Election bannerElection banner
Published:Updated:

அ.ம.மு.க தலைமையை ஏற்றால் மட்டுமே கூட்டணி - டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

`தி.மு.க-வை எதிர்க்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும், அ.ம.மு.க தலைமையை ஏற்றால் அவர்களுடன் கூட்டணி வைத்து, தேர்தலைச் சந்திக்கத் தயார்’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க இணைய வாய்ப்பிருப்பதாக, தகவல் வெளியான நிலையில், தியாகராயநகரிலுள்ள இல்லத்தில் சசிகலாவைச் சந்தித்த பிறகு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``அ.தி.மு.க-வுடன் அ.ம.மு.க தேர்தல் கூட்டணி சேர்வது போன்ற தகவல்களை நான் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும்தான் பார்க்கிறேன். இது முற்றிலும் யூகத்தின் அடிப்படையிலான தகவல். இப்படித் தகவல்கள் வெளிவருவதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அ.ம.மு.க-வின் தலைமையில் கூட்டணி அமைத்து தி.மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம்." என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

மேலும், ``சில முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. கூட்டணி இறுதியானதும் தங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிப்பேன். மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் எங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், அ.தி.மு.க-வின் செயல்பாடுகள் குறித்தும் முன்பு எப்படிப் பேசிவந்தேனோ, இப்போதும் அப்படியே தான் பேசிவருகிறேன’’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ``தேர்தல் நெருங்கி வருகிறது. எங்களுடைய ஒரே இலக்கு தி.மு.க-வை ஆட்சியில் அமரவிடக் கூடாது என்பதுதான். அதற்கான முயற்சியில்தான் நான் ஈடுபட்டுவருகிறேன். இந்தக் கட்சியுடன் கூட்டணி கூடாது, அந்தக் கட்சியுடன் கூட்டணி கூடாது என்றெல்லாம் இல்லை. தி.மு.க-வை எதிர்க்கிற அத்தனைக் கட்சிகளும் அ.ம.மு.க தலைமையில் கூட்டணிக்கு வந்தால் அவர்களோடு தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

மேலும், ``தி.மு.க-வை எதிர்க்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அ.ம.மு.க தலைமையை ஏற்றால் அவர்களுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்கத் தயார். இந்தத் தேர்தலில் சசிகலாவின் பங்கு என்ன என்பதை அவரே தெரிவிப்பார்" என்று பேசினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு