Election bannerElection banner
Published:Updated:

காங்கிரஸ்: `சட்டப்பேரவைத் தலைவர் பதவி எனக்குத்தான்!’ - சத்தியமூர்த்தி பவனில் புதுக்கலகம்?!

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பதவியைத் தனக்குத்தான் கொடுக்க வேண்டும் என சத்திய மூர்த்தி பவனில் கடந்த ஒரு வாரமாக சிலர் போராடிவருவதாகத் தகவல் கிடைத்தது. விசாரணையில் இறங்கினோம்...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து வாக்கு எண்ணிக்கை நாளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் காத்துக்கிடக்கின்றன. 180 இடங்களுக்கும் அதிகமான இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தாங்கள்தான் என்ற நம்பிக்கையில் தி.மு.க தரப்பில் அமைச்சரவை, அதிகாரிகள் உட்பட அனைத்தும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட 132 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது என்கிறாராம் முதல்வர் பழனிசாமி. இதனால், ஆளும்கட்சித் தரப்பிலும் உற்சாகத்தில் இருக்கிறார்களாம். தமிழகத்தின் பிரதான கட்சிகளின் நிலைமை இப்படியிருக்க, பா.ம.க தமிழகத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்றும், மநீம, நாதக உள்ளாட்சித் தேர்தலை நோக்கியும் தங்கள் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றன.

வாக்குப்பெட்டிகள்
வாக்குப்பெட்டிகள்

`2021 அல்ல 2026-தான் நமது இலக்கு, அதற்குள் தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து மிகப்பெரிய இளைஞர் எழுச்சியை ஏற்படுத்தப்போகிறேன்’ என அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் கனவில் இருக்கும் அண்ணாமலை ஒருபக்கம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். மற்றொரு தேசியக் கட்சியான காங்கிரஸிலோ கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் நான்தான் என்ற போட்டியைத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தி வெளியானது. இது குறித்து காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்...

`ஆட்சியில் பங்கு..!’ - விருப்பத்தில் பாஜக., காங்கிரஸ்... அதிமுக., திமுக நிலைப்பாடு என்ன?

``ஆமாம், சத்திய மூர்த்தி பவனில் கடந்த ஒரு வாரமாகவே இந்தப் பிரச்னை பெரிதாகக் கிளப்பப்பட்டுவருகிறது. கடந்த முறை காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக இருந்த கே.ஆர்.ராமசாமி தன்னுடைய கோட்டாவைத் தன் மகனுக்குக் கொடுத்துவிட்டு தேர்தலிலிருந்து ஒதுங்கிவிட்டார். அதனால், தற்போது தேர்தலில் போட்டியிட்ட ஜெ.ஜி.பிரின்ஸ் மற்றும் விஜயதாரணி ஆகியோர் நாங்கள்தான் அடுத்த காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் என்ற போட்டியை தற்போதே தொடங்கிவிட்டனர். `காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே சீனியர் நான்தான். அதனால் இந்த முறை காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவராக எனக்குத்தான் கொடுக்க வேண்டும்’ என இரண்டு தரப்பிலிருந்தும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். `இந்த முறை நிச்சயம் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக காங்கிரஸ் சார்பில் உறுப்பினராக சட்டப்பேரவைக்குச் செல்லவிருக்கிறேன். அதுமட்டுமல்ல, மற்ற வேட்பாளரைவிட வயதிலும் நான்தான் சீனியர்’ என ஜெ.ஜி.பிரின்ஸ் நெருக்கடி கொடுத்துவருகிறார்.

பிரின்ஸ் - விஜயதாரணி
பிரின்ஸ் - விஜயதாரணி

விஜயதாரணியும் `நானும்தான் மூன்றாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெறவிருக்கிறேன். நானும்தான் சீனியர். எனக்குத்தான் அந்தப் பதவி’ என்று பேசியதோடு மட்டுமல்லாமல், ஒருபடி மேலே சென்று டெல்லி தலைமை வரை இந்த முறை காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியைத் தனக்குத்தான் தர வேண்டும் எனக் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார். அதற்காக தினேஷ் குண்டுராவை அடிக்கடி சந்தித்துவருகிறார்” என்கின்றனர்.

``பெட்டிக்குள் இருப்பது என்னவென்றே தெரியாமல் இவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை’’ என்றும், ``குறைந்தபட்சம் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையாவது இவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்’’ என்றும் சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு