`ஐ-பேடு தருகிறோம்; புத்தகம் இன்றி பாடம் நடத்த தயாரா?’- ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பும் நாராயணசாமி

``அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர். அதைச் செயல்படுத்த வேண்டியது யார் ?” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில் `நவீன கால கற்பித்தலின் பரிணாமம், சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தியல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ``2016-ம் ஆண்டு நாங்கள் புதிய தொழில் கொள்கையைக் கொண்டு வந்ததுடன், தொழில் முனைவோர்களுக்காகப் புதிய ஸ்டார்ட்-அப் கொள்கையையும் வெளியிட்டோம். அதன் காரணமாகச் சென்னையிலிருந்து 500 தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரவிருக்கின்றன.

2,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய ஐ.டி பார்க் ஒன்றை புதுச்சேரியில் தொடங்க வேண்டும் என்பது எனது நோக்கம். ஆனால், ஆளுநர் கிரண்பேடி கொடுக்கும் தொல்லையால் எனக்கு இரவில் தூக்கம் வருவதில்லை. எந்த வேலையும் நடக்கக்கூடாது என்று தடுக்கும் ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது.
அதிகாரிகளையும் சேர்த்துதான் சொல்கின்றேன். ஐ.டி பார்க் மட்டுமல்லாமல் தீம் பார்க், வாட்டர் ஸ்போர்ட்ஸ், க்ரூஸ் போன்றவற்றைக் கொண்டுவந்தால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதற்காக சேதராப்பட்டில் 900 ஏக்கரும் காரைக்காலில் 600 ஏக்கர் நிலங்களும் இருக்கின்றன. தொழில் முனைவோருக்கு அந்த இடங்களைக் கொடுக்க முயன்றால் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு அந்தக் கோப்புகள் ஆளுநர் மாளிகையில் இருந்து திருப்பி வருகிறது. நிலத்தை விற்பதற்கும் வாடகைக்கு விடுவதற்கும், குத்தகைக்கு விடுவதற்கும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் ஆக்கிவிட்டோம் எனத் தலைமைச் செயலர் கூறுகிறார்.

அதேசமயம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எங்கே இருக்கின்றனர்? அரசுப் பள்ளியில் தரம் இருந்தால் ஏன் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்கின்றனர். அதைச் செயல்படுத்த வேண்டியது யார். நான் யாரையும் குறை கூறவில்லை. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்க வேண்டும். புத்தகத்துக்கு மாற்றாக ஐ-பேடு பயன்படுத்தும் நிலைக்கு உலகம் மாறிவருகிறது. சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் படிக்கும் மாணவர்கள் அதைத்தான் பயன்படுத்துகிறார்கள். புதுச்சேரி மாணவர்களுக்கும் ஐ-பேடு தருவதற்குத் தயாராக இருக்கிறோம். புத்தகம் இல்லாமல் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் தயாரா? நாங்கள் திண்ணைப் பள்ளியில் மரத்தின் கீழ் படித்தோம். ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததால் எம்.பி-யான பின்னர் எம்.எல் பட்டம் பெற்றுள்ளேன். ஊக்குவித்தால் மாணவர்கள் படிப்பார்கள்" என்றார்.