Published:Updated:

`நாங்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள்!’ - அன்புமணி ராமதாஸ்

பா.ம.க ஆர்ப்பாட்டம்
பா.ம.க ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு கோரி, பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தநிலையில், பா.ம.க-வின் அன்புமணி உள்ளிட்டோர் முதலமைச்சரைச் சந்தித்தனர்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், இன்று சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களைச் சென்னைக்குள் வர விடாமல் காவல்துறையினர் சென்னை புறநகர்ப் பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி முன்னேறிச் செல்ல முற்பட்டனர். அதோடு, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கி ரயிலைத் தடுத்து நிறுத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இதன் காரணமாக, பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். போராட்டம் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``தமிழக முதலமைச்சரின் அழைப்பை ஏற்று ஒரு குழுவாக, முதல்வரையும் துணை முதல்வரையும் சந்தித்து, எங்களுடைய கோரிக்கைகள் குறிப்பாக, தமிழகத்தில் வன்னியர்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டுமென்றும், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 1989-லிருந்து இன்றுவரை எந்தெந்தச் சமுதாயத்துக்கு எத்தனை இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அ.தி.மு.க-வுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு முன்பாக, எங்களுடைய பத்து அம்சக் கோரிக்கைகளில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்றும், கடந்த ஆண்டு முதல்வரை மருத்துவர் ஐயா ஒரு குழுவாக நேரில் சந்தித்து மீண்டும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார். மூன்று மாதத்துக்கு முன்பு எங்களின் கட்சி பொதுக்குழுக் கூடி வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்குத் தெரியப்படுத்தினோம். பத்து நாள்களுக்கு முன்பு, பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் கூட்டாக இணையவழியாக நடந்த பொதுக்குழுவில் மீண்டும் இதை வலியுறுத்தித் தொடர்ந்து அறவழியிலேயே போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்படி, சென்னையில் இன்று அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். வரும் வழியில் எங்கள் தொண்டர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அவர்களை அமைதியான முறையில் இருக்கும்படி நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம்."

20% இட ஒதுக்கீடு கோரிக்கை ஏதோ ஒரு சாதிப் பிரச்னை இல்லை. யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. எந்த அமைப்புக்கும், சமுதாயத்துக்கும், அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது. இது ஒரு சமூகநீதிப் பிரச்னை. இதைத் தமிழகத்தின் வளர்ச்சிப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

``ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்து உங்கள் கோரிக்கையைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களைச் சந்தித்தோம். உடன் துணை முதல்வரும் இருந்தார் . எங்களின் கோரிக்கையை நாங்கள் சொன்னோம். இந்தக் கோரிக்கை ஏதோ ஒரு சாதி பிரச்னை இல்லை. யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. எந்த அமைப்புக்கும், சமுதாயத்துக்கும், அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது. இது ஒரு சமூகநீதிப் பிரச்னை. இதைத் தமிழகத்தின் வளர்ச்சிப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். காரணம், தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கு வன்னியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சமூகத்திலும் மிக மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். விவசாயம் செய்கிறார்கள், குடிசைகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சாலை போடுபவர்களாக, வீடுகளைக் கட்டும் கொத்தனார்களாக, கல் உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு மிகவும் பின்தங்கிய சமுதாயமாக இருக்கிறது. இந்தச் சமுதாயத்தினர் வாழ்கிற பகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. தொழிற்சாலையும் இல்லை. வேலைவாய்ப்பு கிடையாது. மற்ற மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் ஒரு சூழல் இருக்கிறது. கல்வியை எடுத்துக்கொண்டால், கடைசி ஏழு மாவட்டங்கள், அது வட மாவட்டங்களாக இருக்கின்றன. தொழில், அதிலும் கடைசியாக இருக்கிறது. இந்தச் சமூகம் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும் என்ற வளர்ச்சிப் பிரச்னையாக இதைப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறோம். முதல்வரும் இதைக் கேட்டுக்கொண்டு நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுக்காலமாக ஒரு நியாயமான கோரிக்கைக்காக நாங்கள் போராடிவருகிறோம். இன்றளவும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை.

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நிச்சயமாக நாங்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரும் வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது. எங்களை ஏதோ வன்முறை சமுதாயமாக மாற்றாதீர்கள். அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்காதீர்கள். குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் இரவு முழுவதும் பயணம் மேற்கொண்டுவரும் அவர்களைக் காவல்துறை திடீரென்று வழிமறித்து நிறுத்தி, மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார்கள். யாரோ செய்வதைவைத்து எங்கள் கட்சியும், சமுதாயமும் இப்படித்தான் என்பதுபோலச் சித்திரிக்க வேண்டாம்" என்று பேசினார்.

சீனியர்களின் ஆதங்கம்; ராமதாஸ் மௌனம்... பா.ம.க கூடாரத்தில் கூட்டணி புகைச்சல்

இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த சிறிது நேரத்தில், சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். `சாதிவாரியான கணக்கெடுப்புகளை நடத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துவருகிறன்றன. 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. வழக்கை எதிர்கொள்ளப் புள்ளிவிவரங்கள் தேவை. சாதிவாரியாக புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கும்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

#BanPMK
#BanPMK

அதேநேரத்தில் பா.ம.க-வினர் காலையில் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது, ரயில் மீது கற்களை வீசியது மற்றும் காவல்துறை தடுப்புகளை உடைத்தெறிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை #BanPMK என்ற ஹேஷ்டேக்கோடு நெட்டிசன்கள் பதிவேற்றிவருகிறார்கள். ட்விட்டரில் #BanPMK என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு