Published:Updated:

`காஷ்மீருக்காக உயிரையும் கொடுப்போம்!’ - மக்களவையில் அமித் ஷா

சத்யா கோபாலன்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இன்று மக்களவையில் தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அமித் ஷா
அமித் ஷா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பெரும்பான்மையான வாக்குகள் பெற்று மாநிலங்களையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

இதையடுத்து, இன்று அதே மசோதாவை மக்களவையிலும் தாக்கல் செய்தார் அமித்ஷா. மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அமித் ஷா. அப்போது காங்கிரஸ் எம்.பி ரஞ்சன் சௌத்ரிக்கும், அமித் ஷாவுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

`` நீங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளைப் பற்றி நினைத்துப் பார்த்தீர்களா எனத் தெரியவில்லை. அனைத்து விதிகளையும் மீறி ஒரே இரவில் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிவிட்டீர்கள். காஷ்மீர் பிரச்னை உள்விவகாரம் என நீங்கள் கூறினீர்கள். ஆனால், 1948-ம் ஆண்டு முதல் இந்த அனைத்துப் பிரச்னைகளையும் ஐ.நா கவனித்துவருகிறது. இதுவா உள்விவகாரம். காஷ்மீர், இரு நாட்டு விவகாரம். எனவே, அதில் தலையிட வேண்டாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் மைக் போம்பேவிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் இன்னும் உள் விவகாரமாக இருக்க வேண்டுமா? அங்கு என்ன நடக்கிறது என்ற முழு விவரங்களை நாங்கள் அறிந்துகொள்ள நினைக்கிறோம்” எனக் கேள்வி எழுப்பினார் சௌத்ரி.

ரஞ்சன் சௌத்ரி
ரஞ்சன் சௌத்ரி

அதற்கு அமித் ஷா, ``ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி. அதுதான் இந்தியா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பு. அதனால் அங்கு சட்டம் இயற்ற அனைத்து அதிகாரங்களும் இந்திய நாடாளுமன்றத்துக்கு உள்ளது” எனப் பதிலளித்தார்.

`` அப்படியானால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உங்கள் நிலை என்ன? “ என்ற கேள்விக்கு, `` நான் சொல்லும்போது ஜம்மு-காஷ்மீர் என்றுதான் கூறினேன். அதனுள்ளேயே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், சீன ஆக்கிரமிப்பு பகுதி போன்ற அனைத்துமே வந்துவிடும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீங்கள் இந்தியாவின் பகுதியாகக் கருத்தில் கொள்ள மாட்டீர்களா?” எனப் பதில் கேள்வி கேட்டார்.

அமித்ஷா
அமித்ஷா

தொடர்ந்து சௌத்ரி, ``அந்தப் பகுதிகளை நீங்கள் எப்போது ஆக்கிரமிப்பு செய்வீர்கள்” எனக் கேட்டார். ``விரைவில் ஆக்கிரமிப்பு செய்வோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை உயிரைக் கொடுத்தாவது மீட்டுக்கொண்டு வருவோம்” என ஆக்ரோஷமாகப் பேசினார்.

இதையடுத்து, தி.மு.க எம்.பி டி.ஆர் பாலு மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், `` ஒரு மசோதா நிறைவேற்ற வேண்டுமென்றால் முதலில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், அதன் பின்னரே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் மசோதா இங்கு தாக்கல் செய்யப்படும் முன்னரே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

ஒரு மாநிலத்தைப் பிரித்து நகராட்சி போன்று ஆக்கியுள்ளீர்கள். தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளீர்கள். இனிமேல் பா.ஜ.க எம்.பி-க்கள் எங்களுக்கு இனிய எதிரிகள்” என விமர்சித்தார்

`` காஷ்மீரைச் சேர்ந்த எம்.பி ஃபரூக் அப்துல்லா இன்று நாடாளுமன்றத்தில் இல்லை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் மசோதா தாக்கல் தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற சபாநாயகரான நீங்கள்தான் அனைத்து உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டும். கொஞ்சமாவது நடுநிலைத் தன்மையுடன் செயல்படுங்கள்” எனக் கொந்தளித்தார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்.