Published:Updated:

Exclusive: ‘மோடி, பாஜக-வின் பிம்பத்தை உடைத்துள்ளோம்!’ –கர்நாடக காங்கிரஸ் ‘வார் ரூம்’ தலைவர் பேட்டி

ராகுல், சித்தராமையா, சிவக்குமார்

‘கர்நாடகா தேர்தல் முடிவில் நாம் ஒன்றே ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் மோடி மற்றும் பா.ஜ.க குறித்தான பிம்பம் உடைந்து, சிதைந்துவருகிறது.’ – ‘வார் ரூம்’ தலைவர் சசிகாந்த் செந்தில்

Published:Updated:

Exclusive: ‘மோடி, பாஜக-வின் பிம்பத்தை உடைத்துள்ளோம்!’ –கர்நாடக காங்கிரஸ் ‘வார் ரூம்’ தலைவர் பேட்டி

‘கர்நாடகா தேர்தல் முடிவில் நாம் ஒன்றே ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் மோடி மற்றும் பா.ஜ.க குறித்தான பிம்பம் உடைந்து, சிதைந்துவருகிறது.’ – ‘வார் ரூம்’ தலைவர் சசிகாந்த் செந்தில்

ராகுல், சித்தராமையா, சிவக்குமார்

நாடு முழுவதிலும் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 135 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் இருக்கிறது.

தென்னிந்தியாவில் வலுவான அடித்தளம் அமைக்க, பல ஆண்டுகளாகப் போராடிவரும் பா.ஜ.க., கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியைத் தன்வசம் வைத்திருப்பதால், கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென, பா.ஜ.க அதிதீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஐந்து மாநில முதலமைச்சர்கள் எனப் பலரும் தேர்தல் பிரசாரம் செய்தனர். 1,377 ‘ரோடு ஷோ’, 3,116 பிரசாரக் கூட்டங்கள், 9,125 மக்கள் கூட்டங்களை நடத்தினர்.

பா.ஜ.க Vs காங்கிரஸ்.
பா.ஜ.க Vs காங்கிரஸ்.

மறுபக்கம் வருகிற 2024 லோக் சபா தேர்தலில் வலுவான எதிரணியை உருவாக்க, கர்நாடகாவில் வெற்றிபெற்று அடித்தளத்தை உருவாக்க வேண்டுமென்ற முனைப்பில், காங்கிரஸாரும் தீவிர பிரசாரம் செய்தனர். முதல்வர் பதவிக்கு காய்நகர்த்தி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமியும் பிரசாரம் செய்தார். ஆனால், பா.ஜ.க., காங்கிரஸுக்கிடையேதான் கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று காலை, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. 113 இடங்களைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், மதியம் 2:00 மணி நிலவரப்படி காங்கிரஸ் மொத்தம் 135 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க 63 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 22 இடங்களிலும், இதர கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி எந்தக் கட்சியின் ஆதரவுமின்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நிலையில் இருக்கிறது.

சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்

‘மோடி பிம்பத்தை உடைத்திருக்கிறோம்!’

காங்கிரஸின் இந்த வெற்றி குறித்து, கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் ‘வார் ரூம்’ தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், விகடனுக்குப் பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய சசிகாந்த் செந்தில், ‘‘கர்நாடகா தேர்தல் முடிவு, மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையைப் பிரதிபலித்திருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது மக்களின் விருப்பம்.

கர்நாடகா ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் ராகுல்.
கர்நாடகா ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் ராகுல்.

காங்கிரஸ் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த முறை கர்நாடகா தேர்தலில் மிகவும் ‘புரொஃபஷனல்’ வழியில், ‘டெக்னிக்கலாக’ப் பணியாற்றியிருக்கிறோம். சிறிய அளவிலான குழுவைக்கொண்டு, ‘புரொஃபஷனல்’ வழியில், பா.ஜ.க-வை வீழ்த்தியிருக்கிறோம். எங்கள் வியூகங்களை எதிர்கொள்ள முடியாமல், பா.ஜ.க-வினர் திணறியதுடன், பிரசாரத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு எந்த ‘கன்டென்ட்டும்’ இல்லாத நிலையே நீடித்தது.

பா.ஜ.க வியூகங்கள் தகர்ந்துபோயின!

வழக்கமாக எங்கு தேர்தல் நடந்தாலும், ‘மோடி வருவார் வெற்றியைத் தருவார், மோடி அலை வீசுகிறது' என்பது போன்ற பிம்பம் நிலவும். இந்த முறை, ‘மோடி அலை’ தொடர்பான பிம்பத்தையும், பா.ஜ.க-வின் ஒட்டுமொத்த தேர்தல் ‘மெக்கானிசத்தையும்’ முற்றிலுமாக உடைத்திருக்கிறோம். எங்களின், ஐந்து அம்சத் தேர்தல் அறிக்கையின் முன்பு, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையும், அவர்களின் வியூகங்களும் தகர்ந்துபோயின.

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடா’ யாத்திரையும், அனைத்து நிலை நிர்வாகிகளும், தலைவர்களின் கடுமையான உழைப்புக்கும் கிடைத்த வெற்றிதான் இது. பா.ஜ.க-வினர் நூற்றுக்கணக்கான ‘ரோடு ஷோ’ கூட்டங்கள் நடத்தியும் ஒரு பயனும் இல்லை.

இந்துத்துவம், பிரித்தாளும் அரசியல் மற்றும் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்ட பா.ஜ.க., எங்களின் சாத்தியமான வாக்குறுதிகள், நாங்கள் முன்வைத்த ‘பா.ஜ.க-வின் 40 சதவிகிதம்’ ஊழல் குற்றச்சாட்டு, PayCM பிரசாரம்... நாங்கள் மக்களிடம் கூறிய உண்மை நிலவரத்தை எதிர்கொள்ள முடியாமல், தோல்வியைத் தழுவியிருக்கிறது.

மோடி - பா.ஜ.க
மோடி - பா.ஜ.க

மோடியின் பிம்பத்தை காங்கிரஸ் உடைத்திருப்பதால், வருகிற, 2024 லோக் சபா தேர்தலில் இதேபோல், பெரும் வெற்றியைப் பெறத் திட்டமிட்டுப் பணியாற்றுவோம். கர்நாடகா தேர்தலுக்காக, தேர்தல் ‘வார் ரூம்’ உருவாக்கி சிறிய குழுவை வைத்து, எட்டு மாதங்கள் உழைப்பில் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறோம்; லோக் சபாவுக்குப் பெரிய அளவிலான குழுவை அமைப்போம்.

இந்தத் தேர்தல் முடிவில் நாம் ஒன்றே ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் மோடி மற்றும் பா.ஜ.க குறித்தான பிம்பம் உடைந்து, சிதைந்துவருகிறது. கர்நாடகா தேர்தலில் காங்கிரஸின் வெற்றி, நாடு முழுவதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் விதை’’ என்றார் விரிவாக.

பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், கர்நாடகா மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியைக் கொண்டாடிவருகின்றனர்.