Published:Updated:

`ஒற்றுமையே இந்த கணத்தின் தேவை!' - 11 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதிய பினராயி விஜயன் #CAA

கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த டிசம்பர் 31-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி தீர்மானம் ஒன்றை கேரள சட்டசபையில் நிறைவேற்றினார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ``குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது சமத்துவத்தின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் சமூகத்திலுள்ள பல்வேறு மக்களுக்கும் கவலையை அளித்துள்ளது" என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத 11 மாநிலங்களின் முதல்வர்களுக்கும் `குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்ற நோக்கத்துடன் அவர் இன்று கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

கடிதம்
கடிதம்

அக்கடிதத்தில், ``குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினரிடையேயும் அச்சம் எழுந்துள்ளது. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க நினைக்கும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் அரசியலமைப்பை பாதுகாக்க, எந்தப் பிரிவினராக இருந்தாலும் வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் இணைந்து செயல்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை சோதிக்கும் இந்தக் காலத்தில் நாம் வலிமையாக இருக்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிரான மனநிலை கொண்ட அரசுகளும் இதுமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆதரவாளர்களிடையே இது ஒரு தெளிவை ஏற்படுத்தலாம்" என்று பினராயி விஜயன் எழுதியுள்ளார்.

அதேபோல், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். ட்விட்டரில் ரவிசங்கர் பிரசாத்தை டேக் செய்து அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ள அமரிந்தர் சிங், ``மாநிலத்தின் தலைவராக, அரசியலைப்பின் கீழ் உறுதிமொழி எடுத்துள்ளேன். எனது மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. மத்திய அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புக்குட்பட்டதல்ல என்பதை ஒரு சட்ட அமைச்சராக நீங்கள் அறிவீர்கள்.

வெளிநாட்டவர் நம்நாட்டில் நுழைவதற்கு இந்தச் சட்டத்தை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று நான் கவலைப்படுகிறேன். குறிப்பாக, பஞ்சாப் போன்ற எல்லை மாநிலங்களில் சி.ஏ.ஏ தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலை எங்களுக்கு இருக்கிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். என்ன செய்கிறோம் என்பது பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்குப் புரிகிறதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்தக் கடிதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.