Published:Updated:

`இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்!'- கீழடியைப் பார்வையிட்ட வைகோ

கீழடியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைகோ
வைகோ

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய அகழாய்வுப்பணி இன்னும் சில நாள்களில் நிறைவுபெற உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைகோ ஆய்வு
வைகோ ஆய்வு

இந்த நிலையில், 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெறும் இடத்தை தொல்லியல் ஆர்வலர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். மேலும், தி.மு.க தலைவர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மே- 17 இயக்க திருமுருகன் காந்தி, உள்ளிட்டோர் பார்வையிட்டுச் சென்றனர். இன்று அகழாய்வுப் பணிகளை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

"10 ஆண்டுகள்... 1000 வருடங்கள்... 100 இடங்கள்..!" அமர்நாத் ராமகிருஷ்ணா சொல்லும் கீழடி கணக்கு

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``கீழடி கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் மூலம் எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. கீழடி அகழ்வாராய்ச்சிக்காக அரும்பணியாற்றியவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். நெசவுத் தொழில், உருக்குத் தொழில் போன்ற தொழில்கள் இருந்தற்கான சான்றுகளும் இங்கு கிடைத்துள்ளது பெருமைக்குரியது. எனவே, கீழடியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர்
ம.தி.மு.க பொதுச்செயலாளர்

அப்போதுதான் இதை முழுமையாக முன்னெடுக்க முடியும். கீழடியைச் சுற்றியுள்ள 110 ஏக்கரிலும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் மியூசியம் அமைக்க வேண்டும். மேலும் கீழடி போல தாமிரபரணி, காவேரி பூம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். தமிழக தொல்லியல்துறைக்கும், ஆய்வாளர்களுக்கும் பாராட்டுகள். உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே. இதை உலகம் முழுக்க விரைவில் ஒத்துக்கொள்வார்கள்" என்றார்.

வைகோவுடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.