Published:Updated:

`உண்மையில் இது உமர் அப்துல்லா தானா?!' - வைரல் போட்டோவால் கலங்கிய மம்தா

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

உமர் அப்துல்லா, குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு தனிமைச் சிறையில் தடுப்புக்காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய தோற்றத்தைக் குறித்தும் ட்வீட் செய்வதைக் குறித்தும் அதிகம் கவலைகொள்ள மாட்டார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அப்பகுதிகளில் விதித்தது. அணிவகுப்பு மற்றும் பேரணிகளைத் தடை செய்தல், இணையதள சேவை மற்றும் மொபைல் சேவைகளைத் தடை செய்தல் ஆகியவையும் இதில் அடங்கும். பாதுகாப்புக்காக ராணுவ வீரர்களும் அப்பகுதியில் அதிக அளவில் நிறுத்தியது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களையும் தடுப்புக் காவலில் வைத்தனர்.

காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகர் பகுதியில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பனிபோர்த்திய பின்னணியில் தாடியுடன் இருக்கும் உமர் அப்துல்லாவின் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

ட்விட்டரில் இவரின் புகைப்படத்தை முதன்முதலில் பதிவிட்டவர்களில் ஏ.என்.ஐ நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷூம் ஒருவர். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``இந்தப் புகைப்படத்தில் உமரை என்னால் அடையாளம் காண முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நமது ஜனநாயக நாட்டில் இதுபோன்று நடப்பது துரதிஷ்டவசமானது. இதெல்லாம் எப்போது முடிவடையும்?" என்று பதிவிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ள மெஹ்பூபா முப்தியின் ட்விட்டர் கணக்கிலும் இந்தப் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. முப்தியின் ட்விட்டர் கணக்கு அவரது மகள் இல்டிஜா முஜ்தியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவரின் தோற்றம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில் முப்தியின் ட்விட்டர் பக்கத்தில், ``சட்டவிரோதமாக ஆறு மாதங்கள் தொடர்ந்து தனது குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு தனிமைச் சிறையில் தடுப்புக்காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய தோற்றத்தைக் குறித்தும் ட்வீட் செய்வதைக் குறித்தும் அதிகம் கவலைகொள்ள மாட்டார்" என்று பதிவிட்டுள்ளனர்.

சீதாரம் யெச்சூரி, ``மத்திய அரசின் மிகமோசமான போக்கை இந்தப் புகைப்படம் சுட்டிக் காட்டுகிறது. முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர் எந்தவித குற்றச்சாட்டும் இன்றித் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பலரும் விரைவில் அவரை ட்விட்டருக்குத் திரும்பி வரும்படி அழைப்பு விடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ஜம்மு - காஷ்மீர் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களைப் படிப்படியாக விடுவிக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒருபகுதியாக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பேரின் தடுப்புக்காவலைக் கடந்த 10-ம் தேதி அரசு ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. காஷ்மீரை பார்வையிட்ட அமெரிக்கத் தூதர் ஆலிஸ் வெல் ``குற்றச்சாட்டு இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும்" எனக் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு