Published:Updated:

`சரத் பவார் மற்றும் ஆளுநரை சந்தித்த சிவசேனா!’ - மகாராஷ்டிரா முதல்வர் ரேஸில் முந்துவது யார்?

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கு யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் இருப்பதால் அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

மகாராஷ்டிரா கூட்டணி
மகாராஷ்டிரா கூட்டணி ( Twitter/@Dev_Fadnavis )

இந்த வருடம் நடந்த 17-வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போதே மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி வைப்பதாகப் பேசப்பட்டு அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அதன்படி, `மகாராஷ்டிராவில் பா.ஜ.க- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும்’ என்பதுதான் அவர்களுக்குள் போடப்பட்ட ஒப்பந்தம்.

மகாராஷ்டிரா கூட்டணி
மகாராஷ்டிரா கூட்டணி
Twitter/@Dev_Fadnavis

இதையடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்ததைப் போலவே பா.ஜ.க - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆன நிலையில், இன்னும் அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. முன்னதாக செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மகாராஷ்டிராவின் இரண்டரை ஆண்டுக்கால ஆட்சி எங்களுக்கு வேண்டும் எனக் கேட்கிறது சிவசேனா. ஆனால் ஒப்பந்தத்தை மீறி, துணை முதல்வர் பதவி வேண்டுமானால் சிவசேனாவுக்கு அளிக்கிறோம் ஐந்து ஆண்டுக்கால ஆட்சியை விட்டுக்கொடுக்க முடியாது என முரண்டு பிடிக்கிறது பா.ஜ.க.

``அமித்ஷாவின் வாக்குறுதி... சிவசேனாவின் ஷாக்!” மகாராஷ்டிரா மல்லுக்கட்டு

தன் மகனை எப்படியாவது முதல்வர் அரியாசனத்தில் அமரவைக்க வேண்டும் என்ற ஆசையில் பா.ஜ.க-வின் கோரிக்கையை ஏற்க மறுத்து முதல்வர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. ஆட்சியமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளதால் அங்கு கூட்டணிக்குள் தொடர்ந்து விரிசல் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா கூட்டணி
மகாராஷ்டிரா கூட்டணி
Twitter/@Dev_Fadnavis

இந்த நிலையில், நேற்று சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் மற்றும் சில எம்.பி-க்கள் இணைந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இது மகாராஷ்டிரா உட்படத் தேசிய அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது. பா.ஜ.க ஆட்சியமைக்க ஒத்துக்கொள்ளாத நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவுக்கு சிவசேனா வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கடைசியாக பி.ஜே.பி முன்வைத்துள்ள 3 சான்ஸ்!- செவிசாய்க்குமா சிவசேனா?

சரத்பவாரை சந்தித்தப் பிறகு பேசிய சஞ்சய் ராவத், ``சரத்பவாருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே. நான் அவரை சந்திப்பது மிகவும் சாதாரண நிகழ்வு, எங்களுக்குளான சந்திப்பு அடிக்கடி நடைபெறுவதுதான். தற்போது மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து நாங்கள் பேசினோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், `நான் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பேன். ஆனால், நம் கட்சிக்கான முதல்வர் பதவியை மட்டும் விட்டுக்கொடுக்க முடியாது' என்று உத்தவ் தாக்கரே தன் கட்சியினரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உத்தவ் - ஆதித்ய தாக்கரே
உத்தவ் - ஆதித்ய தாக்கரே
Twitter/@AUThackeray

கூட்டணிக்குள் தினமும் அதிகரித்து வரும் மோதலால் அங்கு அரசியல் பிரச்னை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஆளுநரைச் சந்தித்த உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே பேசும்போது, ``மகாராஷ்டிராவில் அரசு அமைவது பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. அதைப் பற்றி உத்தவ் தாக்கரே கூறுவார், அவரின் முடிவே இறுதியானது அதை நாங்கள் பின்பற்றுவோம். சமீபத்தில் பெய்த மழையால் விவசாயிகளும், மீனவர்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என எங்கள் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கவே ஆளுநரைச் சந்தித்தோம்” என்று பேசியுள்ளார்.