Published:Updated:

`ஒரு விஷயம்.. ராஜ்பவன் வரை வாருங்கள் என்றார், ஆனால்..!’- வருந்தும் சரத்பவார்

உத்தவ் - பவார்
உத்தவ் - பவார்

தங்களைப் பொய் சொல்லி ராஜ்பவனுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்.சி.பி-யின் அஜய் பவார் துணை முதல்வராகவும் இன்று காலை பதவியேற்றுள்ளனர். மகாராஷ்ராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டதாக முதல்வர் பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

சரத்பவார்
சரத்பவார்

இந்த நிலையில், இன்று பிற்பகல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், என்.சி.பி தலைவர் சரத்பவாரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். முதலில் பேசிய சரத்பவார், ``சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி ஆகிய மூன்று கட்சியினரும் இணைந்துதான் ஆட்சியமைக்கவுள்ளோம். ஏனெனில் எங்களிடம்தான் போதுமான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. 44, 56, 54 மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 170 பேர் எங்களிடம் உள்ளனர். அஜித் பவாரின் முடிவு தேசியவாத காங்கிரஸின் கொள்கைக்கு எதிராக உள்ளது. என்.சி.பி-யின் எந்த நிர்வாகியும், தொண்டரும் பா.ஜ.க-வுடன் இணைவதை விரும்பவில்லை.

ஒரு வேளை எங்கள் கட்சியிலிருந்து செல்ல விரும்பும் எம்.எல்.ஏ-க்கள் இருந்தால், அவர்கள் அனைவருக்கும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், தகுதி நீக்கம் என்ற ஒன்று இருப்பதையும் அதனால் தங்கள் பதவிகளையும் இழக்க நேரிடும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஆளுநர் பா.ஜ.க-வின் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லியிருப்பார் என நம்புகிறேன். ஆனால், அது அவர்களால் முடியாத காரியம். அதன் பிறகு முன்னதாக நாங்கள் கூறியதுபோல் எங்கள் மூன்று கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும்.

என்.சி.பி எம்.எல்.ஏ
என்.சி.பி எம்.எல்.ஏ

கட்சி விதிகளின்படி அஜித்பவார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி 10-11 எம்.எல்.ஏ-க்கள் ராஜ்பவனுக்குச் சென்று அஜித்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களில் மூன்று பேர் தற்போது என்னுடன் உள்ளனர். பொய் சொல்லி எம்.எல்.ஏ-க்களை தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார் அஜித். அவர் இப்படிச் செய்வார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை” என தன் உறவினர் அஜித்தையும் பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சித்துள்ளார் சரத்பவார்.

`பட்னாவிஸின் ரகசிய சந்திப்பு; ஸ்விட்ச் ஆஃப் ஆன அஜித் பவார் போன்!- மகாராஷ்டிரா அரசியல் மாறிய பின்னணி

இதற்கிடையே, பேசிய என்.சி.பி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ, ``இன்று காலை ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று என்னையும் சில எம்.எல்.ஏ-க்களையும் ராஜ்பவனுக்கு அழைத்துச் சென்றார் அஜித்பவார். அங்கு என்ன நடக்கிறது என நாங்கள் புரிந்துகொள்வதற்குள் பதவியேற்பு விழா முடிந்துவிட்டது. உடனடியாக நான் சரத்பவாரை சந்தித்து நடந்தவற்றைக் கூறினேன். அங்கு என்னுடன் 10 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர், கண் இமைக்கும் நேரத்தில் பல விஷயங்கள் முடிந்துவிட்டது ஆனால், எங்கள் யாருக்கும் நடப்பது தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இறுதியாகப் பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, `` முன்னதாக இவிஎம் மெஷின் வைத்து விளையாட்டு காட்டினார்கள். தற்போது புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளனர். இனி தேர்தலே நடத்தத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. வேறு ஒருவர் காட்டிக்கொடுத்து பின்னால் குத்தப்பட்டுதான் சத்ரபதி சிவாஜி இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதும் அதேபோல் மீண்டும் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மக்கள் முதுகில் குத்தப்பட்டுள்ளது.

சிவசேனா எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுக்க அவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அது என்றைக்கும் முடியாத காரியம். என்.சி.பி - சிவசேனா கூட்டணி தற்போதும் உயிர்ப்புடன் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு