Published:Updated:

``என்னால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது" - ஆளுநர் Vs மம்தா... தொடரும் கடிதப்போர்

மம்தா பானர்ஜி, ஜகதீப் தன்கர் ( Twitter )

``வழக்கம் போல என் மீது குற்றம்சாட்டும் நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள்" என மேற்கு வங்க முதல்வரை, அந்த மாநில ஆளுநர் சாடியிருக்கிறார்.

``என்னால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது" - ஆளுநர் Vs மம்தா... தொடரும் கடிதப்போர்

``வழக்கம் போல என் மீது குற்றம்சாட்டும் நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள்" என மேற்கு வங்க முதல்வரை, அந்த மாநில ஆளுநர் சாடியிருக்கிறார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி, ஜகதீப் தன்கர் ( Twitter )

மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த, பஞ்சாயத்துத் தலைவர் பகதூர் ஷேக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை பிர்பூமில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வீடுகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் ஒரே வீட்டில் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பா.ஜ.க கோரிக்கை வைத்ததன் பேரில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு, ``இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை மேற்கு வங்க அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

தீ வைக்கப்பட்ட வீடு
தீ வைக்கப்பட்ட வீடு
ட்விட்டர்

அதைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், ``இந்தச் சம்பவம் ஒரு பயங்கரமான வன்முறை மற்றும் தீவைக்கும் களியாட்டம். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் குறிக்கிறது" எனக் கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சுக்குப் பதிலடி தரும் விதமாக, ``தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும்" என்று மம்தா பானர்ஜி கடிதம் மூலம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மம்தாவின் இந்த கருத்துக்கு பதிலளித்து ஆளுநர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ``வழக்கம் போல என் மீது குற்றம்சாட்டும் நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். போக்டோய் கிராமத்தில் ஆறு பெண்களும், இரண்டு குழந்தைகளும் உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராம்பூர்ஹாட் சம்பவம் மிகவும் கொடூரமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மம்தா பானர்ஜி மற்றும் அமித் ஷா
மம்தா பானர்ஜி மற்றும் அமித் ஷா

கிடைத்த தகவலின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் படுகொலை சம்பவத்துடன், ​​சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவங்களுடன் பலர் ஒப்பிடுவது நியாயமானது தான். இத்தகைய சூழ்நிலையில், என்னால் ராஜ் பவனில் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அது எனது அரசியலமைப்பு கடமையை மன்னிக்க முடியாத வகையில் கைவிடுவதாகும். ஜனநாயகத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் ஒரு முதலமைச்சர், அரசியலமைப்பின் கீழ் தனது கடமையைச் சரியாகச் செய்யும் ஆளுநர் மீது தவறுகளைக் கண்டுபிடிப்பதை விட, சட்டத்தின் ஆட்சியை உச்ச கட்டளையாக வைத்திருங்கள்.

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர்
மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர்
ட்விட்டர்

இந்த மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, உங்கள் பதவிப் பிரமாணத்தை உறுதிப்படுத்துங்கள். இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டு, முதலமைச்சராகவும், உண்மையாகவும் மனசாட்சியுடனும் கடமைகளைச் செய்யுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

அதுவே ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு, அடக்குமுறை மற்றும் துன்பங்களில் இருந்து மக்கள் விடுபட, ஒற்றுமையுடன் செயல்படும் வழி" என ஆளுநர் ஜகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism