Published:Updated:

`அங்கே இயல்பான சூழல் இல்லை!’ - ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி!

கலிலுல்லா.ச

`ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுகிறது என மத்திய அரசு கூறும் நிலையில், தலைவர்களை திருப்பி அனுப்பியது ஏன்?’

 Rahul Gandhi
Rahul Gandhi

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று கூறிவந்த மத்திய அரசு, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதை அமல்படுத்தியது. இதற்கான முன்னேற்பாடாக, அங்கு ராணுவம் குவிக்கபட்டு, அமர்ந்தாத் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டனர். தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டது.

 Rahul Gandhi with opposition leaders
Rahul Gandhi with opposition leaders

இதையடுத்து ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன்பிரதேசமாகவும், லடாக் சட்டபேரவையில்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் அங்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு, அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து அறிந்துகொள்ள, நேரடியாக களத்துக்கே செல்லவேண்டும் என்று எதிர்கட்சிகள் முடிவு செய்தன.

அதனடிப்படையில், ராகுல்காந்தி, திருச்சி சிவா, குலாம் நபி ஆசாத், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, உள்ளிட்ட 12 தலைவர்கள் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச்சென்றனர். ஆனால், அங்கு சென்றவர்களை, `அனுமதிக்கமுடியாது’ என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். முன்னதாக டெல்லி விமானநிலையத்தில் பேசிய தலைவர்கள், `அங்குள்ள நிலையை மதிப்பீடு செய்யத்தான் செல்கிறோமே தவிர, பிரச்னை செய்வதற்காக அல்ல’ என்று தெளிவுபடுத்தியிருந்தனர். தலைவர்கள் திருப்பி அனுப்பட்டதையடுத்து காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுகிறது என மத்திய அரசு கூறும் நிலையில், தலைவர்களை திருப்பி அனுப்பியது ஏன்?’ என்று பதிவிடபட்டுள்ளது.

 Rahul Gandhi with opposition leaders
Rahul Gandhi with opposition leaders

இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ``ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சிலநாள்களுக்கு முன், `ஜம்மு - காஷ்மீருக்கு வந்து பார்வையிடுங்கள்’ என்று என்னிடம் கூறியிருந்தார். அதை ஏற்றுக்கொண்டு தான், நானும் எதிர்கட்சித்தலைவர்களும், ஜம்மு - காஷ்மீருக்கு சென்றோம். ஆனால், நாங்கள் யாரும், வெறும் விமான நிலையத்தை தாண்டி எங்கும் செல்ல அனுமதிக்கபடவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அங்கே மரியாதை இல்லை. அங்கு இயல்பு நிலை இல்லை என்பது மட்டும் உண்மை” என்று கூறியுள்ளார்.