மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று தனது ஆதரவாளர்களுடன் அயோத்தி சென்றார். அவரை வரவேற்க மும்பையிலிருந்து சிறப்பு ரயிலில் ஆயிரக்கணக்கானோர் அயோத்திக்குச் சென்றனர். லக்னோவிலிருந்து அயோத்தி வந்த ஏக்நாத் ஷிண்டேயை அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் அயோத்தி சென்றார். இருவரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு வழிபட்டனர். பின்னர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ``எங்களது அயோத்தி யாத்திரையால் சிலருக்கு மகிழ்ச்சி இல்லை. சிலருக்கு இந்துத்துவாமீது அலர்ஜி. எனவே, இந்துத்துவா குறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியின் தலைமையில் இந்துத்துவா கொள்கையுடன் அரசு பதவிக்கு வந்தது. இந்து என்பதில் பெருமை கொள்கிறோம் என்று பால் தாக்கரே சொல்வார்.

எனவேதான் சிவசேனா, பா.ஜ.க-வின் கொள்கை ஒன்றாக இருக்கிறது. அதிகாரத்துக்காக உத்தவ் தாக்கரே தன் தந்தையின் கனவிலிருந்து விலகிச்சென்றார். மக்கள் பா.ஜ.க - சிவசேனா அரசுக்கு வாக்களித்தனர். ஆனால், சிலர் தவறான நடவடிக்கை எடுத்தனர். அதை நாங்கள் கடந்த ஒன்பது மாதத்துக்கு முன்பு சரிசெய்தோம். ராமரின் ஆசீர்வாதத்தால் சிவசேனா பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் பெற்றிருக்கிறோம். முதல்வரான பிறகு அயோத்திக்கு வருவேன் என்று சொன்னேன். இந்த நாளை எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எங்களது முழு அரசும் இங்கு இருக்கிறது. இதற்கு முன்பு அயோத்திக்கு வந்திருந்தபோது ராமர் கோயிலுக்கு அடித்தளம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது.
இப்போது தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும்போது கனவு நனவாவது போன்று இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான இந்துக்களின் கனவாகும். பிரதமர் மோடியைத் தவிர ராமர் கோயில் கட்ட யாரும் எதுவும் செய்யவில்லை. பால் தாக்கரேயின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியிருக்கிறார். சிலர் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன்னார்கள். ஆனால், தேதியைச் சொல்லவில்லை. பிரதமர் மோடிதான் ராமர் கோயிலைக் கட்டி கோடிக்கணக்கான இந்துக்களின் கனவை நனவாக்கினார்” என்று தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸுடன் சேர்ந்து ஷிண்டே அங்கிருந்த அனுமன் கோயில் உட்பட வேறு கோயில்களுக்கும் சென்றார்.

சரயு ஆற்றங்கரையில் மகா ஆர்த்தியில் ஷிண்டே கலந்துகொண்டார். தேவேந்திர பட்னாவிஸ் ஹெலிகாப்டரில் சென்று ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை வானிலிருந்தபடி பார்வையிட்டார். அவர் ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது.