Published:Updated:

``காங்கிரஸிடம் மாற்றம் தெரிகிறது; பாஜக-விடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது” - முத்தரசன் பேட்டி

முத்தரசன்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் சூழலில், பா.ஜ.க-வின் வலிமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுமா என்பது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Published:Updated:

``காங்கிரஸிடம் மாற்றம் தெரிகிறது; பாஜக-விடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது” - முத்தரசன் பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் சூழலில், பா.ஜ.க-வின் வலிமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுமா என்பது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

முத்தரசன்

`` `எடப்பாடியைத் தொண்டர்கள் ஏற்கவில்லை’ என சமீபத்தில் கூறினீர்களே... அது ஏன்?”

“அ.தி.மு.க-வில் தொண்டர்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இப்போது யாருமே இல்லை. அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிந்தபோன கதை.”

“பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடியை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லையே... தொண்டர்களின் ஆதரவு இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும்?”

“தொண்டர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் நீதிமன்றம் சென்றிருக்கிறார், அதைப் பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது.”

எடப்பாடி - பன்னீர்
எடப்பாடி - பன்னீர்

``50,000-க்கும் அதிகமான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாதது அதிர்ச்சியளிக்கிறதே?”

“இது தமிழ்நாட்டின் கவலைக்குரிய பிரச்னை. இதை நன்கு ஆய்வுசெய்து தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பெற்றோர்களும் புரிந்துகொண்டு, தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.”

“தமிழ்நாட்டில் கஞ்சா, போதைப்பொருள் புழக்கம் பரவலாக அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறதே?”

“போதைப்பொருள்கள் தமிழகத்துக்குள் எப்படி வருகிறது என்பதே தெரியவில்லை. மத்திய அரசின் செல்வாக்கு பெற்ற, பிரதமரின் நெருங்கிய நண்பர் வைத்துள்ள துறைமுகங்கள் மூலமாகத்தான் போதைப்பொருள்கள் பரவுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. போதைப்பொருள்கள் புழக்கத்தை முழுமையாகத் தடுக்க தமிழக அரசு இன்னும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.”

“ஆணவக்கொலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?”

“இந்தக் காலத்திலும் ஆணவக்கொலை என்பது அநாகரிகமான செயல். இப்போதும் இப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பது மனவேதனையைத் தருகிறது, இதை அனுமதிக்கக் கூடாது. சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தவும், ஆணவக்கொலைகளைத் தடுக்கவும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்”

“ஜனநாயகம் பற்றி ராகுல் லண்டனில் பேசியதை வைத்து ஆளுங்கட்சியே நாடாளுமன்றத்தை முடக்குவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அதானி குழும முறைகேடுகள் குறித்து ராகுல் காட்டமாகப் பேசினார். எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்புகின்றன. அதிலிருந்து மோடி தப்பித்துக்கொள்ள பா.ஜ.க நாடாளுமன்றத்தை முடக்குகிறது. இந்தத் திசைத்திருப்பல்தான் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்.”

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டுதான் இருக்கிறது. ஆனால், எதிரணி பலமாக இருப்பதாகத் தெரியவில்லையே?”

``2024 நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். காங்கிரஸிடம் பெரிய மாற்றம் தெரிகிறது. ராய்ப்பூர் மாநாட்டில் பல நல்ல தீர்மானங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பலமான அணி உருவாகும் என்று நம்புகிறோம்.”

“ஆனால், பல மாநிலக் கட்சிகளை காங்கிரஸால் இணைக்க முடியவில்லை என்பதைக் கண்கூடப் பார்க்க முடிகிறதே?”

“பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைத்தால் அது நாட்டுக்கு ஆபத்து என்பதைச் சில கட்சிகள் உணர்ந்துவிட்டன. நிச்சயம் ஒன்றிணைவார்கள்.”

மம்தா, அகிலேஷ்
மம்தா, அகிலேஷ்

“சில மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் - காங்கிரஸ் இடையே கூட முரண் இருக்கிறது, மம்தா, சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் காங்கிரஸோடு இணைய மறுக்கிறார்களே?”

“கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் என இரண்டே அணிகள்தான் இருக்கின்றன. பா.ஜ.க-வுக்கு அங்கு வேலையே இல்லை. எனவே, அங்கு எப்படி காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றாக முடியும்... யதார்த்தத்தில் வாய்ப்பில்லை. மம்தாவின் நிலைப்பாடு பா.ஜ.க-வுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பது அவருக்கும் தெரியும். ஓரிரு இடங்களில் முரண் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அது பெரிய முரண் என்று சொல்ல முடியாது.”

“ஆனாலும் பா.ஜ.க-வின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியும் என்று நம்புகிறீர்களா?”

“சமீபத்தில் நடந்த ஆறு இடைத்தேர்தல்களில் மூன்றில் பா.ஜ.க., மூன்றில் காங்கிரஸ் சரிசமமாக வென்றிருக்கிறார்கள். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றத் தேர்தல்களிலும் கடந்தமுறை பெற்ற வாக்கை பா.ஜ.க இம்முறைப் பெறவில்லை. வன்முறை, சூழ்ச்சியின் மூலமாகத்தான் இதையே பெற்றிருக்கிறார்கள். ஆனால், மக்கள் பா.ஜ.க-வின்மீது வைத்திருக்கும் கடுங்கோபம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.”

“ஜனநாயகப்படி தேர்தலைச் சந்தித்துதானே வென்றார்கள்?”

“ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இயங்குவதுதான் பாரதிய ஜனதா கட்சி. அரசியலமைப்பின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ நம்பிக்கையற்ற ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இரண்டாம் உலகப் போருக்குக் காரணமான ஹிட்லரைப் பின்பற்றக்கூடிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். ஆக, அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உத்தரவைச் செயல்படுத்தும் பா.ஜ.க ஜனநாயகத்தை எப்படிப் பின்பற்றும்?”