Published:Updated:

டாஸ்மாக் பார் டெண்டரில் விதிமீறல்? - பார் உரிமையாளர்கள் போராட்டமும், அமைச்சரின் விளக்கமும்!

அமைச்சர் செந்தில் பாலாஜி
News
அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் பார் நடத்துவதற்காக விடப்பட்ட டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்த புகாரில் அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற டாஸ்மாக் பார் டெண்டரில் விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக, தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் நடத்தினர். தன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``டாஸ்மாக் பாரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், அரசின் அனைத்து கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் இந்த டெண்டரில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு விதிகளைத் தவிர மற்ற 66 விதிகளும் 2019-ம் ஆண்டு இருந்த அதே விதிகள்தான். எதற்காக இந்த விதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்ற விளக்கம் தரப்பட்டிருக்கிறது. டெண்டர் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றுவருகிறது.

போராட்டம்
போராட்டம்

இந்த டெண்டரில் எந்தவிதமான ஒளிவு மறைவுக்கும் இடம் கிடையாது. குறிப்பாக வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் ஐந்து பேர் என்னிடம் பேசினார்கள். அவர்களிடம், `இந்த டெண்டரில் ஏதேனும் ஐயப்பாடு இருந்தால், என்னைச் சந்தித்து மனு வழங்கினீர்களா?' என்று கேட்டேன். `கொடுக்கவில்லை' என்றார்கள். `இந்த ஏழு மாத காலத்தில் என்னைச் சந்தித்து ஏதேனும் பேசினீர்களா?’ என்றேன். அதற்கும் `இல்லை’ என்றார்கள். `டாஸ்மாக் எம்.டி-யைச் சந்தித்து இது தொடர்பாக ஏதேனும் மனு வழங்கினீர்களா?’ என்று கேட்டேன். அதற்கும் `இல்லை’ என்றுதான் சொன்னார்கள்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து பேசியவர். `` `எந்த அடிப்படையில் நீங்கள் என் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துகிறீர்கள்?’ என்றேன். `சில இடங்களில் இரண்டு பெட்டி வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம்’ என்று கூறினார்கள். `உங்களின் முன்னிலையில்தானே டெண்டர் பெட்டி திறக்கப்பட்டது. யார் யார் என்ன விலைப்புள்ளிகள் குறிப்பிட்டிருந்தார்கள் என்பது உங்களிடம் கூறப்பட்டது. கொடுக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுவருகிறது. கடந்த 30, 31-ம் தேதி இந்த டெண்டர் பெட்டி திறக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை. அதனால், இன்றுதான் அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த இரண்டு நாள்களில் என்ன முறைகேடுகளைக் கண்டுபிடித்தீர்கள்?’ என்று கேட்டதற்கு. அதற்கு மதுரையில் அவர்கள் சொன்னார்கள், இன்னொரு ஊரில் இவர்கள் சொன்னார்கள் என்று கூறுகிறார்கள். இவர்களின் கற்பனையின் அடிப்படையில் எழும் சந்தேகங்களுக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. `உங்களின் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள், என்னென்ன நடந்திருக்கின்றன என்று உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன அதையெல்லாம் எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறேன். `அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் மட்டும்தான் டெண்டர் கொடுக்கப்படும்’ என்று தெளிவாக அவர்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறேன். தமிழகம் முழுவதும் எல்லா இடங்களிலும் டெண்டர் முறைப்படிதான் நடந்தது" என்றார்.