். கீழடியில் உள்ள பொருள்களை தற்போதைக்கு திருமலை நாயக்கர் மஹாலுக்கு மாற்ற உள்ளோம். நான்கு தமிழ் வளர் மையங்கள் சீனாவில் அமைக்க ஏற்பாடுகள் செய்ய உள்ளோம். இதுகுறித்து மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதி கேட்டுள்ளோம். கீழடி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்த தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஏற்கெனவே ஒதுக்கியுள்ளது. விரைவில் மத்திய அரசு உதவியோடு உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகம் அமைக்கப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு