Published:Updated:

கமல்ஹாசனுக்கு கட்சிக்குள்ளேயே துரோகம் இழைக்கப்பட்டதா? - நடந்தது என்ன?

மகேந்திரன்- கமல்
மகேந்திரன்- கமல்

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் மநீம-வின் முக்கிய நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். கமலும் மநீம-வின் முன்னாள் துணைத்தலைவரும் அறிக்கைகள் மூலம் கடுமையாக விமர்சனம் செய்துகொள்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன?

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர், பொதுச்செயலாளர்கள் எனக் கிட்டத்தட்டக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதைவிட மக்கள் நீதி மய்யத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் அதிக அளவுக்கு பேசுபொருள் ஆகியிருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் மிக முக்கிய நிர்வாகியான துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சியை விட்டு விலகிய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் “கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறி விடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை. எனக்குத் தெரிந்த தலைவர் கமல்ஹாசன், கொள்கைக்காகவும் எளிய தொண்டர்களுக்குத் தோழனாகவும் அனைத்து நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகிறேன்” எனக் கூறியிருந்தார்.

கமல்ஹாசன் அறிக்கை
கமல்ஹாசன் அறிக்கை

அதைத் தொடர்ந்து டாக்டர் மகேந்திரனின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையில் “களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர். மகேந்திரன்.” எனக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.


சிங்காநல்லூர் :'மீண்டும் கவனம் ஈர்த்த மகேந்திரன்; 3-வது இடம் பிடித்தது எப்படி?' #TNelections2021

மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுக்குத் துரோகம் இழைக்கப்பட்டதா என்பது குறித்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சி.கே.குமரவேலிடம் பேசினோம் “கமலைத் திருத்தமுடியாது. திருந்த மாட்டார் என்று டாக்டர் மகேந்திரன் சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. மற்றபடி கட்சி தொடர்பாக அவர் எழுப்பிய அனைத்துப் பிரச்னைகளிலும் நான் உடன்படுகிறேன். டாக்டர் மகேந்திரனை முதல் துரோகி என்று பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படியானால் நாங்கள் எல்லாம் இரண்டாவது மூன்றாவது துரோகிகளா? ஊயிரைக் கொடுத்து கட்சிக்காக உளப்பூர்வமாக பணியாற்றியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? இதையெல்லாம் பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என்றுதான் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து பணியாற்றினோம். அப்படி மாற்று அரசியலை எதிர்பார்த்து வந்தவர்களை 'முதல் துரோகி' என்று சொல்லியிருப்பதை நிச்சயம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியில் யாரும் உங்களுக்கு துரோகம் செய்துவிடவில்லை. சில தவறுகள் நடந்திருக்கலாம் .ஆனால், அதைத் துரோகம் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. அப்படிப் பேசியிருக்கவே கூடாது.

மக்கள் நீதி மய்யம் குமரவேல்
மக்கள் நீதி மய்யம் குமரவேல்

பிரசாந்த் கிசோர் தி.மு.க-வுக்கு அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டார்.வேலை முடிந்தது அவர் கிளம்பிவிட்டார். அதேபோலத்தான் மகேந்திரனையும், சுரேஷ் ஐயரையும் மக்கள் நீதி மய்யம் அரசியல் ஆலோசகராக நியமித்தது. தேர்தல் முடிந்துவிட்டால் அவர்கள் வேலை முடிந்தது என்று கிளம்ப வேண்டும். ஆனால், அவர்கள் கட்சி உறுப்பினர்கள் போல பதவியை ராஜினாமா செய்கிறேன் என்கிறார்கள். உண்மையில் அரசியல் தெரிந்தவர்களை ஆலோசகர்களாக நியமித்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் என்றாலே என்ன எனத் தெரியாத மகேந்திரன், சுரேஷ் ஐயரை நியமித்தபோதே மநீம தோற்றுவிட்டது.

பொது நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு கமல் அழைப்புவிடுத்திருந்தார். அதற்குமுன் அனைத்து உறுப்பினர்களுடனும் தொலைபேசியில் பேசியிருந்தார். கூட்டத்திற்குச் சென்றதும் உறுப்பினர்கள் அனைவரிடமும் இருந்து செல்போனை வாங்கிக்கொண்டு நடந்த நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்தார்கள். அதெல்லாம் புதிதாக இருந்தது. நான், மௌரியா, முருகானந்தம், சந்தோஷ்பாபு, பொன்ராஜ், டாக்டர் மகேந்திரன், தங்கவேல், சேகர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். ‘கட்சியில் நிறைய சிக்கல் இருக்கின்றன. நம் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். அதனால், கட்சியைச் சீரமைக்கப் போகிறேன். எனவே அனைவரும் உங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். ராஜினாமா செய்வதற்குமுன் சிலவற்றைப் பேச வேண்டும் எனக் கூறி முருகானந்தமும் நானும் எங்கள் தரப்பில் இருந்து சில கருத்துகளைக் கூறினோம். மற்ற அனைவரும் கமல் கூறியதைக் கேட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இறுதியாக டாக்டர் மகேந்திரன் கட்சியைப் பதவியை மட்டுமல்ல கட்சியில் இருந்தும் நான் விலகுகிறேன் என அறிவித்தார். அவர் கூட்டத்திற்கு வரும் முன்பே அந்த முடிவோடுதான் வந்திருப்பார்போல. அது எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின்னர்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம். கட்சியில் தலைவர் அலுவலகம், ஆலோசனைக்குழு அலுவலகம், கட்சி அலுவலகம் என மூன்று அலுவலகங்கள் தனித்தனியாக இருக்கின்றன. முடிவுகளைத் தலைமை மற்றும் ஆலோசனைக்குழு அலுவலகங்கள் எடுத்துவிட்டு அவற்றைச் செயல்படுத்துபவர்களாகத்தான் கட்சித்தலைமை பொறுப்பிலிருந்த எங்களைப் பயன்படுத்தினார்கள். முடிவுகளை எடுப்பதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதைக் கமலிடன் எடுத்துக் கூறியுள்ளோம்.

கமல் , மகேந்திரன்
கமல் , மகேந்திரன்

தோல்வியிலிருந்து சரியானதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என்றால் அது உங்களுக்கான பாடம். அதிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்றால்தான் தோல்வியாக பார்க்கப்படும். மக்கள் நீதி மய்யம் அந்த இடத்தில் தற்போது இருக்கிறது. இந்தத் தோல்வியிலிருந்து சரியான பாடத்தைக் கற்றுக்கொள்ளுமானால் கட்சி அதன் நோக்கத்தில் இனி சிறப்பாகச் செல்லும். இல்லையென்றால் கட்சியின் எதிர்காலம் நிச்சயம் கேள்விக்குறியாகிவிடும். இது கமலின் கையில்தான் இருக்கிறது. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம். கமல் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் இனி என்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்றார் தீர்க்கமாக.

மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு தலைவர் முரளி அப்பாஸிடம் பேசினோம்

அவர், “தலைவர் அறிக்கையில் அந்த வார்த்தை இருக்கும்போது அதன் ஆழத்தை,அதில் இருக்கும் உண்மையை நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். ஏதோ சில செய்திகள் அவருக்குச் சென்றிருக்க வேண்டும். அது அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதனால் தான் அப்படியான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். கமல் சாரின் நடவடிக்கையை வைத்து எதிர்காலத்தில் நாம் அதைப் புரிந்துகொள்வோம். இரண்டு நாட்களுக்குமுன் கமல் சார் அழைத்துப் பேசினார்கள் ‘கட்சியைப் புனரமைக்க, சீரமைக்க நான் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த முடிவு கடினமாக இருக்கும். சிலருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தும். ஆனால், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை தேவை என்பதால் கடினமாக அந்த முடிவை நான் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’ என்றார். அதன்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரையும் பதவி விலகச் சொன்னபோது அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இனி கமல் எடுக்கும் புதிய முடிவுகள், புதிய நிர்வாகிகளை வைத்துத்தான் கமலின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாம் புரிந்துகொள்ள முடியும். ‘எனக்கு இருக்கும் இரண்டு குழந்தைகளைப் போலத்தான் கட்சியும் மற்றொரு குழுந்தை. கட்சியின் கொடி, அதன் வண்ணங்களை முடிவு செய்யும் போதுகூட குழந்தைகளுக்கு ஆடை எடுக்கும் கவனத்துடன்தான் செய்தேன். தேர்தலில் பரப்புரையில் நான் பேசியது எல்லாம் சினிமா வசனங்கள் அல்ல. மக்களுக்கு நான் சொல்ல நினைத்த செய்திகள். இந்தக் கட்சியில் இருக்கும்போது அதன் நோக்கத்தையும் அதன் செயல்பாடு குறித்தும் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். நான் சிரமப்படுத்த விரும்பவில்லை. விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்’ என்றுதான் எப்போதும் பேசியிருக்கிறார்.

`5 முனைப் போட்டியில் 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட ம.நீ.ம!’ - கமல் சறுக்கியது எங்கே?!
முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

மாற்றத்தை நோக்கித்தான் மக்கள் நீதி மய்யம் தோற்றுவிக்கப்பட்டது.அந்த நோக்கத்தில் இருப்பவர்கள்தான் கட்சியில் இணைந்தார்கள். ஆனால், கட்சியில் இணைந்தபின் கட்சி செல்லும் வழியில்தான் செல்லவேண்டும். தனியாக ஒரு வழியை அமைத்துக்கொண்டு அதில் பயணித்தால் கட்சி அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தலைவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை நோக்கித்தான் இருக்கிறோம். அவர் எடுக்கும் முடிவு அவரது நலனுக்காக இல்லாமல் நிச்சயம் கட்சியின் நலனுக்காகத்தான் இருக்கும்." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு