Published:Updated:

"இது பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல; நீதி கேட்டு மக்கள் மன்றத்துக்குச் செல்வோம்!" - ஓபிஎஸ்

ஓ.பி.எஸ்.

``இந்தத் தீர்ப்பு வந்ததற்குப் பின்னால்தான் எங்கள் தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியோடு இருக்கிறார்கள். தி.மு.க-வின் ஏ டு இசட் டீம் அவங்கதான்." - ஓ.பன்னீர்செல்வம்

Published:Updated:

"இது பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல; நீதி கேட்டு மக்கள் மன்றத்துக்குச் செல்வோம்!" - ஓபிஎஸ்

``இந்தத் தீர்ப்பு வந்ததற்குப் பின்னால்தான் எங்கள் தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியோடு இருக்கிறார்கள். தி.மு.க-வின் ஏ டு இசட் டீம் அவங்கதான்." - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ்.

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இறுதியில், ஓ.பி.எஸ் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்.

இந்த நிலையில் தாங்கள் மக்களிடம் சென்று நீதி கேட்கப்போவதாக ஓ.பி.எஸ் இன்று தெரிவித்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., ``நாங்கள் மக்களை நாடிச் செல்கின்ற நிலையில் இருக்கிறோம். உறுதியாக மக்களிடம் நீதி கேட்போம். மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம்.

எம்.ஜி.ஆரும், அம்மாவும் 50 ஆண்டுக்காலம் தங்கள் உயிரைக் கொடுத்து இந்த இயக்கத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய, கடைப்பிடித்த சட்ட விதிகளைத்தான் நாங்கள் காப்பாற்றுவதற்கு இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கிறோம். அம்மா காலமானதற்குப் பிறகு, அவர்தான் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாங்கள் மானசீகமாகத் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது. யாருக்குமே கிடையாது.

ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்.

எப்படி கூவத்தூரில் நடந்ததோ, அதேபோல இந்தக் கட்சியைக் கைப்பற்றி கைக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இது ஓ.பி.எஸ் தாத்தா மாடசாமி தேவர் ஆரம்பித்த கட்சி அல்ல, பழனிசாமியுடைய தாத்தா ஆரம்பித்த கட்சியும் அல்ல, தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் நாங்கள் இன்றைக்கு தர்மயுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இதற்கு விடிவு வரும் வரை, நல்ல தீர்ப்பு வரும் வரை நாங்கள் போராடினோம்... போராடுவோம்.

இன்றைக்கு மக்கள் மன்றத்தை நாடிச் செல்வதற்கு எங்கள் படை தயாராகப் புறப்பட்டுவிட்டது. உறுதியாக மக்களிடத்தில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும். எந்தத் தீர்ப்பும் எங்களுக்குப் பின்னடைவு இல்லை. இந்தத் தீர்ப்பு வந்ததற்குப் பின்னால்தான் எங்கள் தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியோடு இருக்கிறார்கள். தி.மு.க-வின் ஏ டு இசட் டீம் அவர்கள்தான். எங்களை நோக்கி ஏதாவது தப்பு சொல்ல முடியுமா... அவர்கள் பக்கம் ஆயிரம் இருக்கின்றன... அது இனிமேல் ஒவ்வொன்றாக வெளியில் வரும். கட்சியினுடைய கட்டுப்பாடு கருதி கட்சி உடையக் கூடாது என்று நாங்கள் இதுவரையில் பொறுமை காத்திருந்தோம்.

ஓ.பி.எஸ்.
ஓ.பி.எஸ்.

இன்றைக்கு அவர் சொல்கிறார் சின்னம்மாவையும், பன்னீர்செல்வத்தையும், டி.டி.வி-யையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் சேர்க்க மாட்டேன் என்று. இவர் ஆரம்பித்த கட்சியா இந்தக் கட்சி, இல்லை இவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா... இவர் சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. ஆணவத்தின் உச்ச நிலையில் சொல்லுகிறார். அந்த ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அ.தி.மு.க-வின் தொண்டர்களிடம் இருக்கிறது, மக்களிடம் இருக்கிறது. அது நிரூபணமாகப் போகிறது என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கப் போகிறீர்கள்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ``தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டது போல் இருக்கிறது. தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை நேற்றைய தீர்ப்பில் தீர்க்காமல் கைவிடப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் கையொப்பமின்றி பொதுக்குழு கூட்டியது தவறு என்பதே எங்களது வாதம். எதை முன்னால் தீர்மானிக்க வேண்டுமோ, அதைத் தீர்மானிக்காமல் தீர்மானம் குறித்து கூறாமல், பொதுக்குழு கூட்டியது சரி என்று சொல்லியிருக்கின்றனர். ஒருவேளை வாதங்களை முன்வைப்பதில் எங்களுக்கு திறமையில்லையோ என்று தோன்றுகிறது... நியாயம், தர்மம் எங்களிடம் இருக்கிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி ராமச்சந்திரன்

மீண்டும் வழக்கறிஞர்கள் இவற்றை சுட்டிக்காட்டி நல்ல தீர்ப்பைப் பெறுவார்கள். பொதுக்குழுவை யார் கையொப்பமிட்டு கூட்டினார்கள் என்பதைப் பொறுத்துதான், பொதுக்குழு கூட்டியது சரியானதா என்று தீர்மானிக்க வேண்டும். ஐந்து நாள்கள் எங்களது வாதங்களைக் கேட்டபிறகும் எதைத் தீர்மானிக்க வேண்டுமோ அதைத் தீர்மானிக்காமல் இருந்திருக்கின்றனர்" என்றார்.

மனோஜ் பாண்டியன் பேசுகையில், ``பன்னீர்செல்வம் அனுமதி பெற்று சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம். எங்கள் வழக்கு ஒன்றே ஒன்றுதான், அது இருவரும் கையொப்பமிட்டு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதே. தீர்மானத்துக்குள் நாங்கள் செல்லவில்லை, பொதுக்குழு குறித்த வழக்கின் முதல் சுற்று முடிந்துவிட்டது.

மனோஜ் பாண்டியன்
மனோஜ் பாண்டியன்

இனி தீர்மானம் குறித்து இரண்டாவது சுற்றில் அடியெடுத்து வைப்போம். ஓர் அடிகூட எடப்பாடி தரப்பு முன்னேறவில்லை. தேர்தல் ஆணையத்தில் தற்போதும் ஒருங்கிணைப்பாளர் என்றே இருக்கிறது. நேற்றைய தீர்ப்பு இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

வைத்திலிங்கம் பேசுகையில், ``நாங்கள் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்பவர்கள் அரசியல் அரைவேக்காடுகள், அவர்கள் பைத்தியங்கள்" என்றார் காட்டமாக.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இறுதியாக வழக்கறிஞர் திருமாறன் பேசுகையில், ``தீர்மானம் நிறைவேற்ற மட்டும் பொதுக்குழுவை கூட்டமாட்டார்கள். கட்சி நடவடிக்கைக்காகவும் கூட்டுவார்கள். தீர்மானங்கள் செல்லும் என்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 35, 38-வது பகுதி இடம்பெற்றிருக்க வேண்டிய அவசியமே இல்லாமலே போயிருக்கும். அந்த இரு பகுதியிலும் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. தீர்மானங்கள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்பது அதில் தெளிவாக இருக்கிறது" என்றார்.