Published:Updated:

10 % இட ஒதுக்கீட்டில் அரசின் நிலைப்பாடு என்ன? - பேரவையில் ஓ.பி.எஸ் விளக்கம்

கலிலுல்லா.ச

``எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழகம் ஆதரிக்கும்” எனப் பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்த அனைத்துக்கட்சிக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பாகத் தமிழக அரசு என்ன நிலைபாடு எடுத்துள்ளது என்பது குறித்து, தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது ஓ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது தொடர்பாக அவர், ``10 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாகத் தமிழகத்துக்கு 1,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஜெயலலிதாதான் உறுதி செய்தார். அது என்றும் நிலைநிறுத்தப்படும். அதற்காக சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாதிப்பு இல்லை என்றால் இந்த இடஒதுக்கீட்டை ஆதரிப்போம். இல்லையெனில், எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்'' என்றார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ``நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டுமே அழைத்திருக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ``திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நல்ல பல கருத்துகளைத் தெரிவித்து இருந்தால் ஒருவேளை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டும் அழைத்திருந்தால் அவர் அங்கு பேசியிருக்க முடியாது. எனவேதான் அனைத்துக்கட்சிகளையும் அழைத்து அனைவரின் கருத்துகளையும் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ``அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமல்லாது மேலும் பல கட்சிகளை குறிப்பாக, திராவிட கழகத் தலைவரை அழைக்க நான் பரிந்துரை செய்தேன். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் கட்சி இந்திய ஜனநாயக கட்சியினர்களையும் ஏன் அழைக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ``முதல்வர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காதது வருத்தத்துக்குரியது” எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ``திட்டமிட்டு யாரையும் புறக்கணிக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.