Published:Updated:

`நீங்கள் படித்த ஸ்கூலில் நாங்கள் ஹெட்மாஸ்டர்!'- மாநிலங்களவையில் அனல்பறந்த குடியுரிமை மசோதா விவாதம்

`உங்களுக்கு என்ன வேண்டும். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா?'

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத் ( twitter )

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் பல்வேறு சூடான விவாதங்களுக்குப் பிறகு, நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று மாநிலங்களவையில் சட்டத்திருத்த மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்து பேசினார். அதில், ``பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களைச் சந்தித்து இந்தியாவில் அடைக்கலம் வந்து பரிதாபமான வாழ்க்கையை வாழும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமைத் திருத்த மசோதா நிச்சயம் மிகப்பெரிய நிம்மதியை வழங்கும்.

இந்திய முஸ்லீம்கள் இந்த மசோதா குறித்து கவலைப்படத் தேவையில்லை" என்றவர், எதிர்க்கட்சிகளைப் பார்த்து, ``உங்களுக்கு என்ன வேண்டும். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா... அப்படி அளித்தால் எப்படி இந்த நாடு இயங்கும்" என்று ஆவேசமாகப் பேசினார்.

அமித் ஷா
அமித் ஷா
twitter

பின்னர் மசோதா குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கருத்தை முன்வைத்து பேசி வருகின்றனர். ``இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை அளிக்க முன்வரவில்லை. 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். ஒரு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் குடியுரிமைக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஏன்?" எனத் தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசினார்.

``இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும். அதேநேரம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்கும் மற்ற நாடுகளில் இருந்துவரும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும்" என அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசினார்.

அவரது பேச்சை அடுத்து பேசிய மற்றொரு அ.தி.மு.க எம்.பி விஜிலா சத்யானந்த், ``இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அல்லர். முகாம்களில் இருக்கும் 90 சதவிகிதம்பேர் இங்கேயே இருக்கும் இலங்கை அகதிகளுக்கு பிறந்தவர்கள்" என்று வலியுறுத்தினார்.

`தமிழ்நாட்டுக்குள் நம்மால் கால்வைக்க முடியாது!’ -டி.ஆர்.பாலு செயலால் தகித்த தி.மு.க எம்.பி-க்கள்

காங்கிரஸ் சார்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ``சட்ட நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிந்தும் இதை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். மதரீதியாகத் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை என இந்தச் சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்டிருப்பது ஏன். இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்.

இதில் எப்படி இஸ்லாமியர்களையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள். கிறிஸ்துவர்களைச் சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன். இந்தக் கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார்" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியவர்,

``இந்த மசோதாவை நீதிமன்றங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்" என்று நீதிமன்றத்தை நாடப்போகும் முடிவை சூசகமாகக் கூறினார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
twitter

தொடர்ந்து சூடான விவாதங்களால் மாநிலங்களவை தகித்துக்கொண்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளைகூட விடாமல் சபை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த மசோதா குறித்து சிவசேனா பேசியது சபையில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது.

அதற்குக் காரணம், மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தி.மு.க-வுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சிவசேனா குரல்கொடுத்தது. ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. சிவசேனாவின் இந்த நடவடிக்கை அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விமர்சனங்கள் எழ, மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனப் பேசப்பட்டது. அதன்படியே சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் பேச்சும் அமைந்தது.

`உங்கள் மசோதாக்களிலேயே இதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஆனால்...!’ - நாடாளுமன்றத்தில் தகித்த கனிமொழி

ராவத் பேசுகையில், ``இந்த மசோதாவை ஆதரிக்காதவர்கள் தேசவிரோதிகள், அதை ஆதரிப்பவர்கள் தேசியவாதிகள் என்று கூறுவதை நேற்று முதல் காதில் கேட்டுவருகிறேன். எங்கள் தேசியவாதம் அல்லது இந்துத்துவா குறித்து எந்த சர்ட்டிஃபிகேட்டும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் யாரிடமிருந்தும் தேசபக்தி சான்றிதழை எடுக்கத் தேவையில்லை. தேசியவாதம் குறித்து எந்தப் பாடமும் தேவையில்லை. நீங்கள் படித்த பள்ளியில் நாங்கள் ஹெட்மாஸ்டர். எங்கள் பள்ளியின் ஹெட்மாஸ்டர் பாலாசாகேப் தாக்கரே. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பிரசாத் முகர்ஜி ஆகியோரும் இதில் அடங்குவர்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்
twitter

பா.ஜ.க எம்.பி-க்கள் மத்தியில் இன்று பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் மொழியைப் பேசுகிறது என்று கூறியுள்ளார் என அறியமுடிந்தது. இங்கு நான் சொல்கிறேன். இது பாகிஸ்தானின் நாடாளுமன்றம் அல்ல. நாங்கள் பாகிஸ்தான் குடிமக்கள் அல்ல. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் ஊடுருவியவர்களை நீங்கள் வெளியேற்றுவீர்களா? நாங்கள் அகதிகளுக்குத் தங்குமிடம் அளிக்கிறோம் என்றால், அதுகுறித்து எந்த அரசியலும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா?" என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து மாநிலங்களவையில் விவாதங்கள் நடைபெற்றுவருகிறது.

`கிழித்தெறியப்பட்ட நகல்; ஆதரவு 311!’- மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது குடியுரிமை மசோதா