நேஷனல் ஹெரால்டு நாளிதழை ராகுல், சோனியா காந்திக்குச் சொந்தமான யங் இந்தியா கம்பெனியால் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 8-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராகுல், சோனி இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன் பின்னர் சோனியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தொற்றிலிருந்து குணமடையும் வரை கால அவகாசம் கேட்டிருந்தார் சோனியா. மேலும், ராகுல் காந்தியும் தான் வெளிநாட்டில் இருப்பதால், அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, வருகிற 13-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, காங்கிரஸ் தரப்பிலிருந்து இதற்கு விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய பவன் கேரா, ``காங்கிரஸ் சட்டங்களை மதிக்கிற கட்சி. நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம். எனவே அவர்கள் சம்மன் அனுப்பினால், நிச்சயமாக நாங்கள் செல்வோம். இதில் மறைப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. நாங்கள் அவர்களைப் போல் அல்ல. 2002-லிருந்து 2013 வரை அமித் ஷா ஓடிக்கொண்டிருந்தது எங்களுக்கு நியாபகமிருக்கிறது. சத்தியத்தின் பாதையைப் பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு, அவர்கள் எங்களிடமிருந்து படம் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இன்னும் குணமடையவில்லை என்று கூறப்படும் நிலையில், விசாரணைக்கு அவர் எப்போது ஆஜராவார் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.